மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

தமிழகக் கலைஞர்களின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு!

தமிழகக் கலைஞர்களின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு!

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.

இந்தச் சூழலில் தமிழகக் கலைஞர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2020 ஜூலை 17ஆம் தேதி, தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என்று புகழப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் 78ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்த்திரை உலகத்திலிருந்து தேசிய விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்குக் கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பினர்.

அதில், “பெருமைமிகு தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், படத் தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகிய நாங்கள் உங்களுடைய உடனடி பரிசீலனையை வேண்டி இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

தென்னிந்தியாவின் ‘இயக்குநர் இமயம்’, தயாரிப்பாளர், பத்மஸ்ரீ பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். கடந்த 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர்.

1977 முதல் 2019 வரை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம், தீண்டாமை, சாதிய மோதல்கள், பெண் சிசுக்கொலை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் படங்களை இயக்கியவர் பாரதிராஜா.

மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகள், சமூக விழுமியங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் படங்களையும், மனித உறவுகளை மகிமைப்படுத்தும் படங்களையும் இயக்கி, தென்னிந்தியாவின் தனிப் பெரும் இயக்குநராக விளங்குகிறார். படைப்பாளிகளுக்கு உத்வேகமூட்டும் சக்தியாகவும் திகழ்கிறார்.

சிவாஜி கணேசன், ராஜேஷ் கன்னா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, அமோல் பலேகர், நானா படேகர், சன்னி தியோல், சுஹாசினி மணிரத்னம், பூனம் தில்லான், ராதிகா சரத்குமார், விஜயசாந்தி, ரதி அக்னிஹோத்ரி, ரேவதி, ஜெயசுதா உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர்.

தமிழ்த் திரைத்துறையை முதன்முதலாகக் கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர் அவர்தான். உண்மையாக மக்கள் வாழும் பகுதிகளில் திரைப்படங்களைப் படமாக்கியதன் மூலம் புதிய புரட்சியை உருவாக்கியவர்.

அவரது வருகையும், அவரால் உருவாக்கப்பட்ட புதிய அலையும் பல புதிய திறமைசாலிகளை இந்திய சினிமாவுக்குக் கொண்டு வந்தன. கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

புகழ்பெற்ற பாடலாசிரியரும் ஏழு முறை தேசிய விருது பெற்றவருமான கவிப்பேரரசு வைரமுத்துவை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். 50-க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்.

பாரதிராஜா தன்னுடைய திரைப்படங்களுக்காக இந்திய அரசிடமிருந்து ஆறு முறை தேசிய விருதை வென்றுள்ளார். 2017ஆம் ஆண்டின் தேசிய விருதுகள் நடுவர் குழுவின் தலைவராகச் செயல்பட்டார். ஆறு முறை தமிழக அரசின் விருதை வென்றுள்ளார். அவர் இயக்கிய தெலுங்குப் படத்துக்காக ஆந்திரப்பிரதேச மாநில அரசின் பெருமைக்குரிய நந்தி விருதை வென்றார். 2004ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய பத்மஸ்ரீ விருதை வழங்கி இந்திய அரசு அவரைக் கௌரவித்தது.

மேலே உள்ள பட்டியலில் இடம்பெற்றவை, இந்த மாபெரும் திரை இயக்குநரின் சில சாதனைகள் மட்டுமே. தன் திரைப்படங்கள் மூலம், அவர் தொடர்ந்து புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு உந்துதலாகத் திகழ்கிறார். ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார்.

எனவே, இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான பெருமதிப்புக்குரிய “தாதா சாகேப் பால்கே” விருதை பாரதிராஜாவுக்கு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம்” என்று வலியுறுத்தியிருந்தனர்

கமல்ஹாசன், வைரமுத்து, தனுஷ், பீ.லெனின், ஆர்.பார்த்திபன் என 36 தமிழகக் கலைஞர்கள் கையொப்பமிட்ட கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஒருவருக்கு விருது கொடுக்கப் பரிந்துரைத்துக் கடிதம் கொடுத்திருப்பது இதுவே முதன்முறை.

இந்த நிலையில், இவ்வளவு பேரின் கோரிக்கையை நிராகரித்து ரஜினிகாந்த்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது, அதுவும் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் சூழலில் அறிவித்திருப்பது

பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

-இராமானுஜம்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

வெள்ளி 2 ஏப் 2021