மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 மா 2021

விமலால் நடுத்தெருவில் நிற்கிறேன்: திரையரங்கு உரிமையாளர் கண்ணீர்!

விமலால் நடுத்தெருவில் நிற்கிறேன்: திரையரங்கு உரிமையாளர் கண்ணீர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திரையரங்க உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பணத்தை திருப்பித் தராமல் நடிகர் விமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் போஸ்ட்,செட்டி தெரு, பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, எழுதிய கடிதத்தில்,

“வணக்கம். நான் பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள மதுக்கூரில் வசித்து வருகிறேன். 2016ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் திரையரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்போது “மன்னர் வகையறா ” படத்தின் படப்பிடிப்பிற்காக பட்டுக்கோட்டை வந்திருந்த நடிகர் விமல் என்னுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார். படப்பிடிப்பு துவங்கிய ஒரே வாரத்தில் என்னை அழைத்த நடிகர் விமல் ” மன்னர் வகையறா ” என்ற படத்தை அவரே தயாரிப்பதாகவும், செலவுகளுக்கு பணம் தேவைப்படுவதாகவும், சென்னைக்கு சென்றவுடன் அனுப்பி வைப்பதாகவும் கூறி கடன் கேட்டார். நானும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் மேலும் 50 லட்சம் ரூபாய் மொத்தமாக தேவைப்படுவதாகவும், ஒரே மாதத்தில் திருப்பித் தருவதாகவும் கூறினார். இதனை நம்பி எனது வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி கொடுத்தேன்.

நான் கொடுத்த பணத்திற்கு ஈடாக ரூ 80 லட்சத்திற்கு காசோலையும் (இந்தியன் வங்கி காசோலை எண் : 076759, கோடம்பாக்கம் கிளை) கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் சொன்ன தேதியில் வங்கியில் காசோலையை செலுத்தியபோது, போதிய பணமில்லாமல் காசோலை திரும்பிவிட்டது.

இதுகுறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை என் பணத்தை திருப்பித்தரவில்லை. கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்கியதால் வேறு வழியின்றி என்னுடைய வீட்டை விற்று கடனை அடைத்தேன். நடிகர் விமலுக்கு உதவப்போய் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறேன். நடிகர் விமலால் என் குடும்பம் பெரும் நஷ்டத்தை சந்தித்து விட்டது.

இந்நிலையில் இன்றைய செய்தித்தாளில் நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி மணப்பாறையில் திமுக சார்பில் போட்டியிடப் போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

” ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு ” என என்னைப் போன்றவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், மோசடியின் மொத்த உருவமாய் திகழும் நடிகர் விமலுக்கு தாங்கள் சீட் கொடுக்க இருப்பதாக வரும் தகவல் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவது போல் உள்ளது.

இவரைப் போன்றவர்களால் கழகத்திற்கு கெட்டபெயர்தான் வரும் என்பதை தெரிவிப்பதற்காகவே தங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளேன். என் மீது பிழையிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் தயாரித்து , நடித்து 2018ல் வெளியான படம் ‘மன்னர் வகையறா’. விமலுக்கு நாயகியாக ஆனந்தி நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக வாங்கிய பணத்தைத் தரவில்லை என்றே திமுக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தப் பிரச்னைக் குறித்து சினிமா சங்கங்களில் முறையாக புகார் தெரிவித்தாரா என்பது குறித்துத் தெரியவில்லை. மேலும், இந்த கடிதம் குறித்து திமுக தலைமை என்ன பதிலளிக்கப் போகிறது என பொறுத்திருந்துப் பார்க்கலாம்.

-ஆதினி

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

வியாழன் 4 மா 2021