இந்தியில் ரீமேக்காகும் அருவி : அதிதிபாலன் ரோலில் தங்கல் நாயகி!

'அருவி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் `தங்கல்` பட நடிகை லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அதிதி பாலன் நடிப்பில் 2017இல் வெளியான `அருவி’ திரைப்படம், அதன் தனித்துவமான கதைக்களத்தால் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. அறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கிய இப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்தது. இத்திரைப்படம் சமூகத்தின் மீதான ஒரு பெண்ணின் கோவத்தை அற்புதமாக பிரதிபலித்தது. வித்தியாசமான கதைக்களம் தான் படத்தின் பலமாக இருந்தது.
தற்போது இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 'ஷூல்' என்கிற படத்தை இயக்கிய நிவாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. `தங்கல்’ நாயகி பாத்திமா சனா ஷேக் இந்தி ரீமேக்கில் அதிதி பாலன் ரோலில் நடிக்கிறார்.
அசலுக்கு இணையாக ரீமேக்கை உருவாக்குவதென்பது நிச்சயம் சவாலான விஷயம் தான். நம்ம ஊர் நடப்பு அரசியல் , சமூக விஷயங்களை ஆணித்தரமாகப் பேசியிருப்பார்கள். இதுவே, பாலிவுட்டுக்குச் செல்லும் போது, அந்த ஊர் சார்ந்த சமூக விஷயங்களும் அடங்கியிருந்தால் மட்டுமே கவனத்தை ஈர்க்கும். முதல் கட்டப் பணிகளைப் படக்குழு துவங்கிவிட்டதாம். இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.
பாலிவுட்டிலிருந்து ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான படங்களான அந்தாதூன் படத்தை பிரசாந்த் ரீமேக் செய்கிறார். ஆர்ட்டிகிள் 15 படத்தை உதயநிதி ரீமேக் செய்கிறார். அதுபோல, பதாய் ஹோ படத்தை ஆர்.ஜே.பாலாஜி ரீமேக் செய்து நடிக்கிறார். இப்படி, பாலிவுட்டிலிருந்து பல படங்கள் தமிழுக்கு வந்துகொண்டிருக்கும் வேளையில், தமிழிலிருந்து ஒன்று இந்திக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.
- ஆதினி