மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 பிப் 2021

தமிழ் சினிமாவில் இயக்குநரைக் கரம்பிடித்த நடிகைகள்!

தமிழ் சினிமாவில் இயக்குநரைக் கரம்பிடித்த நடிகைகள்!

துல்கர்சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இந்தப் படத்தில் துல்கர்சல்மான், ரித்துவர்மா, விஜே ரக்‌ஷனுடன் நிரஞ்சனி அகத்தியன் லீட் ரோலில் நடித்திருப்பார். படப்பிடிப்பின் போது இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் காதலில் விழுந்தார் நிரஞ்சனி. இருவரின் திருமணமும் சமீபத்தில் சிறப்பாக நடந்துமுடிந்தது.

காதல் குடும்பம்

தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் தான் நிரஞ்சனி. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அகத்தியனின் மூன்று மகள்களின் கணவர்களுமே இயக்குநர்கள் தாம். இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள் கனி. விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார். இவரின் கணவர் இயக்குநர் திரு. இவர், தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர்.சந்திரமெளலி உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அகத்தியனின் இரண்டாவது மகள் நடிகை விஜயலட்சுமி. வெங்கட்பிரபுவின் சென்னை 28 படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சரோஜா, பிரியாணி, சென்னை 28 II உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவரின் கணவர் ஃபெரோஸ். இவர் கிருஷ்ணா, ஆனந்தி நடித்து 2017ல் வெளியான பண்டிகை படத்தை இயக்கியவர். இப்போது, அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனியும் இயக்குநரை காதலித்து கரம்பிடித்திருக்கிறார். இப்படி, தமிழ் சினிமாவில் இயக்குநரை காதலித்து கரம்பிடித்த இன்னும் சில நடிகைகளும் இருக்கிறார்கள்.

குஷ்பு - சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்குநராக அறிமுகமான படம் முறைமாமன். இந்தப் படத்தில் நாயகியாக குஷ்பு நடித்திருந்தார். இப்படம், 1995ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படப்பிடிப்பில் இருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர், 2000ஆண்டு மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ரோஜா - ஆர்.கே.செல்வமணி

1992ல் செம்பருத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. இவரை இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. இந்த கூட்டணியில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியானது. ‘அதிரடிப் படை’, ராஜமுத்திரை’, ‘ராஜாளி’, ‘அடிமை சங்கிலி’, ‘அரசியல்’, ‘பொட்டு அம்மன்’ மற்றும் ‘குற்றப் பத்திரிக்கை’ என ஆர்.கே.செல்வமணியின் படங்களில் ரோஜா நடித்திருப்பார். இருவருக்கும் இடையிலான நல்ல ஒற்றுமையினால் 2002ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

சோனியா அகர்வால்- செல்வராகவன்

தனுஷ் நடித்து வெளியான காதல் கொண்டேன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். அதன்பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களிலும் சோனியா அகர்வால் நடித்திருந்தார். புதுப்பேட்டை வெற்றிக்குப் பிறகு செல்வாவும் சோனியா அகர்வாலும் காதலித்து 2006ல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், நீண்ட நாட்கள் இந்த இணை நீடிக்கவில்லை. கருத்துவேறுபாட்டினால் 2010ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர்.

அமலா பால் - விஜய்

மைனா படத்தின் மூலம் நடிகையாக ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அமலா பால். அதுமட்டுமல்லாமல், இயக்குநர் விஜய் கவனத்தையும் சேர்த்தே ஈர்த்தார். விஜய் இயக்கிய தெய்வத் திருமகள் படத்தில் அமலா பால் நடித்தார். தொடர்ந்து, விஜய் நடித்த தலைவா படத்திலும் நாயகியாக்கி அழகு பார்த்தார் இயக்குநர் விஜய். தலைவா ரிலீஸான சில மாதங்களில் காதலை உலகுக்கு அறிவித்துவிட்டு, இருவரும் 2016ல் திருமணமும் செய்துகொண்டனர். இந்த இணை ஒரே வருடத்தில் பல்வேறு காரணங்களால் பிரிந்து விட்டது.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

சனி 27 பிப் 2021