மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

அடியாளும் ஐடி பெண்ணும் காதலிக்காமல் காதலித்தால் !

அடியாளும் ஐடி பெண்ணும் காதலிக்காமல் காதலித்தால் !

தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் காமெடி எனும் ஜானரில் பெரிதாக படங்கள் கிடையாது. தேடிப் பிடித்தால் தி பெஸ்டாக சொற்ப படங்களே இருக்கும். அப்படியான ஸ்பெஷலான ஒரு ஜானரான ரொமாண்டிக் காமெடியாக ஐந்து வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் வெளியான படம் ‘காதலும் கடந்துபோகும்’.

விஜய் சேதுபதி, மடோனா சபாஸ்டியன் நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியானது கா.க.போ. காதலே சொல்லாமல் காதலைப் பேசி விடமுடியுமா? முடியும். காதலும் கடந்து போகும் படத்தில் காதலின்றி காதல் மொழி பேசியிருக்கிறார்கள். ஜெயில் ரிட்டர்ன் விஜய் சேதுபதி, அரசியல்வாதி நண்பன் பார் லைசன்ஸ் வாங்கித் தருவான் எனக் காத்துக் கொண்டிருக்கிறார். அவரின் எதிர்வீட்டுக்கெதிரில் ஐ.டியில் வேலை இழந்த மடோனா சபாஸ்டியன் குடிவருகிறார். வேலை தேடும் ஹீரோயினுக்கும், எந்த வேலையும் தெரியாத ஹீரோவுக்கும் நடுவில் கிராஸ் ஆகும் காதலே திரைக்கதை.

காதல் படமென்றால் காதலைச் சொல்ல வேண்டும். காதலிக்க வேண்டும். டூயட் பாட வேண்டும். வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், காதலின் பெருமையைக் காப்பாற்ற தற்கொலை செய்துகொள்ள வேண்டும் இப்படியான வழக்கமன காதல் கதைகளில் இருந்து தனித்து நிற்கிறது காதலும் கடந்துபோகும். காதலைப் பரிமாரிக்கொள்ளாமல் உணர்வுகளாக கடத்திவிட்டுச் செல்வதே படத்தின் சிறப்பு. ரொமாண்டிக் காமெடி ஜானருக்கான கச்சிதமான சினிமா.

வாழ்க்கையின் எதோ ஒரு தருணத்தில், எதோ ஒரு நொடியில் இந்தப் படத்தின் காட்சிகள் நம்மைக் கடந்துபோகும். எதார்த்தமான நம்முடைய வாழ்வுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயங்களை திரைக்கதையில் நிகழ்த்தியிருப்பார் நலன்.

இப்படம் கொரிய மொழியில் வெளியான 'மை டியர் டெஸ்பரடோ' எனும் படத்தின் தமிழ் ரீமேக். கா.க.போ படம் துவங்கும் போதே ஒரிஜினல் படத்தை இயக்கிய Kim Kwang-sik பெயரை குறிப்பிட்டே படம் துவங்கும். எத்தனையோ கொரியன் சினிமாக்கள் தமிழில் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது. படைப்பின் மீது நேர்மை கொண்டவர் நலன். அதனால், இந்தப் படத்தை 40 லட்சத்துக்கு ரீமேக் உரிமையை முறையாக வாங்கியிருந்தார். சாதாரண ஒரு காதல் கதைதானே... இதை ஏன் ரீமேக் செய்ய வேண்டும் என நலனிடம் கேட்டால், ‘ இப்படியான ஒரு கதையை இவ்ளோ கச்சிதமாக நிச்சயமாக என்னால் பண்ணமுடியாது. அதனால், அதை தமிழில் ரீமேக் செய்திருக்கிறேன்’ என்பார்.

கொரியப் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பாதிக்கும் மேல் அப்படியே தமிழில் பயன்படுத்தியிருக்கிறார். படத்துக்கு கூடுதல் ப்ளஸ்.... சந்தோஷ் நாராயணனின் இசை. கககபோ பாடலில் கொண்டாட்டத்தை, பங்காளி-யில் துள்ளலை, அக்கம் பக்கம் பார் பாடலில் உணர்வியலை, போங்கு கிச்சானில் நமக்கான இசையாகவே இசைத்திருப்பார் ச.நா.

எந்த வேலையும் தெரியாத அடியாள், யாருக்காகவோ தன்னுடைய வாழ்க்கையின் பாதியை ஜெயிலில் தொலைத்துவிட்டு எதற்காக வாழ்கிறோம் என தெரியாத ஒரு கேரக்டர், சண்டைக்குப் போய் அடிவாங்கி வரும் ஹூரோ... இப்படியான ஒரு ரோலில் ஹீரோக்கள் நடிக்க தயங்குவார்கள். மாஸ் சீன் இருக்க வேண்டும். படமென்றாலும் இமேஜ் பாதிக்கக் கூடாது என யோசிக்கும் நேரத்தில், சல்பி சேகராக விஜய்சேதுபதி அசால்டு காட்டியிருப்பார்.

“பெரிய ஹோட்டல்ல ட்ரங்கன் பிரான்னு ஒரு டிஷ் கொடுப்பாங்க. அது என்னன்னு தெரியுமா? ஒரு பவுல்ல சரக்க ஃபுல்லா ஊத்தி அதுக்குள்ள உயிரோட ஒரு பிரானை பிடிச்சுப்போட்டுருவாங்க. அது சரக்கை முழுசா குடிச்சிட்டு போதையில இருக்கும். அதை அப்படியே உயிரோட கொதிக்கிற எண்ணெயில வறுத்து கொடுப்பாங்க... அப்படி இருக்கு .. இப்ப நீ எனக்கு சொல்லுற விஷயம் ” , "எல்லார்ட்டையும் பூனை மாதிரி பம்முற, என்கிட்ட மட்டும் எகிறி எகிறி பேசற.. என்னடி உனக்கு என்னை பார்த்து பயம் வரலையா” என நிறைய வசனங்கள் படத்தை லைவ்வாக மாற்றியிருக்கும். அதுமாதிரி, விஜய்சேதுபதியின் இண்டர்வியூ , எஸ்கிமோ நாய், கருப்புக்காடு என நிறைய மொமண்டுகளும் இருக்கும்.

இந்தப் படத்தின் ஐந்து வருட கொண்டாட்டத்தில் சேதுபதி ரசிகர்கள் இறங்கிவிட்டார்கள். விஜய்சேதுபதியும் ட்விட்டரில் நலன்குமாரசாமிக்கு நன்றி என ட்விட்டியிருக்கிறார். அந்த நன்றிக்குள் ஓராயிரம் நன்றிகள் ஒளிந்திருப்பதை நிச்சயம் உணரலாம். அவசியம் கொண்டாடப்பட வேண்டிய சினிமாவே காதலும் கடந்துபோகும்.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வியாழன் 11 மா 2021