ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் கதை!

இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தொடர்ச்சியாக பல வெரைட்டியான படங்களை உருவாக்கிவரும் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் ஆர்யா நடிக்க சார்பட்டா பரம்பரை படம் ரிலீஸூக்குத் தயாராகிவருகிறது. குத்துச் சண்டையை மையமாகக் கொண்ட ஹிஸ்டாரிக்கல் திரைப்படமாக இது உருவாகிவருகிறது.
இந்நிலையில், தயாரிப்பாளராகவும் சில படங்களைத் தயாரித்துவருகிறார். கலையரசன் நடிக்க ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் குதிரைவால் படம் ரிலீஸூக்கு ரெடியாகிவிட்டது. இந்நிலையில், அடுத்ததாக யோகிபாபு நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு முதன்மை ரோலில் நடிக்கும் படத்திற்கு ‘பொம்மை நாயகி’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. காமெடியனாக பார்த்து சிரித்த யோகிபாபுவை கொஞ்சம் சீரியஸாக இந்தப் படத்தில் காட்ட இருக்கிறார்களாம். இளம் மகளுக்கு தந்தை ரோலில் இந்தப் படத்தில் வருகிறார். படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். கடலூர் கடற்கரைப் பகுதிகளில் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது.
பொதுவாக, ரஞ்சித் தயாரிக்கும் படங்கள் அனைத்துமே சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களே. இந்தப் படமும் அப்படியாகவே தயாராகிறது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க இருக்கிறார்களாம். அதுவும் 20 முதல் 25 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட திட்டம் என்கிறார்கள்.
டீ கடையில் வேலை செய்யும் ஒருவரின் எதார்த்தப் பதிவாக படம் இருக்குமாம். வடசென்னையில் கிஷோருக்கு மனைவியாக நடித்த சுபத்ரா, இந்தப் படத்தில் யோகிபாபுவுக்கு மனைவியாக நடிக்கிறார். படத்துக்கு எட்டுதோட்டாக்கள் படத்துக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். வித்தியாசமான கதையாக விரைவிலேயே இந்தப் படத்தை எதிர்பார்க்கலாம்.