மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 மா 2021

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின்படி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதும் வாய்ப்பைப் பெற்றுள்ளது இந்திய அணி.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 4) தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 8 ரன்களுடனும் புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று (மார்ச் 5) இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடினர். புஜாரா (17 ரன்கள்), விராட் கோலி (0) ரகானே (27 ரன்கள்) என முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினாலும் அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 94 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் சேர்த்து மொத்தம் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (மார்ச் 6) காலை தொடங்கியதும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். ஓரளவு பொறுப்பாக ஆடிய அக்சர் படேல் 43 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் வாஷிங்டன் சுந்தர் சதத்தை நெருங்கி கொண்டிருந்ததால், அவர் சதம் அடிப்பாரா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அடுத்து வந்த இஷாந்த் சர்மா மற்றும் முகம்மது சிராஜ் ரன் எதுவும் இன்றி வந்த வேகத்தில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை பெற்றது. பந்து வீச்சில் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து டான் லாரன்ஸ் 50 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். கடைசியில் 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி.

அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 5 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் 3 - 1 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின்படி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதும் வாய்ப்பைப் பெற்றுள்ளது இந்திய அணி.

- ராஜ்

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சனி 6 மா 2021