மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

கமல் சாதனையை நெருங்கிய தனுஷ்

கமல் சாதனையை நெருங்கிய தனுஷ்

இந்தியாவின் சிறந்த நடிகராக 'அசுரன்' படத்துக்காகத் தேசிய விருதை பெற்ற தனுஷ், அதை இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

முதல் முறை, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2010ஆம் ஆண்டு ஆடுகளம் படத்துக்காகப் பெற்றார் தனுஷ். அப்போது இந்த விருதை, மலையாள நடிகர் சலீம் குமாருடன் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் முதலில் தேசிய விருதைப் பெற்ற நடிகர் என்ற பெருமைக்குரியவர்

எம்.ஜி.ராமச்சந்திரன். அவருக்குத் தான் சிறந்த நடிகருக்கான விருது முதன் முதலில் கிடைத்தது. 1971ஆம் ஆண்டு எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த ரிக்க்ஷாக்காரன் படத்தில் நாயகனாக நடித்ததற்காக விருது வழங்கப்பட்டது.

1982ம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த படம் மூன்றாம் பிறை. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் சிறப்பாக நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

1987ம் ஆண்டு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது

கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் இளைஞராகவும் வயதானவராகவும் கமல் நடித்திருந்தார். இதில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாவது முறையாகக் கிடைத்தது.

கமலுக்கு இணையாக இரண்டாவது முறையாகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ள தனுஷ், தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கியிருக்கும் தனுசுக்கு, நேற்று மாலை தேசிய விருது அறிவிக்கப்பட்ட நேரம் நள்ளிரவு நேரம் என்பதால் அவரை யாராலும் உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில் தன்னுடைய மகிழ்ச்சியை, நன்றியை அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் பகிர்ந்திருக்கிறார் தனுஷ்.

“அசுரனுக்காகத் தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். ஒரு தேசிய விருதை வெல்வது என்பது கனவு. ஆனால், இரண்டு தேசிய விருதுகளை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசீர்வாதம்தான். நான் இந்தளவுக்கு வருவேன் எனக் கற்பனைகூட செய்ததில்லை.

நிறைய பேருக்கு நன்றி சொல்லவேண்டியிருக்கிறது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய குருவான அண்ணனுக்கு நன்றி. இந்த 'சிவசாமி'யை எனக்கு கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.

பாலுமகேந்திரா சாரின் அலுவலகத்தில் உங்களை முதன்முறையாகச் சந்தித்தபோது நீங்கள் என் நண்பனாக, துணைவனாக, சகோதரனாக மாறுவீர்கள் என நினைத்துக் கூடப்பார்க்கவில்லை. உங்களின் இயக்கத்தில் நான்கு படங்களில் நடித்ததற்காகவும், இரண்டு படங்கள் உங்களோடு சேர்ந்து தயாரித்ததற்காகவும் பெருமைப்படுகிறேன்.

என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அளவிடமுடியாதது. அடுத்து எனக்காக என்ன கதை எழுதியிருக்கிறீர்கள் என்கிற பேரார்வத்தில் உங்கள் செய்திக்காகக் காத்திருக்கிறேன்'' என்று அறிக்கையில் சொல்லியிருக்கிறார் தனுஷ்.

மேலும், 'வா அசுரா வா' பாடலை இசையமைத்தற்காக ஜி.வி.பிரகாசுக்கும் நன்றி தெரிவித்திருக்கும் தனுஷ், வழக்கம்போல தன்னுடைய பன்ச்லைனான ''எண்ணம்போல் வாழ்க்கை'' என்பதுடன் அறிக்கையை முடித்திருக்கிறார்

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

செவ்வாய் 23 மா 2021