மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

சென்னை வீரர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

சென்னை வீரர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

ஜப்பானில் இந்த (2021) ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தேர்வாகியுள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், வருகிற ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 28 வயதான சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் உலகளவில் 32ஆவது இடத்தில் இருப்பவர். இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றவர்.

சென்னை அரும்பாக்கத்திலுள்ள உள்ள கோலபெருமாள் செட்டி வைஷ்ணவா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரையும் சென்னையில் உள்ள புனித ஜான் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பையும் முடித்தவர்.

டேபிள் டென்னிஸ் பிரிவில் பங்கேற்கும் வீரர்களுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். தகுதிச் சுற்றில் நான்குக்குப் பூஜ்யம் என்ற செட் கணக்கில், பாகிஸ்தான் வீரர் முகமது ரமீஸைத் தோற்கடித்து, ஒலிம்பிக்கில் விளையாட தகுதியடைந்துள்ளார்.

"விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொருமுறையும் சில விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். சில தனித்திறமைகளையும் வளர்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் இதைச் சரியாக அப்ளை பண்ணியிருக்கிறேனா, இல்லையா என்பதில்தான் என் வெற்றி தோல்வி இருக்கும். அதேபோல், போட்டிகளில் கலந்துகொள்ளும்போது அதுதான் என் முதல் போட்டி என்று நினைத்து விளையாடுவேன். அப்படி விளையாடும்போது, ‘கோப்பையை வெல்ல வேண்டும்’ என்கிற மன அழுத்தம் இருக்காது. இதனால் பாதி மன அழுத்தம் குறைந்துவிடும்.

போதுமான உணவும் தேவையான ஓய்வும் என்னிடம் மீதியிருக்கும் மன அழுத்தத்தைக் குறைத்துவிடும். இப்படி உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு விளையாடுவதால், போட்டிகளில் வெற்றிக்கோப்பையை வெல்வது எளிதாக இருக்கிறது’’ என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ள சத்யன் ஞானசேகரன், “கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம்” என்பதை உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் தான் விளையாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஒலிம்பிக்குக்குத் தேர்வு பெற்றுள்ள வீரர்களுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

சனி 20 மா 2021