மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

ஐபிஎல் திட்டமிட்டப்படி நடக்குமா?

ஐபிஎல்  திட்டமிட்டப்படி நடக்குமா?

கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரத்தால் நாளை (ஏப்ரல் 9) நடைபெறவிருக்கும் ஐபிஎல் திட்டமிட்டப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.

14ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை (ஏப்ரல் 9) முதல் மே 30ஆம் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக எட்டு அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

சென்னையில் நாளை நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டேனியல் சாம்ஸுக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. ஆனால், அவருக்கு அறிகுறி ஏதுமில்லை. மருத்துவ வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் படிக்கல், டெல்லி அணியின் அக்சார் பட்டேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திரும்பியுள்ளார். இதேபோல் மும்பை அணியில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் பத்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சிக்கல் எழுந்தது. பாதுகாப்பு வளையத்தில் இருந்தபோதே வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்தப் போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

தற்போது கட்டுப்பாடுகளுடன் மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்த மராட்டிய மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. “கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” என்று மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் கூறியுள்ளார்

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, “ஐபிஎல் திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரத்தால் ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது. அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும். ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வியாழன் 8 ஏப் 2021