மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

சுல்தான் 5 நாட்களில் ரூ.30 கோடி வசூல்!

சுல்தான் 5 நாட்களில் ரூ.30 கோடி வசூல்!

கார்த்தி நாயகனாக நடித்த சுல்தான் திரைப்படம் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியானது.

தமிழ்நாடு,கேரள சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டிய நாள். எல்லோரது கவனமும் தேர்தல் மீது இருந்தது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற வதந்தி, கொரோனா தொற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில்தான் திரையரங்குகளில் சுல்தான் வெளியானது .

இளைஞர்கள், ரசிகர்கள் மட்டுமே பார்த்த படம் தற்போது குடும்பங்கள் வந்து பார்க்கும் படமாக மாறியிருக்கிறது என்பதுடன் ஐந்து நாட்களில் திரையரங்குகள் மூலம் தமிழ்நாட்டில் 19 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. தமிழகத்தைக் காட்டிலும் கொரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநிலம் கேரளா. அங்கு ஐந்து நாட்களில் 1.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

தெலுங்கு படமாகவே வெளியிடப்பட்ட ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் 5 கோடி ரூபாயும், கர்நாடகாவில் ஒரு கோடி ரூபாயும் மொத்த வசூல் செய்திருக்கிறது சுல்தான் என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு.

தேர்தல் நேரம், கொரோனா பயமுறுத்தல் இந்த சூழ்நிலையில் ஓடிடியில் படத்தை நேரடி வெளியீட்டுக்குக் கொடுக்க சம்மதித்திருந்தால், லாபத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்காது என்றார் எஸ்.ஆர்.பிரபு. இந்த மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள நேற்று பகல் 12 மணிக்குச் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கதாநாயகி மற்றும் நெப்போலியன் தவிர்த்து படத்தில் நடித்துள்ள, பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு. எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் துறைக்கும் சிறப்பான படம் ‘சுல்தான்’. திரைத்துறையை மட்டுமே நம்பி இருப்பவர்கள் மிகுந்த மன உளைச்சலிலிருந்தார்கள். நாங்களும் இடையில் ஓடிடிக்கு போகலாம் என்று நினைத்தோம். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால், இப்படம் திரையரங்கிற்கான படம் என்பதால் பிடிவாதமாகத் திரையரங்கிற்கே கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

எங்களைப் போலவே படம் எடுத்துவிட்டு வெளியிடக் காத்திருந்தவர்கள், உங்கள் படத்தின் வரவேற்பைப் பார்த்துவிட்டுத் தான் நாங்கள் எங்கள் படங்களை வெளியிடுவோம் என்று கூறினார்கள். அவர்களின் நம்பிக்கைக்காகவும் இப்படத்தைத் திரையரங்கில் வெளியிட்டோம். இதற்கு எல்லாவகையிலும் உதவிக்கரமாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்து உதவியவர்கள் கார்த்தி,சூர்யா இருவரும் என்றார்.

மேலும், பெரும்பான்மை விமர்சனங்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனாலும், ஒருசில எதிர்மறையான விமர்சனங்களும் இருந்தது. அதுவே இந்த படம் வெற்றிப்படமாகக் காரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல என்று குறிப்பிட்டார் பிரபு,

படத்தின் கதாநாயகன் கார்த்தி கூறுகையில், “இப்படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையைக் கேட்டபோது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாட்கள். என்னைப் பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போலத் தோன்றியது அதனாலேயே இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இன்றைக்குப் படத்தின் வசூல் தகவல்களைக் கேட்கிறபோது சரியான திரைக்கதையைத் தான் நாம் தேர்ந்தெடுத்து, படம் பார்க்கும் ரசிகனுக்கான படத்தில் நாம் நடிக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டிருக்கிறது” என்றார்

இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வியாழன் 8 ஏப் 2021