மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 பிப் 2021

சென்னை டெஸ்ட்: இந்தியாவின் அதிரடி தொடருமா?

சென்னை டெஸ்ட்: இந்தியாவின் அதிரடி தொடருமா?

சென்னை சேப்பாக்கம் டெஸ்டில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 178 ரன்களில் ஆல் அவுட் ஆக, தொடர்ந்து விளையாடும் இந்தியா வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்டின்போது அதிரடி காட்டி வென்ற இந்திய அணி, நாளை நடைபெறவிருக்கும் கடைசி நாள் ஆட்டத்திலும் இந்த அதிரடியை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218 ரன்) அடித்தார்.

இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று (பிப்ரவரி 7) நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் இழந்து மொத்தம் 578 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. டாம் பெஸ் 34 ரன்களிலும், ஆண்டர்சன் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜாக் லீச் 14 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா (6 ரன்கள்), சுப்மான் கில் (29 ரன்கள்)ஆர்ச்சரின் பந்து வீச்சில் வீழ்ந்தார். இதன் பின்னர் புஜாராவும், கேப்டன் விராட்கோலியும் கைகோர்த்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி (11 ரன்கள்) ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே (1 ரன்) டாம் பெஸ்சின் பந்தில் அவுட் ஆனார். அப்போது இந்தியா 73 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தள்ளாடியது.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் புஜாராவுடன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். புஜாரா நிதானத்தை காட்ட, பண்ட் எல்லா பந்துகளையும் அடித்து ஆடினார். இந்திய அணியின் ஸ்கோர் 192 ரன்களாக உயர்ந்தபோது புஜாரா (73 ரன்கள்) ஆட்டம் இழந்தார். சிறிது நேரத்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பண்ட் (91 ரன்கள்) அவுட் ஆனார்.

இதன் பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், அஸ்வினும் ஜோடி சேர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணியினர் முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 257 ரன்கள் எடுத்தனர்.

வாஷிங்டன் சுந்தரும், அஷ்வினும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 321 ரன்கள் பின்தங்கியது.

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 8) நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்தார். அஷ்வின் அவருக்கு உறுதுணையாக விளையாடினார். ஆனால் 31 ரன்களில் அஷ்வின் வெளியேறியது அணிக்குப் பின்னடைவாக அமைந்தது. அதன் பின்பு வந்த ஷபாஸ் நதீம், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் அற்புதமாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இந்தியா 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 91, வாஷிங்டன் சுந்தர் 85 (நாட் அவுட்), புஜாரா 73 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 4, வீச், ஆர்ச்சர், ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்தியா பாலோ ஆன் முடிவை தவிர்க்க 41 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ரோரி பேர்ன்ஸை வீழ்த்தி அசத்தினார் அஷ்வின். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜோ ரூட் அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். ஒல்லி போப் 28 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 ரன்களும், டாம் பெஸ் 25 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

அஷ்வின் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 241 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஓட்டுமொத்தமாக 419 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது.

420 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 20 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாக் லீச்சின் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து விளையாடிய கில் 15 ரன்களுடனும் புஜாரா 12 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை வீழ்த்த இன்னும் 381 ரன்கள் தேவை. அந்த அதிரடி ஆட்டத்தை நாளை (பிப்ரவரி 9) நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியினர் வெளிப்படுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 8 பிப் 2021