மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்: மேரிகோம்

டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்: மேரிகோம்

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்று வரலாறு படைத்த குத்துச்சண்டை இந்திய வீராங்கனை மேரிகோம், ‘டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்’ என்று அறிவித்துள்ளார்.

இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் ஆறு முறை பட்டம் வென்றவர். 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் பெற்று வரலாறு படைத்தவர். இந்த (2021) ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் களம் காண தன்னை தயார்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மேரிகோம் அளித்துள்ள ஒரு பேட்டியில், “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எனது கடைசி ஒலிம்பிக். வயது இங்கு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இப்போதே எனக்கு 38 வயதாகி விட்டது. அதன் பிறகு அடுத்த ஒலிம்பிக்குக்கு மேலும் நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். தொடர்ந்து விளையாடி 2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் நான் பங்கேற்க விரும்பினாலும்கூட ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு 40 என்பதால் நிச்சயம் என்னை அனுமதிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், “20 ஆண்டுகளாக குத்துச்சண்டை களத்தில் இருக்கிறேன். ஒலிம்பியன் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை இல்லாததால் வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியது இருந்தது. ஒரு வழியாக 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை பிரிவு சேர்க்கப்பட்டது. அதில் பங்கேற்று சாதித்து காட்டினேன். ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றது எனது வாழ்க்கையை மாற்றி விட்டது.

அந்த வெற்றி நிறைய இளம் வீராங்கனைகள் குத்துச்சண்டை விளையாட்டைத் தேர்வு செய்வதற்கு உந்துசக்தியாக இருந்தது. ஒலிம்பிக்கில் நான் பங்கேற்காமல் இருந்திருந்தால் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக எனது விளையாட்டு வாழ்க்கையின் மதிப்பு குறைந்திருக்கும்” என்றும் பேட்டியளித்துள்ளார்.

-ராஜ்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

வெள்ளி 12 மா 2021