மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

மூன்றாவது டி20: எளிதில் வென்ற இங்கிலாந்து அணி!

மூன்றாவது டி20: எளிதில் வென்ற இங்கிலாந்து அணி!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மார்ச் 16) இரவு நடைபெற்றது. ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டத்தால் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டு கேஎல் ராகுலுடன் தொடக்க வீரராக களம் இறங்கினார். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 15 ரன்களிலும், இஷான் கிஷன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 24 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

நான்காவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. துரதிருஷ்டவசமாக ரிஷப் பண்ட் 20 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது இந்தியா 11.1 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னில் வெளியேறினார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 17ஆவது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 37 பந்தில் அரைசதம் அடித்தார். 18ஆவது ஓவரை மார்க் வுட் வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தை சிக்சருக்கும், நான்காவது பந்தை பவுண்டரிக்கும், ஐந்தாவது பந்தை சிக்சருக்கும் விளாசினார் விராட் கோலி. இந்த ஓவரில் இந்தியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவரை ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைக்க இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 15 பந்தில் 17 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 46 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியில் மார்க்வுட் மூன்று விக்கெட்டுகளும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் நான்காவது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர், நிதானமாக ஆடி, சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டார். அடுத்து வந்த டேவிட் மலான் 18 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜானி பேர்ஸ்டோவ் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி இறுதி வரை நிலைத்து நின்று ஆடி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தது. இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற்றது. இறுதி வரை ஜானி பேர்ஸ்டோ (40 ரன்கள்), ஜாஸ் பட்லர் (83 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

நாளை (மார்ச் 18) நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் சமநிலையை எட்டும். தோல்வியடைந்தால் இங்கிலாந்து அணி டி20 தொடரைக் கைப்பற்றும்.

-ராஜ்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

புதன் 17 மா 2021