மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

புலிக்குத்தி, ஏலே வரிசையில் அடுத்த டிவி ரிலீஸ்!

புலிக்குத்தி, ஏலே வரிசையில் அடுத்த டிவி ரிலீஸ்!

திரையரங்கம், ஓடிடி எனும் டிஜிட்டல் தளத்தைத் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கான புது வழியாகியிருக்கிறது தொலைக்காட்சிகள். தியேட்டர், ஓடிடியைத் தொடர்ந்து நேரடி டிவி ரிலீஸ் படங்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சின்ன பட்ஜெட் படங்களுக்கு எல்லைச் சாமியாக நின்று கைகொடுக்கிறது தொலைக்காட்சிகள்.

பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, அஸ்வின், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் நகைச்சுவைத் திரைப்படமாக உருவான படம் ‘நாங்க ரொம்ப பிசி’. இயக்குநர் சுந்தர்.சியின் அவினி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, சன் தொலைக்காட்சியில் நேரடியாக 2020ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இந்தப் படம், 2016இல் கன்னட மொழியில் வெளியான மாயா பஜார் படத்தின் தமிழ் ரீமேக். சன் டிவியில் நேரடியாக வெளியாகவே உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த பொங்கல் பண்டிகைக்கு விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ' புலிக்குத்தி பாண்டி' படம் சன் டிவியில் நேரடியாக வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படமும், நேரடி சன் டிவி ரிலீஸுக்கென பிரத்யேகமாகத் தயாரானது.

சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கியவர் ஹலீதா ஷமீம். இந்தப் படம் கடந்த 2019இல் ஆந்தாலஜியாக நான்கு கதைகளுடன் திரையரங்கில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில், சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, சாரா அர்ஜுன், லீலா சாம்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரிலேஷன்ஷிப் குறித்த கதைகளுடன் படம் இருந்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிட்டது. சில்லுக்கருப்பட்டி தந்த ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவான ‘ஏலே’ படமும் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் நடிப்பில் தந்தை மகன் பாசத்தை மையமாகக்கொண்ட நாஸ்டாலஜிக் நினைவுகளோடு படம் இருந்தது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இந்தப் படம் வெளியானது.

ஏலே படமானது திரையரங்கிற்கென திட்டமாகி, ரிலீஸ் தேதி வரை உறுதியுமாகி திரையரங்கத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நேரடியாக டிவியில் வெளியானது.

இந்த நிலையில், திரையரங்கிற்காக உருவாகி நேரடியாக டிவிக்கு புதுப்படமொன்று வர இருக்கிறது. பிரபாகரன் இயக்கத்தில் கதிர், சூரி, ரகசியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்பத்’. சூப்பர் சிங்கர் அஜீஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் நிறுவனத்துடன் வயகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. நீண்ட நாளாக தயாரிப்புப் பணியில் இருந்த இந்தப் படத்துக்கு ஒரு விடிவு காலம் வந்துவிட்டது. இந்தப் படம், நேரடியாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

புதன் 17 மா 2021