மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 பிப் 2021

சக்ரா படத்துக்கு இடைக்காலத் தடை? கூடுதலாக புதியதொரு சிக்கல் !

சக்ரா படத்துக்கு இடைக்காலத் தடை? கூடுதலாக புதியதொரு சிக்கல் !

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோபோ சங்கர் நடிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சக்ரா’. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படம் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாவது உறுதியாகியிருக்கிறது. விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தான் படத்தைத் தயாரித்துள்ளது.

முதலில், இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட இருந்தது படக்குழு. அதற்கு படம் தயாராவதற்கு முன்பே பெரிய தொகைக்கு விலை பேசிவைத்திருந்தார் விஷால். ஆனால், அது நடக்கவில்லை. சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டிய படம் வெளியாகாமல் போனதற்கும் காரணம் இருக்கிறது.

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ஆக்‌ஷன். கடந்த 2019-ல் இந்தப் படம் வெளியானது. பெரும்பொருட் செலவில் உருவாகி, தோல்விப் படமானது. இந்தப் படத்தினால் பெரிதளவில் நஷ்டத்தினைச் சந்தித்தார் தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன். இந்த நஷ்டத்திற்கு விஷாலே பொறுப்பேற்றார். அதன்படி, ரவீந்திரனுக்கு 8.29 கோடி ரூபாய் தொகையைத் திருப்பித் தருவதாக விஷால் ஒப்பந்தம் செய்திருந்தார். அதைத் திரும்பக் கொடுக்கவில்லை. அதோடு, டிரைடெண்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு நடிக்க இருந்த கதையை விஷாலே தயாரித்து சக்ரா படத்தில் நடித்துவருகிறார் என்பதால், நீதிமன்றத்தை நாடினார் டிரைடெண்ட் ரவீந்திரன்.

இந்நிலையில், புதிய சிக்கல் ஒன்று வந்திருக்கிறது. லைகா நிறுவனத்திடமிருந்து சுமார் 25 கோடி ரூபாயை விஷால் வாங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. லைகா பேனரில் பணத்திற்கு ஈடாக நடிக்க வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அதுவும் நடக்கவில்லை. அந்தப் பணத்தையும் திருப்பித் தரவில்லை. இந்த தொகை குறித்து பேசுவதற்காக லைகா நிறுவனத்தால் விஷாலை கையில் பிடிக்கவும் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது விஷாலின் சக்ரா படம் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படத்துக்கு தடைகோரி நீதிமன்றம் செல்ல இருக்கிறதாம் லைகா நிறுவனம்.

லைகா சிக்கல் ஒரு பக்கம் பூதாகரமாக உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏற்கெனவே டிரைடெண்ட் நிறுவனம் தொடர்ந்திருந்த வழக்கு நேற்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ‘ஏற்கெனவே எங்களுடைய தயாரிப்பு தரப்பிற்காக ஒப்பந்தம் செய்த கதையை, விஷால் தயாரிக்க சக்ரா எனும் பெயரில் இயக்குநர் ஆனந்தன் இயக்குகிறார். இது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சக்ரா படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளார். அதோடு, உடனடியாக பதிலளிக்கும் படி நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஆனந்தன் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில், விசாரணை மீண்டும் நாளை (பிப்ரவரி 18) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் பெரிய நெருக்கடி தரும் ஒன்றாக விஷாலுக்கு இது அமையும் என்றே சொல்கிறார்கள். ஆக, விஷாலின் சக்ரா வெளியாவது கஷ்டம் தான் என்றும் சொல்லப்படுகிறது.

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

புதன் 17 பிப் 2021