மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

முதல் ஒருநாள் போட்டி: 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

முதல் ஒருநாள் போட்டி: 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று (மார்ச் 23) பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய அணியின் ஸ்கோர் 15.1 ஓவரில் 64 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 42 பந்தில் 28 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து தவானுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். அரை சதம் அடித்த விராட் கோலி 60 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 34.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு தவானுடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். தவான் சிறப்பாக விளையாடி சதம் நோக்கி சென்றார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 98 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 106 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சர் விளாசினார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 38.1 ஓவரில் 197 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அரை சதம் விளாசினார். அதேபோல், அறிமுக வீரராக களம் இறங்கிய க்ருணால் பாண்டியாவும் அரை சதம் அடித்தார். இறுதி கட்டத்தில் இவ்விருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் 43 பந்துகளில் 62 ரன்களுடனும், க்ருணால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் எட்டு ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளும், மார்க் வுட் 10 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

ஜேசன் ராய் - பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பேர்ஸ்டோவ் 40 பந்தில் அரை சதம் அடித்தார். மறுமுனையில் ஜேசன் ராய் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜேசன் ராய் - பேர்ஸ்டோவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 135 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார்.

இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடினார். அவர் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 66 பந்தில் 6 பவுண்டரி, 7 சிக்சருடன் அந்த ரன்னை எட்டினார்.

அதன்பின் இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. மார்கன் 22 ரன்னிலும், பட்லர் 2 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 18 ரன்னிலும், மொயீன் அலி 30 ரன்னிலும், சாம் கர்ரன் 12 ரன்னிலும் வெளியேற இங்கிலாந்து 42.1 ஓவரில் 251 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 8.1 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஷர்துல் தாகூர் மூன்று விக்கெட்டுகளும், புவனேஷ்குமார் இரண்டு விக்கெட்டுகளும், பாண்டியா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டாவது ஒருநாள் போட்டி இதே இடத்தில் மார்ச் 26ஆம் தேதி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

புதன் 24 மா 2021