qஇலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது: கமல்

entertainment

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கோவையில் முகாமிட்டு, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று ஹெலிகாப்டர் மூலம் நாகை மாவட்டம் திருப்பூண்டிக்கு சென்ற அவர், அங்கு கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் ஜி சித்துவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், ”நான் ஹெலிகாப்டரில் செல்வதைக் கிண்டல் செய்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் உங்களை எல்லாம் விரைவாகச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஹெலிகாப்டரில் பயணிக்கிறேன். அதுவும் என் சொந்த பணத்தில் தான் பயணிக்கிறேன்.

எங்குச் சென்று பார்த்தாலும் புறவழிச்சாலை இல்லை . பல சிற்றூர்களில் ரயில் சேவை இல்லை. போக்குவரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. பல்வேறு ஊர்களில் மூடப்பட்ட சாக்கடைகள் இல்லை. இவற்றையெல்லாம் சீர் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும் பணம் போதாது. அந்தப் பணத்தையும் பாக்கெட்டில் போட்டுக் கொண்டால் எந்த வேலையும் நடக்காது.

எனவே நேர்மையானவர்களைத் தேர்தலில் நிறுத்த வேண்டும். எப்போது பார்த்தாலும் நேர்மை நேர்மை என பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறார்கள். ஆனால் அதுதான் இங்கு அடிப்படைத் தேவையாக இருக்கிறது. ஊழல் சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது. அதனைத் தடுத்தாக வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் போராடும் மக்கள், எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்ல வேண்டிய மண் மற்றும் நீர் வளம் சூறையாடப்படும் போதும் போராட வேண்டும்.

மக்கள் நீதி மய்யத்திடம் ஏராளமான திட்டங்கள் உள்ளன. எதிரிகள் கூட காப்பியடிக்கும் அற்புத திட்டங்களை நாங்கள் தீட்டி வைத்துள்ளோம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும். இல்லத்தரசிகளும், விவசாயிகளும் முன்னேற்றம் அடைவதற்கான திட்டங்கள் உள்ளன. எதுவுமே கஷ்டப்படாமல் கிடைத்துவிடாது. உங்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்து உங்களுக்குக் கொடுக்கிறார்கள்.

திமுகவும், அதிமுகவும் மாறி மாறி இலவசங்களை அறிவிக்கின்றன. இலவசங்கள் எப்போதும் ஏழ்மை நிலையை ஒழித்து விடாது. உழைப்பால் கிடைப்பவை மட்டுமே நிலைத்திருக்கும்.

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இல்லத்தரசிகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வறுமைக்கோடு என்ற நிலையே இருக்காது. தமிழக மீனவர்கள் அச்சமின்றி ஆழ்கடல் மீன் பிடிப்பைச் செய்ய முடியும். அதற்காக உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி வாக்கு சேகரித்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *