^வெண்கல குரல் டி.எம்.எஸ். பிறந்தநாள்!

entertainment

இப்போது திரைப்படங்களை , பாடல்களை இனிமையாக ரசிக்க டிஜிட்டல் சவுண்ட், டால்பி டிஜிட்டல், டால்பி டிஜிட்டல் ப்ளஸ் , டால்பி அட்மாஸ் சிஸ்டத்தில் ரெக்கார்டிங் செய்யப்படுகிறது.

முன்பு இந்த தொழில்நுட்பம் இல்லாமலேயே தமிழில் சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் பக்தி, தத்துவம், காதல் என பல்வேறு வகையான பாடல்களை பாடி தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்த்தனர்.

இன்று டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் பிறந்த தினம். 1922 மார்ச் 24-ல் மதுரையில் இசைப்பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தார் டி.எம்.எஸ். அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடம் கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார். பி.யூ. சின்னப்பா, சுப்பையா பாகவதர் பாடல்களைக் கேட்டு வளர்ந்த டி.எம்.எஸ்., தியாகராஜ பாகவதரின் பரம ரசிகர்.

அதனால் தியாகராஜ பாகவதர் குரலில் மேடைக் கச்சேரிகளில் பாடி ஆரம்பத்தில் கவனம் ஈர்த்தார். ஒருமுறை தியாகராஜ பாகவதரின் பாடலைக் கச்சேரியில் பாடிக் கொண்டிருந்தபோது அதைக் கேட்டு பாகவதரே ஆச்சர்யப்பட்டுப் போய், நீ சென்னைக்கு வந்தால் வளமான எதிர்காலம் உண்டு என வாழ்த்தியிருக்கிறார்.

எம்.கே. தியாகராஜ பாகவதரும் சி.எஸ். ஜெயராமனும் கொடிகட்டிப் பறந்த காலம் அது. அதனால் டி.எம்.எஸ்ஸுக்கு அவ்வளவு சுலபமாக பின்னணிப் பாடல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 1946-ல் கிருஷ்ண விஜயம் படத்தில் எஸ்.வி. சுப்பையா நாயுடு இசையில் முதல்முதலாகப் பின்னணிப் பாடகராக அறிமுகமானார் டி.எம்.எஸ். ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி என்கிற பாடல்தான் அவர் முதலில் பாடியது. அந்தப் படம் 1950-ல் வெளியானது. அந்தப் படத்தில் 5 பாடல்களைப் பாடினார். அன்று ஆரம்பித்த இசைப்பயணம் மகத்தான சாதனைகளைப் படைத்தது. தமிழில் மட்டும் 11,000 பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். டி.எம்.எஸ்.-ஸின் மகத்துவமாகப் பார்க்கப்படுவது – தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா பாடிய காலக்கட்டத்தில் பாட ஆரம்பித்து தனக்கென ஒரு பாணியையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கால் நூற்றாண்டு காலம் கொடி கட்டிப் பறந்தது.

1946-ல் பின்னணிப் பாடகராக அறிமுகமானாலும் அதற்குப் பிறகு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கக் கிட்டத்தட்ட 10 வருடங்கள் காத்திருந்தார் டி.எம்.எஸ்.பின்னாளில் எம்.எஸ்.விஸ்வநாதன் ,கே.வி.மகாதேவன், இளையராஜா, டி.ராஜேந்தர் இசையில் பல்வேறு பாடல்களை பாடி தன் வெண்கல தொண்டையில் இருந்து எழுந்து வரும் வசீகர குரலால் இந்தகால இளைஞர்களையும் கவர்ந்தார். அவர் பாடிய பழைய பாடல்கள் எல்லாம் இப்போதைய டிஜிட்டல் இசையில் பலரின் செவிகளில் ரிங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆறு தலைமுறைகளுக்குப் பாடியவர் டி.எம்.எஸ். 1950களின் மத்தியில் ஆரம்பித்து 1970களின் இறுதிவரை வானொலிகளிலும் ஒலிப்பெருக்கிகளிலும் டி.எம்.எஸ். பாடிய பாடலைக் கேட்காமல் எந்தத் தமிழனும் உறங்கச் சென்றிருக்கமுடியாது.

1980களின் இறுதிவரை டி.எம்.எஸ்ஸின் குரல் தமிழ் சினிமாவுக்குத் தேவையாக இருந்தது. விஜய்காந்த் நடித்த உழவர் மகன் படத்தில் டி.எம்.எஸ். பாடிய ‘உன்னை தினம் தேடும் தலைவன்’ பாடல் ஹிட் ஆனது. 1989-ல் சத்யராஜ் நடித்த தாய்நாடு படத்தில் ஆறு பாடல்களைப் பாடினார். 2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ரஹ்மான் இசையமைத்த “செம்மொழியான தமிழ்மொழியாம்” பாடல்தான் அவர் கடைசியாகப் பாடியது. திரைப்படங்களில் பல மொழிகளில் பாடினாலும் தமிழில் பெற்ற பேர், புகழ் மற்ற மொழிகளில் அவருக்குக் கிடைக்கவில்லை.

டி.ராஜேந்தர் எழுத்து, இசையில் அவர் பாடிய, ‘அமைதிக்குப் பெயர்தான் சாந்தி’ உலக தமிழர்களையும் ரசிக்க வைத்தது.

பல பெருமைகளை கொண்ட டிஎம்எஸ் தனது 91ஆவது வயதில் 2013, மே 25 அன்று காலமானார் .

**சக்தி பரமசிவன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *