நான்காவது பாடலுடன் ‘கர்ணனின் யுத்தம்’ துவங்கியது !

entertainment

தமிழ் சினிமாவுக்கு பரபரப்பான தினமின்று. இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்துமுடிந்திருக்கிறது. ஒன்று, விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘விஜய் 65’ படமானது பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இரண்டாவது, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது.

பரியேறும் பெருமாள் கொடுத்த மாரி செல்வராஜின் அடுத்தப் படைப்பு ‘கர்ணன்’. தனுஷ், ரஜிஸா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். திரைப்படத்தின் உணர்வைக் கடத்துவதற்காக பாரம்பரிய இசையுடன் படத்தின் இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில், ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் நாய���னின்றி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவர் கலந்துகொள்ளாவிட்டாலும் அனைவரையும் வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசை வெளியீட்டுவிழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன், ரெஜிஸா விஜயன், யோகிபாபு, பாடகி தீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தனுஷை மிஸ் செய்வதாக படக்குழுவினர் கூறினர். அரை மணிநேரம் கதை சொன்னதை வைத்தே படத்தை ஒப்புக் கொண்டார் தனுஷ் என புகழாரம் சூட்டினார் மாரி செல்வராஜ். படக்குழுவினர் அனைவருமே இந்தப் படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து, இந்தப் படத்திலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நான்காவது பாடல் வீடியோவும் வெளியானது.

பாடல் 01 : கர்ணன் அழைப்பு

இந்தப் படம் குறித்த பெரும் எதிர்பார்ப்புக்குக் காரணம், முதல் சிங்கிளாக வெளியான கண்டா வரச்சொல்லுங்க பாடல் தான். இப்பாடலை சந்தோஷ் நாராயணனுடன் நாட்டுப்புற பாடகி மாரியம்மாள் இணைந்துப் பாடியிருப்பார். இப்பாடலை மாரி செல்வராஜ் எழுதியிருந்தார்.

பாடல் 02 : மஞ்சனத்திப் புராணம்

இரண்டாவது சிங்கிளாக பண்டாரத்தி புராணம் பாடல் வெளியானது. தேவா குரலில் யுகபாரதி எழுத்தில் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இப்பாடல் அமைந்தது. ஆனால், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு செய்வதுபோல பாடலின் பெயர் அமைந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்ததால், பண்டாரத்திப் புராணமானது மஞ்சனத்திப் புராணமாக மாறியது. பழைய பாடலை நீக்கிவிட்டு, மஞ்சனத்திப் புராணம் எனும் வார்த்தைகளோடு புதிய பாடல் திரைப்படத்தில் இடம் பெற இருக்கிறது.

பாடல் 03: திரெளபதையின் முத்தம்

வழக்கமான திரையிசைப் பாடல்களாக இல்லாமல், ஒவ்வொரு பாடல்களிலுமே புதுமையை புகுத்திவரும் சந்தோஷ் நாராயணனின் இசையில் மூன்றாவது சிங்கிளாக ‘தட்டான் தட்டான்’ பாடல் வெளியானது. தனுஷ் குரலில் உருவான ரொமாண்டிக் பாடல். தனுஷூடன் மீனாட்சி இளையராஜா எனும் பாடகியும் இணைந்து பாடியிருக்கிறார். யுகபாரதியின் வரிகளில் பாடல்கள் உருவாகியிருக்கிறது.

பாடல் 04 : கர்ணனின் யுத்தம்

படத்திலிருந்து நான்காவது சிங்கிளாக மாரி செல்வராஜ் வரிகளில் பாடகி தீ குரலில் வெளியாகியிருக்கும் பாடல் ‘உட்றாதீங்க எப்போவ்’. இந்தப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனால், முந்தைய மூன்று பாடல்களிலிருந்து கொஞ்சம் தனித்துத் தெரிகிறது. புரோமோஷனுக்காக உருவான பாடலாகக் கூட இருக்கலாம். படத்தில் இடம் பெறுமா என்பது தெரியவில்லை. சமீபத்தில் தீ குரலில் வெளியான எஞ்சாய் எஞ்சாமி பாடல் உலகளவில் வைரலானது. இந்நிலையில், தீ குரலில் இப்பாடல் உருவாகியிருப்பது படத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கர்ணன் திரைப்படமானது வருகிற ஏப்ரல் 09ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அதோடு, படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 38 நிமிடங்கள் என்று சொல்லப்படுகிறது. கர்ணனின் யுத்தம் துவங்கட்டும்!

**- ஆதினி**

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *