மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா த்ரிஷ்யம் 2.. படம் எப்படி?

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா த்ரிஷ்யம் 2.. படம் எப்படி?

ஒரு படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டால், அதன் இரண்டாம் பாகங்கள் உருவாவது இயல்பு. அப்படி, இரண்டாம் பாகம் வெளியாகும் போது, முதல் பாகம் ஏற்படுத்திவிட்டு சென்ற எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி, த்ரிஷ்யம் 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?

மோகன்லால், மீனா, ஆஷா சரத், சித்திக் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான படம் த்ரிஷ்யம். இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய ஹிட். எந்த அளவுக்கு என்றால், தெலுங்கு, இந்தி, கன்னடம், தமிழ் மொழிகளில் ரீமேக் ஆனது. அதோடு, சிங்களம் மற்றும் சீன மொழியிலும் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் எனும் பெயரில் வெளியானது. இந்தப் படம் ரீமேக் ஆன எல்லா மொழிகளிலுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகமாக, த்ரிஷ்யம் 2 நேரடியாக பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்திருக்கிறது. கதை இதுதான்... முதல் பாகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டரான ஜார்ஜ் குட்டி குடும்பத்துடன் வசித்துவருகிறார். திடீரென ஒரு சிக்கலை எதிர்கொள்கிறார். ஜார்ஜ் குட்டி குடும்பத்தினரால் கொலை நடந்துவிடுகிறது. சாமான்ய மனிதர்களால் கட்டமைக்கப்படும் எளிய குடும்பம் , அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டு சிக்கலை எப்படி எதிர்கொண்டது என்பதே கதை. முதல் பாகத்தின் இறுதியில், கொலை செய்யப்பட்ட வருணின் உடலை கட்டப்பட்டுவந்த காவல் நிலையத்தின் தரையில் புதைத்திருப்பார் ஜார்ஜ் குட்டி.

இரண்டாம் பாகம், ஆறு வருடத்திற்குப் பிறகு இங்கிருந்து தான் துவங்குகிறது. வருண் கொலை செய்யப்பட்ட வழக்கில், சின்ன துப்பு கிடைத்துவிடாதா என காத்துக் கிடக்கிறது போலீஸ். கேபிள் ஆபரேட்டரான மோகன்லால் ராணி எனும் தியேட்டர் ஒன்றைக் கட்டிவிடுகிறார். சினிமாவில் படமொன்றை தயாரிக்கத் தயாரிப்பாளராகும் முயற்சியிலும் இருப்பார். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட வருணின் பிரேதம் காவல் நிலையத்தில் இருப்பதை போலீஸ் கண்டுபிடித்துவிடும். மீண்டும், ஜார்ஜ் குட்டி குடும்பத்துக்குச் சிக்கல் வந்துவிட, இந்தச் சிக்கலை எப்படி எதிர்கொண்டனர் என்பதே இரண்டாம் பாகத்தின் கதை.

ரகசியம் என்பது எல்லாக் காலத்திலும் ரகசியமாக இருக்காது. ஜார்ஜ் குட்டி குடும்பம் தான் வருணை எங்கோ கொலை செய்து மறைத்து வைத்திருக்கிறது என்பதும் , முதல் பாதியிலேயே வருண் பிரேதத்தை கண்டு பிடித்துவிடுவதுமாக அனைத்து சஸ்பென்ஸையும் ஓபன் செய்துவிடுகிறார் இயக்குநர். அதன்பிறகு, ஒவ்வொரு முடிச்சாக அழித்துவிட்டு முடிக்கும் போது த்ரில்லரில் உச்சம் பெறுகிறது படம்.

ஜார்ஜ் குட்டி குடும்பத்துடன் நெருக்கமாக பழகும் சரிதா கேரக்டர் முன்கூட்டியே கணித்துவிட முடிகிறது. அதுமாதிரி, திரைக்கதையாசிரியராக வரும் கேரக்டரும் பலவீனமாக இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களின் புரளி பேச்சும் டெம்ப்ளேட். இருந்தாலும் படத்தில் பெரிதாக தொல்லை தரவில்லை.

மோகன்லாலின் வீடு, ஊர்மக்கள், காவல் நிலையம், டீ கடை என அனைத்தையுமே அப்படியே மீண்டும் பிரதிபலித்திருக்கிறார்கள். முதல் பாகம் எந்த வேகத்தில் சென்றதோ, அதே வேகத்தில் எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் இரண்டாம் பாகமும் நகர்கிறது.

மோகன்லால், மீனா, இரண்டு மகள்கள் என அனைவருமே நடிப்பில் அசத்துகிறார்கள். குறிப்பாக, மோகன்லால் கேரக்டருக்கு தான் அதிகமாக ஒர்க் செய்திருக்கிறார் இயக்குநர். புதிதாக மோகன்லாலுக்கு குடிபழக்கம், சினிமா தயாரிப்பாளர், தியேட்டர் என மோகன்லாலின் புதிய கேரக்டர்கள் இறுதியாக படத்தோடு இணையும் இடம் ஆவ்ஸம்.

ஒரு படத்தை முதல் பாகத்தில் கொண்டாடித்தீர்த்துவிட்டால், அதன் இரண்டாம் பாகத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை வைத்துவிடுவார்கள் ரசிகர்கள். அதனால், பெரும்பாலான பார்ட் 2 படங்கள் வெற்றிபெற முடியாமல் தோல்வியை அடைந்திருக்கிறது. ஆனால், புத்திசாலித்தனமான திரைக்கதையால் படத்தை முழுமையடைய வைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப். பெரிதாக மெனக்கெடாமல் முதல் பாகம் கொடுத்த உணர்வை கெடுத்துவிடாமல், இரண்டாம் பாகத்தைக் கொடுத்திருக்கிறார்.

குடும்பத்தை காப்பாற்ற எடுத்த சபதத்திற்காக ஆறு வருடமாக ஒரு சாதாரண மனிதன் ஒரு தருணத்திற்காகக் காத்திருக்கிறார். அந்த நேரம் வரும்போது எப்படி செயல்படுகிறார் என்ற லைனும், அதை காட்சியில் நிறைவேற்றியதுமாக த்ரிஷ்யம் 2 முழுமையாக மனதில் நிறைகிறது. நிச்சயம் மீண்டும், எல்லா மொழிகளிலும் ரீமேக் ஆகும் என்பதிலும் சந்தேகமில்லை. முதல்கட்டமாக, தெலுங்கு ரீமேக் மார்ச்சில் துவங்குகிறது. அப்படியே, கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் 2 படத்தையும் எதிர்பார்க்கலாம். நிச்சயம் வரும்!

- தீரன்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

சனி 20 பிப் 2021