மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

‘புரிதலுக்கு நன்றி அனிருத்’: இசையமைப்பாளரை மாற்றிய கார்த்திக் சுப்பராஜ்

‘புரிதலுக்கு நன்றி அனிருத்’:  இசையமைப்பாளரை மாற்றிய கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சியான் 60 படத்தில் இசையமைப்பாளராக ஆரம்பத்தில் ஒப்பந்தமானது அனிருத். ஆனால், தற்பொழுது, சந்தோஷ் நாரயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் & துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘சியான் 60’. கோப்ரா படத்தில் கவனம் செலுத்திவந்த விக்ரம், சமீபத்தில் வெளிநாட்டு ஷூட்டிங்கில் கூட கலந்துகொண்டது நினைவுகூரத்தக்கது. தற்பொழுது, கோப்ரா இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

அடுத்த கட்டமாக, சியான் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக முதலில் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், பணியாற்றுவதில் சில சிக்கல்கள் இருப்பதால், அனிருத்துக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை கார்த்திக் சுப்பராஜ் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதோடு, ‘ஆதரவுக்கும், புரிந்துகொண்டதற்கும் நன்றி அனிருத்’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் வெளியான பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு, தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெகமே தந்திரம் படத்திலும் இந்த கூட்டணியின் மேஜிக் நடந்திருக்கிறது. ரஜினி நடித்து வெளியான பேட்ட படத்தில் மட்டுமே அனிருத் உடன் கார்த்திக் சுப்பராஜ் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக விக்ரமுக்கு இசையமைக்க இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். நிச்சயம் சுவாரஸ்யமான பாடல்களை எதிர்பார்க்கலாம். விக்ரமுக்கு கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல, மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க துருவ் விக்ரம் தயாராகிவருகிறார். தந்தையும், மகனும் ஒரே படத்தில் இணைவதால் ‘சியான் 60’ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- ஆதினி

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

புதன் 10 மா 2021