மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

பண்டாரத்திக்கு எதிர்ப்பு :பாடலையே மாற்றிய படக்குழு!

பண்டாரத்திக்கு எதிர்ப்பு :பாடலையே மாற்றிய படக்குழு!

தமிழ் சினிமாவின் முக்கிய இளம் தலைமுறை இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க ‘கர்ணன்’ படத்தை இயக்கிவருகிறார். தனுஷூடன் ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து மூன்று பாடல்களும், கடந்த 23ஆம் தேதி படத்தின் டீஸரும் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் ‘பண்டாரத்தி புராணம்’. தேவா குரலில் யுகபாரதி எழுத்தில் இந்தப் பாடல் வெளியானது. நாட்டுப்புற பாடலுக்கு தேவாவின் தேவகுரலாகவே ரசிகர்கள் மனதை ஆர்ப்பரித்தது. இந்தப் பாடல் வெளியான உடனேயே சர்ச்சையும் எழுந்தது. பண்டாரத்தி எனும் வார்த்தையில் துவங்குகிற இப்பாடல் நீக்கப்பட வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என வீரசைவ குலத்தைச் சேர்ந்தவர்களை அழைப்பார்களாம். இவர்கள் கோவில்களில் பூ அலங்காரம் செய்பவர்களாக பணியாற்றுகிறார்கள். அந்த சமூகத்தை காயப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் அமைந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து, படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், பட தயாரிப்பாலர் கலைப்புலி தாணுவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்நிலையில், பண்டாரத்தி எனும் பாடலின் பெயரை மாற்றியுள்ளது படக்குழு.

அதாவது, பண்டாரத்தி புராணம் எனும் பாடலை மஞ்சனத்திப் புரானம் என மாற்றியிருக்கிறது படக்குழு. படத்தில் மஞ்சனத்தி என பாடல் இடம் பெறுகிறதாம். அதோடு, ஒன்றிரண்டு நாட்களில் யூடியூப்பிலும் பாடல் பெயர் மாற்றப்படும் என்றும் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

அதோடு, படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். “ கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன ... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்... காதலே பிரபஞ்ச மாடத்தின வெளிச்சம்” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே, கர்ணன் என படத்தின் பெயர் அறிவித்த நேரத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான கர்ணன் படத்தினை காயப்படுத்தும் விதமாக இது அமைந்திருப்பதாக சிவாஜி ரசிகர்கள் மன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பிறகு, ‘தனுஷ் கர்ணன்’ என படத்தின் பெயர் மாற்றப்பட்டு, பேச்சுவார்த்தையும் நடத்தி பிரச்னையை சரி செய்தனர். இந்நிலையில், பாடலின் பெயருக்கே சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.கர்ணன் திரைப்படமானது வருகிற ஏப்ரல் 09ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வியாழன் 25 மா 2021