சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் நெக்ஸ்ட்... ‘ஏலே‘ பட டிரெய்லர் !


பூவரசம் பீப்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஹலீதா ஷமீம். இவர் இயக்கத்தில் வெளியான 'சில்லுக்கருப்பட்டி' படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
சமுத்திரகனி, சுனைனா, மணிகண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். நான்கு கதைகளுடன் கூடிய ஆந்தாலஜி திரைப்படமாக வெளியானது. பிங்க் பேக், காக்கா கடி, டர்ட்டுல்ஸ், ஹே அம்மு என படத்தில் இடம்பெற்ற நான்கு கதைகளுமே வித்தியாசமான களம். காதல் எனும் ஒற்றை வார்த்தை ஒவ்வொருவருக்குள்ளும் என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் நடக்கும் என்பதை அழகியலுடன் காட்சிப் படுத்தியிருப்பார் ஹலிதா ஷமீம்.
மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா பட இயக்குநர் புஷ்கர் - காயத்ரியிடம் உதவியாளராக இருந்து இயக்குநராக மாறியவர் ஹலிதா. இவரின் இயக்கத்தில் அடுத்து ரிலீஸூக்கு ரெடியாகியிருக்கும் படம் ‘ஏலே’.
அப்பா மகனுக்கு இடையிலான வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படமே ஏலே. சமுத்திரகனி, மணிகண்டன் இருவரும் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். காதலும் கடந்துபோகும், காலா படங்களில் நடித்தவர் மணிகண்டன். சில்லுக்கருப்பட்டியில் ‘காக்கா கடி’ கதையிலும் நடித்திருப்பார்.
ஓட்டு வீடு, சைக்கிள், ஐஸ், பம்பரம் என கிராமத்து நினைவுகளை நாஸ்டாலஜிக்கோடு தூண்டிவிடுகிறது ஏலே பட டிரெய்லர். இப்படம் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.