வாவ் கதைகளுடன் தமிழில் உருவாகும் ரீமேக் படங்கள்!

entertainment

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டிரெண்ட் இதுதான். மற்ற மொழிகளில் வெற்றியைப் பெற்ற ஏராளமான படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

முதலாவதாக, அருண் பாண்டியனும் அவரின் மகளான கீர்த்தி பாண்டியனும் நடிக்க ‘அன்பிற்கினியாள்’ படம் வெளியாகி பெரியளவில் வரவேற்பை பெற்றுவருகிறது. இது, மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக். இப்படத்தில் கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் நடித்த அன்னா பென் நடித்திருந்தார். அன்னா பென் நடித்த கேரக்டரில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அன்பிற்கினியாள் படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து எட்டு படங்கள் மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆகிவருகிறது.

**முஃப்டி – பத்து தல**

சிம்பு நடித்துவரும் ‘பத்து தல’ படம் கூட ஒரு கன்னட மொழிப் படத்தின் ரீமேக். கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘பத்து தல’. சிம்புவுடன் கெளதம் கார்த்திக் நடித்திருக்கிறார். சிம்பு நெகட்டிவ் கேரக்டரிலும், கெளதம் கார்த்திக் போஸீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள். ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா தான் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

**நின்னு கோரி – தள்ளிப் போகாதே**

நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017-ல் வெளியான தெலுங்குப் படம் `நின்னுக் கோரி’. சிவா நிர்வானா இயக்கியிருந்த இந்தப் படம் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். `தள்ளிப் போகாதே’ எனும் பெயரில் ரீமேக் ஆகிவருகிறது. இந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்கியிருக்கிறார். படமும் ரிலீஸூக்குத் தயாராக இருக்கிறது.

**அந்தாதூன் – அந்தகன்**

இந்தியில் ஆயுஷ்மான் குரானா , தபு நடிப்பில் வெளியான படம் அந்தாதூன். இந்தப் படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆயுஷ்மான். நெகட்டிவ் ரோலில் தபு நடித்திருப்பார். பெரிய வசூல் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் கைப்பற்றினார். பிரசாந்த் நடிக்க தமிழில் ‘அந்தகன்’ எனும் பெயரில் தயாராகி வருகிறது. ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஃபெட்ரிக் இயக்குகிறார். ஆரம்பத்தில் மோகன் ராஜா இயக்க பேச்சுவார்த்தை நடந்தது கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்பது பொருளாகும்.

**ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25 – கூகுள் குட்டப்பன்**

சுராஜ் மற்றும் செளபின் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25’ . இப்படத்தை ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். கிராமத்து சூழலில் வாழும் தந்தையான சுராஜூக்கு வீட்டு உதவிக்காக, ரோபோ ஒன்றை அனுப்பிவைக்கிறார், ஜப்பானில் பணியாற்றும் மகன் செளபின். விஞ்ஞானத்துக்கும் பாசத்துக்கும் நடுவிலான மெல்லிய கதையாக அட்டகாசமாக உருவாகியிருக்கும் திரைக்கதை. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் கைப்பற்றியிருக்கிறார். படத்தினைத் தயாரித்து நடிக்கவும் இருக்கிறார். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்துக்கு தமிழில் கூகுள் குட்டப்பன் என பெயரிட்டுள்ளனர். சுராஜ் கேரக்டரில் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். செளபின் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடிக்கிறார். நாயகியாக லாஸ்லியா மற்றும் காமெடி டிராக்கில் யோகிபாபு நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்களான சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். இதில், கே.எஸ்.ரவிக்குமாரின் சகோதரரின் மகன் தான் சபரி. மலையாளத்தில் பிஜிபால் இசையமைத்திருப்பார். தமிழில் ஜிப்ரான் இசைப்பணிகளை மேற்கொள்கிறார்.

**அய்யப்பனும் கோஷியும்**

ப்ரித்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் மலையாள மொழியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் `அய்யப்பனும் கோஷியும்’ . கதை இதுதான். மிகச் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் கோஷி குரியன். ஊட்டிக்கு தன்னுடைய டிரைவருடன் காரில் சென்றுகொண்டிருக்கும் போது, அட்டப்பாடி வழியாக போகிறார்கள். ஆல்கஹால் தடைசெய்யப்பட்ட பகுதி. முழு போதையில், பை நிறைய பாட்டிலுடன் எஸ்.ஐ அய்யப்பனிடம் சிக்குகிறார். கோஷியை அடித்து இழுத்துச் சென்று இரவு முழுக்க காவல் நிலையத்தில் அமர வைக்கிறார். கேஸும் போட்டுவிடுகிறார். கோஷி பெரிய இடத்துப் பையன் என்பது அய்யப்பனுக்கு அப்பறமாக தான் தெரிய வருகிறது. இதன்பிறகு, இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் நடக்கும் ஈகோ மோதல்தான் களம். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றிருக்கிறார். பிஜூ மேனன் ரோலில் சசிகுமார் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது. ப்ரித்விராஜ் ரோலில் நடிக்கப் போவது யாரென்பது உறுதியாகவில்லை.

**தி கிரேட் இந்தியன் கிச்சன்**

மலையாளத்தில் சுராஜ், நிமிஷா சஜயன் நடிப்பில் நீ ஸ்ட்ரீம் எனும் ஓடிடியில் நேரடியாக வெளியான படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் வெற்றிக்குக் காரணம் படத்தின் கரு தான். பழமை வாத கொள்கை கொண்ட வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் நாயகி சந்திக்கும் சிக்கல்களும், அதை உடைத்தெறியும் இடமுமாக படம் பட்டாஸாக இருக்கும். இந்தப் படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் உரிமையை இயக்குநர் கண்ணன் கைப்பற்றியிருக்கிறார். சமீபத்தில் படத்தின் துவக்க விழா கூட நடந்தது. நிமிஷா சஜயன் ரோலில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படம் துவங்கிவிட்டது, விரைவிலேயே திரையில் எதிர்பார்க்கலாம்.

**பதாய் ஹோ**

2018ல் இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த பதாய் ஹோ என்ற காமெடி படத்தின் தமிழ் ரீமேக்கை கையில் எடுத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. தமிழில் திரைப்படத்தை என்.ஜே. சரவணன் இயக்கவுள்ளார். மேலும் ஆர்ஜே பாலாஜி இணை இயக்குனராகவும் பணியாற்ற இருக்காராம். ஆயுஷ்மான் குர்ரானா கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்க இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜியின் தந்தை ரோலில் சத்யராஜ் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறது. படத்தின் கதை இதுதான். திருமண வயதில் மகன் இருக்கும் போது, வீட்டில் அம்மா கர்ப்பமாகிவிடுகிறார். அதனால் வீட்டில் என்ன களேபரம் நடக்கிறது என்பதே ஒன்லைன்.

**ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா**

துப்பறிவாளர் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, சின்ன சின்ன பெட்டி கேஸ்களை தீர்த்து வைத்துக் கொடுக்கிறார். அப்படி எதிர்பாராமல், ஒரு காணாமல் போன பெண்ணைப் பற்றி விசாரிக்க துவங்க, அது இவரை ஆபத்தில் மாட்ட வைக்கிறது. இதிலிருந்து ஆத்ரேயா தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் கதை. ப்ளாக் காமெடி ஃப்ளேவரில் ஆரம்பித்து, திடீரென படம் சீரியஸாக மாறி, பல திருப்பங்களை வைத்து கதை நகர்த்தியிருப்பார் இயக்குநர் ஸ்வரூப். தெலுங்கு மொழியில் வெளியான இந்த ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடிக்க இருக்கிறார்.

**- ஆதினி **

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *