திரைப்படங்களான குறும்படங்களின் சுவாரஸ்யக் கதை!

உலகம் முழுவதும் பல குறும்படங்கள் திரைப்படங்கள் ஆகியிருக்கின்றன. தொழில்நுட்பம் முன்னேறிவரும் இந்த காலக்கட்டத்தில் சினிமாவை மக்கள் அணுகும் இடைவெளி குறைந்துவருகிறது. மொபைலிலேயே திரைப்படங்கள் எடுத்துவரும் காலமிது. இதுவே சில வருடங்களுக்கு முன்பு, பல இயக்குநர்கள் சினிமாவுக்கான விசிட்டிங் கார்ட்டாக இருந்தது குறும்படங்கள். திறமையை வெளிக்கொண்டு வர குறும்படங்கள் உதவியாக இருந்திருக்கிறது. திறமையை வெளிக்காட்ட உதவியாக இருந்த குறும்படங்களே, அந்த இயக்குநருக்கு முதல் படமாகவும் மாறியிருக்கிறது. அப்படி, தமிழ் சினிமாவில் குறும்படங்கள் திரைப்படமான கதையைப் பார்க்கலாம்.
காதலில் சொதப்புவது எப்படி?
கலைஞர் டிவியில் `நாளைய இயக்குநர்' முதல் சீசனில் பாலாஜி மோகன் இயக்கத்தில் மிகவும் பிரபலமான குறும்படம் தான் `காதலில் சொதப்புவது எப்படி?'. ஆதித் - ரெஜினா லீட் ரோலில் நடித்த இந்தக் குறும்படம் யூடியூப்பில் செம ஹிட். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 'குறும்படம் டூ திரைப்படம்' எனும் பாதையை தமிழ் சினிமாவுக்குத் திறந்து விட்டதே காதலில் சொதப்புவது எப்படி தான். இந்தக் குறும்படத்தைப் பார்த்த சித்தார்த்துக்கு, இதைப் படம் பண்ணலாம் என ஐடியா வந்தது. பின்னர், சித்தார்த், அமலாபால் நடிக்க முழு நீளத் திரைப்படமாகவும் படம் பெரிய ஹிட். ஏன்னா, மில்லினியம் தலைமுறைகளின் காதல் சிக்கல்களை எல்லாம் பேசியதால் இளைஞர்கள் மத்தியிலும் படம் செம ரீச் ஆனது.
பண்ணையாரும் பத்மினியும்
அம்பாசிடர் கார் ஒன்றை வைத்து குறும்படம் எடுத்தவர் அருண்குமார். இதுவும், நாளைய இயக்குநரில் ஒளிபரப்பான குறும்படம்தான். ஃபீல் குட்டான குறும்படமாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. இதே குறும்படத்தை கொஞ்சம் கதைகள் சேர்த்து ‘பண்ணையாரும் பத்மினியும்’ படமாகவும் வெளியாகி பெரியளவில் வெற்றியைப் பெற்றது. ஜெயப்பிரகாஷ், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் என இன்றைய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் நடித்த படம். இளமையான ஒரு காதலும், முதுமையான காதலும் அதற்கு நடுவே அம்பாசிடர் மீதான அன்பையும் எதார்த்தமாக பதிவு செய்த படம்.
முண்டாசுப்பட்டி
80களில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அந்த கிராமத்தில் புகைப்படம் எடுப்பது குறித்த மூடநம்பிக்கையை மையமாகக் கொண்டு காமெடியில் அதகளப்படுத்தியிருக்கும் குறும்படமே ‘முண்டாசுப்பட்டி’. ரெட்ரோ ஸ்டைல் கெட்டப்பில் குறும்படத்தில் லீட் ரோல் செய்திருந்தது காளி வெங்கட். பின்னர், திரைப்படமாகும்போது விண்கல்லை வானமுனி என வழிபடுவது, ஊர் ஜமீன்தார், சாமியார் என பல கிளைக் கதைகளோடு படமாகவும் பெரியளவில் வெற்றிபெற்றது. விஷ்ணுவிஷால், காளி வெங்கட், நந்திதா நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடியில் டிரெண்ட் செட்டிங் படமாகவே இருந்தது.
உதிரி – விழா
துக்க வீட்டில் பூக்கும் காதலை மையமாக் கொண்டு உருவான குறும்படம் தான் உதிரி. பாரதி பாலகுமாரன் இயக்கியிருந்தார். கமல்ஹாசன், பாலசந்தர் உள்ளிட்ட பலர் பாராட்டிய குறும்படம். இதுவே, மாஸ்டர் மகேந்திரன், மாளவிகாமேனன் நடிப்பில் ‘விழா’ எனும் பெயரில் படமானது. காதல் கதையை வித்தியாசமான பின்னணியில் சொன்னதே படத்தின் ப்ளஸ். துக்க வீட்டில் ஒப்பாரி பாட வந்த பொண்ணுக்கும், தப்பு அடிக்க வந்த பையனுக்கும் இடையே காதல், அதற்கு நடுவே சாதியப் பிரச்சினைகளை பேசிய படம் இது.
ஜில் ஜங் ஜக்
குறும்படத்தின் அடுத்த வெர்ஷன் ஃபைலட் ஃபிலிம். அந்த பிரிவில் தீரஜ் வைத்தி இயக்கத்தில் வெளியான படம் ‘ஜில் ஜங் ஜக்’. போதைப் பொருளைக் கடத்தும் மூன்று நண்பர்களுக்கு வரும் பிரச்னை, அதற்கு நடுவே நடக்கும் காமெடி அட்ராசிட்டி தான் ஜில் ஜங் ஜக். இந்த ஃபைலட் ஃபிலிம் பிடிச்சுப் போய், சித்தார்த்தே தயாரித்து நாயகனாகவும் நடித்தார்.
மாலை நேரம் - காதல் கசக்குதய்யா
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வயதில் மூத்த பெண்ணைக் காதலிக்கும் ஹீரோ மாதிரி, வயதில் மூத்தவரை காதலிக்கும் நாயகியின் கதையே ‘மாலை நேரம்’ குறும்படம். கொஞ்சம் மிஸ் ஆனாலும் தப்பா புரிந்துவிடும் அபாயம் இருந்தாலும், அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் த்வாரக் ராஜா. இதுதான் படமாக `காதல் கசக்குதய்யா' என மாறியது. த்ருவ் - வெண்பா, சார்லி முக்கிய ரோலில் நடித்திருப்பார்கள்.
மது – மேயாதமான்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் துவங்கிய ‘பென்ச் டாக்கீஸ்’ மூலமாக ஆறு குறும்படங்களைச் சேர்த்து ஒரே படமாக வெளியானது. அப்படி, வெளியான குறும்படங்களில் ஒன்று மது. ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு விடிந்தால் திருமணம். அதனால், நண்பர்களிடம் குடித்துவிட்டு புலம்பும் ஹீரோவின் கதையே களம். இந்த குறும்படம் செம ரீச். பின்னர், கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பாளராக களமிறங்கி, மதுவை ‘மேயாத மான்’ எனும் படமாக தயாரித்தார்.
கலரு - பஞ்சு மிட்டாய்
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் வெளியான இன்னொரு குறும்படம் `கலரு'. புதிதாக திருமணமான தம்பதியையும், ஒரு ஃபேண்டசி எலமென்ட்டையும் வைத்து காமெடியாக உருவான படம். இயக்குநர் எஸ்.பி.மோகன். இயக்கத்தில் காதல் சுகுமார், சென்ராயன் அட்டகாசமாக நடித்திருப்பார்கள். இதுதான்,, பஞ்சுமிட்டாய் எனும் பெயரில் மா.கா.பா.ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன் நடிப்பில் படமாக மாறியது.
கெக்கே பெக்கே கெக்கே பெக்கே - நான் சிரித்தால்
இணையத்தில் கோடிக்கணக்கில் குறும்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் கொஞ்சம் வித்தியாசமான குறும்படம் `கெக்கே பெக்கே கெக்கே பெக்கே'. டைட்டிலிலே வித்தியாசம் காட்டியிருப்பார்கள். Pseudobulbar affect எனும் வினோதமான பாதிப்பால் பாதிக்கப்படும் இளைஞன் சந்திக்கும் பிரச்சினைதான் களம். இந்தக் குறும்படமே, ஹிப்ஹாப் ஆதி நடிக்க ‘நான் சிரித்தால்’ எனும் படமாக சமீபத்தில் வெளியானது.
- தீரன்