மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

முதல் டி20: எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

முதல் டி20: எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த ஐந்து ஆட்டங்களும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் - கே.எல்.ராகுல் களமிறங்கினர். ஆனால் இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில் கே.எல்.ராகுல் (1 ரன்) போல்டு ஆனார். அடுத்து அடில் ரஷித் வீசிய மூன்றாவது ஓவரில் கேப்டன் விராட் கோலி ரன் ஏதுமின்றி கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து ஐந்தாவது ஓவரில் ஷிகர் தவான் 4 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயருடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சற்று நிதானமாக ஆடிய ரிஷப் பண்ட் (21 ரன்கள்) பத்தாவது ஓவரில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார்.

மறுபுறம் களத்தில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடித்தார். இதனால் இந்திய அணியின் ரன் வேகம் சற்று உயர்ந்தது. இதற்கிடையில் ஹர்திக் பாண்டியா (19 ரன்கள்), ஷர்துல் தாக்கூர் (0) இருவரும் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து 48 பந்துகளில் 67 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர், கடைசி ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது. வாஷிங்டன் சுந்தர் (3), அக்‌ஷர் பட்டேல்(7) இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து 125 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

ஜாசன் ராய் இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் நான்கு பவுண்டரிகளையும் மூன்று சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இந்த நிலையில் சாஹல் வீசிய எட்டாவது ஓவரில் ஜாஸ் பட்லர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததையடுத்து இந்த ஜோடி பிரிந்தது. ஜாஸ் பட்லர் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 28 ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மலானுடன் ஜாசன் ராய் ஜோடி சேர்ந்தார். ஆட்டத்தின் 12ஆவது ஓவரில் அரை சதத்தை நெருங்கிய ஜாசன் ராய் (49 ரன்கள்), வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி விக்கெட்டை இழந்தார். இதையடுத்து டேவிட் மலான் (24 ரன்கள்), ஜானி பேர்ஸ்டோ (26 ரன்கள்) இருவரும் இறுதிவரை நிலைத்து நின்று ஆடி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதியாக 15.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இன்றைய முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று (மார்ச் 12) நடந்த ஆமதாபாத் ஸ்டேடியத்திலேயே இரண்டாவது டி20 போட்டி நாளை (மார்ச் 14) இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது.

-ராஜ்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

சனி 13 மா 2021