{பெரியளவில் ரிலீஸாகும் சுல்தான் பட கள நிலவரம்!

entertainment

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்குப் பெரிதளவில் வரவேற்பு கிடைப்பதில்லை. யார் ஹீரோ, என்ன பட்ஜெட் என்பதைப் பொருத்தே படத்தின் மீதான மக்கள் வரவேற்பும் அமைந்துவிட்டது.

கொரோனா அலைக்கு முன்பாக, சென்ற வருடம் 2020 மார்ச் 13ஆம் தேதி திரையரங்கில் இறுதியாக அசுரகுரு, தாராள பிரபு மற்றும் வால்டர் படங்கள் வெளியானது. அதன்பிறகு லாக்டவுன் வந்த போது, திரையரங்குக்கு இப்படியான இருண்ட சூழல் நிலவும் என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்ததும் திரையரங்குகள் 50% இருக்கை தளர்வுடன் திறக்கப்பட்டது.

சின்னச் சின்னப் பட்ஜெட் படங்களே வெளியானதால் திரையரங்கில் பெரிதளவில் ரெஸ்பான்ஸ் இல்லாத சூழலில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி விஜய் நடித்த மாஸ்டரும், ஜனவரி 14ஆம் தேதி சிம்பு நடித்த ஈஸ்வரனும் வெளியாகி திரையரங்கை இயல்பு நிலைக்கு திருப்பின. அதன்பிறகு, கபடதாரி, களத்தில் சந்திப்போம், பாரிஸ் ஜெயராஜ், சக்ரா, கமலி, சங்கத்தலைவன், அன்பிற்கினியாள் உள்ளிட்ட சின்ன பட்ஜெட் படங்களே வெளியாகின.

இந்நிலையில், மாஸ்டருக்குப் பிறகு பெரிய பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் படம் கார்த்தி நடிப்பில் ‘சுல்தான்’. ரெமோ இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் லால், ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக் – மெர்வின் இசையமைக்க, யுவன் பின்னணி இசையைக் கோர்த்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அதிகரித்துவரும் கொரோனா அச்சுறுத்தல் ஒரு பக்கமென்றால், பரபர தேர்தல் சூடு இன்னொரு பக்கமென இருந்தாலும் அசால்டாக படத்தை துணிந்து ரிலீஸ் செய்கிறார்கள். அதற்குக் காரணமும் இருக்கிறது. ஏற்கெனவே கார்த்திக்கு கைதி படம் பெரியளவில் வசூல் சாதனையை கொடுத்திருக்கிறது. அதனால், சுல்தான் படத்திற்கு நிலவும் எதிர்பார்ப்பே படத்தை ரிலீஸ் செய்ய காரணம். அதோடு, தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படம் வெளியாவதால் நிச்சயம் வசூலில் சிக்கல் இருக்காது என்றே கணிக்கிறதாம் படக்குழு.

சுல்தான் படத்தின் மொத்த பட்ஜெட் 55 கோடி என்று சொல்லப்படுகிறது. கார்த்தியின் சம்பளம் 15 கோடி எனவும், இயக்குநர் பாக்கியராஜ் சம்பளம் 1.5 கோடி என்றும் சொல்கிறார்கள். தெலுங்கில் டப்பிங் ரைட்ஸ், திரையரங்க ரிலீஸ், சாட்டிலைட் உரிமை என மொத்தமாக 16 – 18 கோடி வரை விற்பனையானதாகச் சொல்கிறார்கள். அதுபோல, தமிழில் நேரடியாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமே வெளியிடுகிறது. இதனால், தமிழில் திரையரங்க வசூல் 18- 20 கோடி வருமென எதிர்பார்க்கிறது தயாரிப்புத் தரப்பு.

தயாரிப்பு தரப்பில் ரிலீஸூக்கு முன்பே நல்ல விலைக்கு படத்தை பிஸ்னஸ் செய்துவிட்டதாகவேச் சொல்கிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் ரெஸ்பான்ஸ் என்று பார்த்தால், தமிழை விட தெலுங்கில் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு, வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் எழுந்தால் மட்டுமே, முதல் இரண்டு நாட்களைத் தாண்டி அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ச்சியாக கலெக்‌ஷன் அதிகரிக்கும். அப்படி அதிகரித்தாலே மாஸ்டர் போல இந்தப்படம் பெரியளவில் வசூலுடனான வெற்றியைப் பெறும் என்று கணிக்கிறார்கள். இல்லையென்றால், போட்டப் பணத்துக்கு கையைக் கடிக்காத வசூலைத் தரும்.

சுல்தான் நாளை ரிலீஸ்…பார்க்கலாம்!

**- தீரன்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *