மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

நான்காவது டி20: இங்கிலாந்து - இந்தியா 50:50

நான்காவது டி20: இங்கிலாந்து - இந்தியா 50:50

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் இந்திய அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்று சமநிலையில் உள்ளன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மோதும் நான்காவது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 18) இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த இஷான் கிஷனுக்குப் பதில் சூர்யகுமார் யாதவ் அறிமுகம் செய்யப்பட்டார். இதேபோல் யுஸ்வேந்திர சாகலுக்கு பதில் ராகுல் சாகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடக்க வீரர் ரோகித் சர்மா 12 ரன்களிலும், கேஎல் ராகுல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடந்த இரண்டு டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்தப் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஆனால், அறிமுகப் போட்டியிலேயே அசத்திய சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதன்மூலம் அறிமுக டி20 போட்டியில் அரை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை யாதவ் பெற்றார். அரை சதம் அடித்த பின்னர் சற்று நிதானமாக ஆடிய யாதவ், 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ரிஷப் பண்ட் 30 ரன்களும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 37 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களும் அடிக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ராய் - ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இதில் ஜாஸ் பட்லர் 9 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்ததையடுத்து, அடுத்து விக்கெட்டுக்கு டேவிட் மலான் களமிறங்கினார். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆடிய நிலையில், ராகுல் சாகர் வீசிய எட்டாவது ஓவரில் மலான் 14 ரன்களில் போல்டு ஆனார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா வீசிய ஒன்பதாவது ஓவரில் ஜாசன் ராய் (40 ரன்கள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ - பென் ஸ்டோக்ஸ் ஜோடி அணியைச் சரிவில் இருந்து மீட்டெடுத்தது. அரை சதத்தை நெருங்கிய பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஜானி பேர்ஸ்டோ 25 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் நீண்ட நேரம் நிலைத்து நிற்காததால் இறுதி ஓவர்களில் நிர்ணயித்த இலக்கை இங்கிலாந்து அணியால் எட்டமுடியவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்று சமநிலையில் உள்ளன.

இந்த நிலை, நாளை (மார்ச் 20) நடக்கவுள்ள ஐந்தாவது டி20 போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கி உள்ளது.

-ராஜ்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

வெள்ளி 19 மா 2021