மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

சுழற்பந்து வீச்சு என்னும் வண்ணக்கடல்!

சுழற்பந்து வீச்சு என்னும் வண்ணக்கடல்!

தினேஷ் அகிரா

சுழற்பந்து வீச்சு ஓர் அற்புதமான கலை. ஒரு செயலை திட்டமிட்டு நுட்பமாக செய்து முடிப்பவனே கலைஞன். மூச்சிரைக்க ஓடிக் களைக்காமல் சில அடிகள் எட்டிவைத்து பந்தை நினைத்த வாக்கில் பேசச் செய்யும் ஆற்றல் ஒரு சுழலருக்கு மட்டுமே உண்டு. சுழற்பந்து வீச்சு அறிவுஜீவிகளுக்கானது என்றொரு பார்வை இதன் காரணமாகத்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்கள் கிரிக்கெட் குறித்த ஆழ அகலமான புரிதலைக் கொண்டிருப்பவர்கள். ஓய்விற்குப் பிறகு நிறைய சுழற்பந்து வீச்சாளர்கள் ரிச்சி பெனாட் வழியில் கிரிக்கெட் வர்ணனையாளராக உருமாறுவதை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தாங்கள் கற்ற நுட்பங்களையும் அனுபவங்களையும் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென விரும்பும் கதைசொல்லிகள் அவர்கள். இன்னொரு தரப்பினர் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்லி மாலெட்டைப் போல எழுத்துலகை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

லெக் ஸ்பின்னருக்கு ஏன் மவுசு?

சுழற்பந்து வீச்சைப் பொறுத்தமட்டில் புள்ளியியல் சாதனைகள் ஒரு பொருட்டே அல்ல. 160 சொச்சம் விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ள எரப்பள்ளி பிரசன்னாதான் இன்றைக்கும் உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர். பிரசன்னாவின் பந்து வீச்சை காணும் கொடுப்பினை இல்லாதவர்கள் குறைந்தது அவருடைய நேர்காணல்களையாவது வாசிக்க வேண்டும். பொறியியலாளர் என்பதால் aero dynamics, fish effects போன்ற நுட்பங்களை தன்னுடைய பந்து வீச்சில் பயன்படுத்திக் கொண்டவர் அவர். பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்கள் கல்லூரி படிப்பை முடித்தவர்கள். பிரசன்னா, கும்ப்ளே தொடங்கி தற்போது அஸ்வின் வரை நிறைய பேர் பொறியியல் படிப்பை முடித்தவர்கள். வேகப்பந்து வீச்சாளர்களைப் போலல்லாமல் அந்திமத்தில் தங்கள் ஆட்ட வாழ்வின் உச்சத்தை தொட்டவர்கள். இன்னொரு சுவாரஸ்யமான ஒற்றுமை பெரும்பாலானவர்கள் தங்களுடைய சகோதரர்களிடம் இருந்து சுழற்பந்து வீச்சைக் கற்றுத் தேர்ந்தவர்கள். தேச அபிமானங்களை தாண்டி சுழற்பந்து வீச்சாளர்களிடையே சகோதரத்துவம் குடி கொண்டிருப்பது இதனால் தானோ என்னவோ. தங்களுடைய நுட்பங்களை மறைத்து வைத்துக் கொள்ளாமல் பெருந்தன்மையுடன் சக வீரர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர்கள். மட்டையாளரின் இரு பக்கமும் பந்தைச் சுழல செய்வதால் ஆஃப் ஸ்பின்னர் காட்டிலும் லெக் ஸ்பின்னருக்கு ரசிகர்களின் அபிமானம் அதிகம். மரபான லெக் சுழல் தவிர Flipper, slider, wrong'un, Top spinner முதலிய எண்ணற்ற வாய்ப்புகள் மற்றும் வண்ணங்கள் அவர்களுடைய மணிக்கட்டில் உண்டு. ஆஃப் ஸ்பின்னரோ திரைப்படங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் ஆனால் முக்கியத்துவம் இல்லாததாக கருதப்படும் குணச்சித்திர பாத்திரம். மட்டையாளருக்கு உள்நோக்கி செல்லும் மரபான ஆஃப் ஸ்பின் உடன் சேர்த்து Floater, Top spinner உள்ளிட்ட ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே அவர்களுக்கு உண்டு. வெறுங்கண்களுக்கு புலப்படாத அளவுக்கு மிகவும் நுட்பமானவை அவை.

கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு பாணியிலான சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் முத்திரையை பதித்துச் சென்றுள்ளனர். கேரி சோபர்ஸ் இடக்கை ஆஃப் ஸ்பின் மற்றும் சைனாமேன் எனப்படும் இடக்கை லெக் ஸ்பின்னை திறம்பட வீசியவர். இதைத் தவிர்த்து மிதவேக சுழற்பந்து வீச்சு என்கிற வகைமையும் இருந்துள்ளது. கும்ப்ளே, அஃப்ரிடி போல வேகமாக சுழற்பந்து வீசுகிறவர்கள் அல்ல; சுழற்பந்து வீச்சு மற்றும் மித வேகப்பந்து வீச்சை கலந்து வீசுபவர்கள். தற்காலிக உதாரணம் ஆஸ்திரேலியாவின் காலின் மில்லர். ஒவ்வொரு சுழலருக்கும் தனித்துவமான grip உண்டு. பெனாட் வீசிய Flipper - ன் grip வார்னிடம் இருந்து வித்தியாசமானது. ஜேக் ஐவர்சன் போல நடுவிரலை நிமிட்டி பந்தை பேசவைத்த லெக் ஸ்பின்னர்களும் உண்டு. பொதுவாக இதுபோன்ற மர்ம சுழலர்களின் வாழ்வும் புதிராகவே இருந்துவருகிறது. ஐவர்சன் தற்கொலை செய்து கொண்டவர். இன்னொரு சுவாரஸ்யம் பிரசன்னாவிற்கு பிறகு மரபான சுழற்பந்து வீச்சைக் கொண்டு உச்சத்தை அடைந்த கிரேம் ஸ்வானின் பந்தைப் பிடிக்கும் முறை ( Grip) நடைமுறையில் இருந்து மாறுபட்டது. இதைத் தவிர ஒவ்வொரு தேசத்திற்கும் பாரம்பரியமாக ஒரு சுழற்பந்து வீச்சுப் பாணி உண்டு. பிரசன்னாவில் இருந்து அஸ்வின் வரை இந்தியா தொடர்ந்து ஆஃப் ஸ்பின்னர்களை உருவாக்கி வருகிறது. மன்கட், பேடி போன்றவர்கள் இடக்கை சுழற்பந்து வீச்சுசுக்கு முன் உதாரணங்களாக இருந்தாலும் , சந்திரா, கும்ப்ளே போன்றவர்கள் ஜாம்பவான்கள் லெக் ஸ்பின்னுக்கு குறைவைக்கவில்லை என்றாலும் ஆஃப் ஸ்பின் தான் இந்தியாவின் அடையாளம். ஆஃப் ஸ்பின்னர்களில் எண்ணற்ற வகைமைகள் இந்தியாவில் உண்டு என்கிறார் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து ஓர் அற்புதமான நூலை எழுதியுள்ள ஹைதராபாத்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ராம் நாராயண். முன்பே பார்த்தது போல ஆஃப் ஸ்பின்னர்கள் நடைமுறைவாதிகள். தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்தி மேலேற நினைக்கும் இந்திய மனநிலை ஆஃப் ஸ்பின்னை விரும்பியதில் ஆச்சர்யமில்லை. சுழற்பந்து வீச்சின் மீது இந்தியர்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு இதுபோன்று பல்வேறு காரணங்களை முன்வைக்கிறார் கிரிக்கெட் வரலாற்று ஆய்வாளர் அமோல் ராஜன். சுழற்பந்து வீச்சாளர்களை பற்றி இவர் எழுதிய Twirlmen, An unlikely History of cricket's greatest spin bowlers புத்தகம் ஒரு கிளாசிக்.

காலநிலையும் பாரம்பரியமும்

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவில் கால் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்திற்கு அந்த நாடுகளின் காலநிலையும் பாரம்பரியமும் முக்கிய காரணங்கள். அதேநேரம் ஆஃப் ஸ்பின் என்று வரும்போது இரு நாடுகளும் மாறுபட்ட உத்தியைக் கையில் எடுப்பதைக் காணமுடியும். உதவியற்ற களங்களால் மனதுடைந்த பாகிஸ்தானியர்கள் தூஸ்ராவை ஒரு கேடயமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் நடைமுறைகள் மீதான மீறல் குறித்து அசூயை கொண்ட ஆஸ்திரேலியர்கள் துஸ்ராவை ஏற்பதில்லை. ஆஸ்லி மாலெட், டிம் மே தொடங்கி நேதன் லயன் வரை எல்லாருமே over spin செய்யக் கூடிய மரபான சுழற்பந்து வீச்சாளர்கள்.இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணி இடக்கை சுழற்பந்து வீச்சு பாணிக்கு பெயர் போனது. ஈரப்பதம் மிகுந்த இவ்விரு நாடுகளிலும் ஒரு சுழலர் வெற்றிகரமாக செயல்படத் தேவையான மாறுபட்ட கோணத்தை இடக்கை சுழற்பந்து வீச்சு மட்டுமே நல்கியது. வங்கதேச அணி உருவான நாளில் இருந்தே ஷகிப் உல் ஹசன் மாதிரியான தரம் வாய்ந்த இடக்கை சுழற்பந்து வீச்சளர்களை உருவாக்கி வந்துள்ளது.

யிங் யாங்: முரளியும் வார்னும்

ஒரு வசதிக்காக புத்தாயிரத்தை அடிப்படையாக வைத்து அதிலிருந்து முன்னும் பின்னும் முத்திரை பதித்தவர்களை ஒரு பட்டியலுக்குள் அடக்கினால் அதில் வார்னும் முரளிதரனும் முதலிரு இடங்களைப் பிடிப்பர். முதலிடம் யாருக்கு என்பதை புள்ளியியல் தரவுகளைத் தாண்டி தீர்மானிப்பவரின் பார்வைக் கோணத்திற்கும் முக்கிய இடமுண்டு. அமோல் ராஜன் யிங் யாங் தத்துவத்தை கொண்டு இவ்விருவரையும் அணுகுகிறார். வார்ன் ஒரு மரபான லெக் சுழற்பந்து வீச்சாளர் என்றாலும் அவருடைய பாணி சற்றே நடைமுறைக்கு மாறானது. சகப் போட்டியாளர் மெக்கில் போல அவர் Middle and off லைனில் வீசுபவர் அல்ல. Leg and Middle பக்கம் வீசி மட்டையாளரை சுழலுக்கு எதிர்த்திசையில் விளையாட நிர்பந்திப்பவர். அவருடைய கட்டற்ற சுதந்திரத்திற்கு சிறு பிராயத்தில் கிரிக்கெட் அவரது முதனிலை தேர்வாக இல்லாததும் பிற லெக் சுழலர்கள் போல பந்தை இறுக்கமான பிடிக்காத தனித்துவமான Grip - ம் ஒரு காரணம். மறுபுறம் தீவுத் தேசத்தில் சிறுபான்மை தமிழனாகப் பிறந்த முரளிதரன் கிரிக்கெட் உலகின் சர்ச்சைக்கு உண்டான சிறுபான்மை அம்சமான தூஸ்ராவை தனது முக்கிய ஆயுதமாக வரித்துக் கொண்டவர். வார்ன் போல கீழ் இருந்து மேலாக (Over spin) இல்லாமல் பந்தை இடவலமாகத் திருப்புவதில் நாட்டம் மிகுந்தவர். துஸ்ராவிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரமாதின் தொடங்கி முஷ்டாக் வரை உரிமை கொண்டாடினாலும் அதை முக்கிய பாணியாக வளர்த்தெடுத்தது முரளிதான்.

தூஸ்ராவும் கேரம் பந்தும்

அதற்கடுத்த இடத்தைப் பிடிப்பதற்கு தகுதியானவர் இந்தியாவின் அனில் கும்ப்ளே. இருபதாம் நூற்றாண்டில் கூக்ளி பந்துவீச்சு எனும் வகைமைக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர். கிரிக்கெட்டை தொழில்முறையாக அணுகிய ஒரு சில இந்தியர்களில் கும்ப்ளே வும் ஒருவர். பாகிஸ்தானின் லெக் ஸ்பின்னர் முஸ்டாக் அஹ்மது ஆஃப் ஸ்பின்னர் சக்லைன் முஷ்தாக்கிற்கும் இந்த வரிசையில் ஓர் இடமுண்டு. ஆரம்ப நாட்களில் கட்டற்றுத் திரிந்த இவ்விருவரும் காலப்போக்கில் மத நம்பிக்கைகளில் தீவிரம் கொண்டவர்களாக மாறினர். இதுவும் பாகிஸ்தானியர்களுக்கே உரித்தான தனித்துவம். தூஸ்ராவை அதிகப்படியாக உபயோகித்தால் தங்களுடைய பந்துவீச்சு ரிதமை இழந்தவர்கள் வரிசையில் முக்கியமானவர் முஷ்தாக். வெளிப்பார்வைக்கு ஆக்ரோஷமான ஆனால் உள்ளே பலகீனமான இதயம் படைத்த பஞ்சாபின் ஹர்பஜன் சிங்கும் முக்கியமான சுழலரே. தூஸ்ரா மீது கொண்ட அதீத மோகத்தால் தன்னுடைய சுண்டி இழுக்கும் அதீத பெளன்ஸ் மற்றும் இட வலமாக பந்தை சுழற்றும் திறனை இழந்தவர். பிற்காலத்தில் ஒரு Top spinner மட்டுமே இவருடைய முக்கிய ஆயுதமாக மாறியது. முரளியின் நிழலில் விளையாடிய ரங்கனா ஹெராத் தன்னுடைய இடக்கை சுழற்பந்து வீச்சோடு சேர்த்து துரிதமாக பந்தை உள்நோக்கி திருப்பும் கேரம் பந்து வீசுவதிலும் வல்லவர்.

அஸ்வின்: ஒரு புரியாத புதிர்

இந்த யுகத்தின் முக்கியமான மற்றொரு இடக்கை சுழற்பந்து வீச்சாளரென நியூசிலாந்தின் வெட்டோரியை சொல்லலாம். முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பந்தை திருப்ப முடியாமல் அவதிப்பட்ட இவர் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மாலெட்டின் அறிவுரைப்படி starighter one எனப்படும் நேர்நோக்கி செல்லும் பந்தை தனக்கான பாணியாக வகுத்துக் கொண்டார். வெட்டோரியின் வலக்கை வடிவம் இங்கிலாந்தின் கிரேம் ஸ்வான். தூஸ்ரா, கேரம் பந்து போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் Drift, Dip உள்ளிட்ட நுட்பங்களை சரியாக பயன்படுத்தி உலகின் முதனிலை ஆஃப் ஸ்பின்னராக உயர்ந்தவர். இவருக்கு அடுத்த இடத்தை இங்கிலாந்தின் மாண்டி பனேசருக்கு அளிக்கலாம். தன்னுடைய உள்நோக்கி வரும் பந்தின் மூலம் டெண்டுல்கரையே திகைக்க வைத்தவர். டோனி லாக் காலம் தொட்டு இங்கிலாந்தின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் பலரும் மனம் போன போக்கில் செயல்படுபவர்களாக இருப்பது சமூகவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அம்சம் என்கிறார் அமோல் ராஜன். கேரம் பந்தை முக்கிய கவசமாக கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தவர் இராணுவ பின்னணி கொண்ட இலங்கையின் அஜந்தா மெண்டிஸ். மர்ம சுழற்பந்து வீச்சாளர்கள் பலரையும் போலவே இவரும் திடீரென ஒரு நாள் தன்னுடைய நுட்பங்களை இழந்து தனித்த மரமானார். இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்ற முக்கிய சுழற்பந்து வீச்சாளர் 'சைனா மேன்' பால் ஆடம்ஸ். ஒரு காலத்தில் அவருடைய பலமாக கருதப்பட்ட பந்து வீச்சு ஆக்சனே அவரது ஆட்டத்திற்கு எமனாக மாறியது. தற்போது அந்த அணியில் இந்திய வம்சாவளியான கேசவ் மகராஜை முக்கியமான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் எனலாம். வார்னுக்கு பிறகு ஆஸ்திரேலியா உருவாக்கிய முக்கிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன். ஆசியர்கள் போல இல்லாமல் செங்குத்தாக பந்தை திருப்பும் (Over spin) வல்லமை கொண்டவர். சிறந்த ஆஃப் சுழற்பந்து வீச்சாளர் யார் என்ற சமரில் அஸ்வின் உடன் முஷ்டி முறுக்கிக் கொண்டிருப்பவர். கிரிக்கெட் வரலாற்றின் அறிவார்ந்த சுழற்பந்து வீ்சாளர்களில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் ஓர் இடமுண்டு. ஒரு விதத்தில் கும்ப்ளே வின் வாரிசு என சொல்லலாம்; அதேநேரம் அவரைவிட அழகியல் அம்சங்கள் அதிகமுள்ளவர். சமீபத்தில் தன்னுடைய கட்டுரை ஒன்றில் உடலை கொஞ்சம் கூட வளைக்காமல் அஸ்வின் எப்படி இத்தனை Revolution - ஐ பந்தில் செலுத்துகிறார் என்பது புதிராக இருக்கிறது என ஆச்சரியப்பட்டார் முன்னாள் வீரர் ராம் நாராயண். பிரசன்னா, பேடி போன்றவர்கள் பரிந்துரைக்கும் Side on ஆக்சன் கொண்டவரல்ல அவர். ஆனால் பெரிய விரல்களும் புத்திசாலித்தனமும் நினைத்ததை சாதிக்கும் மேதையாக அஸ்வினை மாற்றியுள்ளது. இவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்றவர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற தகுதியானவர்களே. சுழற்பந்து வீச்சு ஒரு வண்ணக்கடல். அதன் வகைமைகளை எண்களில் அடக்கிவிட முடியாது.

தினேஷ் அகிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

திங்கள் 1 பிப் 2021