மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

தல தளபதி சண்டையிலிருந்து இன்றைய நடிகர்கள் கற்க வேண்டிய பாடம் !

தல தளபதி சண்டையிலிருந்து இன்றைய நடிகர்கள் கற்க வேண்டிய பாடம் !

எம்.ஜி.ஆர் - சிவாஜி , ரஜினி - கமல், விஜய் - அஜித், விக்ரம் - சூர்யா, தனுஷ் - சிம்பு வரிசையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி என திரைத்துறையில் நடிகர்கள் மத்தியில் இருந்த போட்டியினால் தான் பெரிய வெற்றியைப் பெற்றார்கள். ஆக, போட்டி இல்லையென்றால் வெற்றி இல்லை. குறிப்பாக, நடிகர்கள் மத்தியில் இருக்கும் போட்டியானது படங்களில் வெளிப்படும். நடிகர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்தப் பட இயக்குநரும் பாடலாசிரியரும் படத்தில் வசனங்களாகவோ, பாடல் வரிகளாகவோ போட்டி நடிகரை வம்புக்கு இழுப்பார்கள். அதற்கு அந்த நடிகரும் பதிலடி கொடுப்பதெல்லாம் வழக்கம்.

சமீபத்தில், சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியானது. அதில் சிம்பு இப்படி ஒரு வசனம் பேசியிருப்பார். ‘நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா.... நான் காக்குறதுக்காக வந்திருக்க ஈஸ்வரன்டா...” என்பார். தனுஷின் அசுரன் படத்தை மனதில் வைத்தே இப்படியான ஒரு வசனம் ஈஸ்வரன் படத்தில் இருக்கும். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் பெயருக்குக் கீழ் அசுரன்/ஆக்டர் என புரொஃபைலை மாற்றினார். இது இன்று நேற்றல்ல.... ரஜினி காலத்திலிருந்தே நடந்துவரும் சம்பவம். அப்படியாக, அஜித் - விஜய் நடுவில் நடந்த சில ஜாலி சண்டைகள் என்னென்ன என்பதை மட்டும் பார்க்கலாம்.

திரைத்துறையில் அஜித், விஜய் இருவருமே ஒரே காலக்கட்டத்தில் சினிமாவுக்குள் வந்தார்கள். 2000த்துக்குப் பிறகு தான், அஜித்துக்கும் விஜய்க்கும் இணையான அளவுக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமானது. அப்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீனா படத்தில் ஒரு வசனம் வரும். ‘தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது’ என மகாநதி சங்கர் பேசும் வசனம் அது. வால் என விஜய்யை சீண்டுவதாக அந்த நேரத்தில் பேசப்பட்டது. தினா படத்துக்குப் பிறகு விஜய்க்கு புதிய கீதை படம் வெளியானது. அதில், வில்லன் ஒரு வசனம் பேசுவார். ‘ டேய் இருடா, என் தலையோட வாரேன்’ என்ற வசனத்துக்கு பதிலாக விஜய் இப்படி கூறுவர். ‘உன் தல வாலு முண்டம் மொத்தமா எல்லாத்தையும் கூட்டிட்டுவா ’ இந்த வசனம் ‘தல’அஜித்தை கிண்டல் செய்வதாகவே பார்க்கப்பட்டது.

மற்றுமொரு சான்றாக, விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் ஒரு வசனம் வரும். ‘வாழ்க்கைங்கிறது ஒரு வட்டம்டா... தோக்குறவன் ஜெயிப்பான்... ஜெயிக்கிறவன் தோப்பான்...’ இந்த வசனத்துக்கு பதிலடியாக, அஜித்தின் ஜனா படத்தில் ஒரு வசனம் வரும். ‘ என்னோட வாழ்க்கை ஒரு வட்டமோ, சதுரமோ இல்லை... எனக்கது நேர்கோடு தான். முன்னாடி போய்ட்டே இருப்பேன்’ என்று விஜய்க்கு பதிலடி கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் அஜித்.

வசனங்கள் மட்டுமல்ல, பாடல் வரிகளுமே போட்டி நடிகரை தாக்குவதாகவே பெரும்பாலும் இடம்பெறும். சான்றாக, அஜித்தின் அட்டகாசம் படத்தில் வரும் ‘உனக்கென்ன’ பாடலைக் கூறலாம். விஜய்யை தாக்கியே இந்தப் பாடல் உருவானதாக சமீபத்தில் சரண் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தது நினைவுக்கூறத்தக்கது. உனக்கென்ன பாடலில்,

ஏற்றிவிடவோ தந்தை இல்லை,

ஏந்திக்கொள்ளவோ தாய் மடி இல்லை

என்னை நானே சிகரத்தில் வைத்தேன்..

உனக்கென்ன உனக்கென்ன..

- என பாடல் வரிகள் இடம்பெரும். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும், தாய் சோபாவையும் மனதில் கொண்டே எழுதியிருப்பார் பாடலாசிரியர் வைரமுத்து . இதே பாடலில் வரும் இன்னொரு வரியில்,

ஹிட்லர் ஆக வாழ்வது கொடிது,

புத்தனாக வாழ்வது கடிது,

ஹிட்லர் புத்தர் இருவருமாய்

நான் இருந்தால் உனக்கென்ன ?

- இந்த பாடல் வரிக்கு பதிலடியாக, விஜய் நடித்த சச்சின் படத்தில் வரும் ‘வா வா வா என் தலைவா’ பாடலில்

ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்

புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்

உன்னை என்னைப் போல் வாழ்ந்தால்

போதும் உலகம் ரொம்ப அழகு”

- என திருப்பி அடித்திருப்பார் விஜய். இந்த மாதிரி மாறி மாறி வசனங்கள் வைப்பதும், பாடல் வரிகள் இடம்பெறுவதும் ரசிகர்களை குஷிப்படுத்தவே மேற்கொள்ளப்பட்டது. அதுவே, தல -தளபதி சண்டைக்கு தூபம் போடுவதாக இருப்பதை இரண்டு நடிகர்களும் உணர்ந்த பிறகு, மாற்றி மாற்றி சீண்டிக் கொண்ட விஜய்யும் அஜித்தும் அதன்பிறகு அந்த செயலை கைவிடுவதாக முடிவெடுத்தார்கள். அதன்பிறகு, அஜித் படத்தில் விஜய்யை புகழ்வது போலவும், விஜய் படத்தில் அஜித்தை புகழ்வது போலவும் காட்சிகள் சில படங்களில் இடம் பெற துவங்கியது. அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில், தியேட்டரில் காவலன் படம் ஓடும். விஜய் ரசிகர்கள் விசிலடித்துக் கொண்டாடுவது போன்ற காட்சி இருக்கும்.

இரண்டு நடிகர்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டியை படத்தில் காட்டுவதெல்லாம் மலையேறிப்போன சப்ஜெக்ட். இப்போது பெரும்பாலும் எந்த நடிகரும் அப்படியான ஒன்றை செய்வதில்லை. சான்றாக, தற்பொழுது வளர்ந்துவரும் போட்டி நடிகர்களென்றால் சிவகார்த்திகேயனையும் விஜய்சேதுபதியையும் கூறலாம். அவர்களின் படத்தில் போட்டி நடிகர்களை கொண்டாடும் விதமாகவே காட்சிகளை அமைக்கிறார்கள். இப்போது, ரசிகர்களும் அப்படியான சீண்டல்களை விரும்புவதில்லை என்பதே நிதர்சனம்.

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

ஞாயிறு 14 பிப் 2021