மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 ஜன 2021

கவனம் ஈர்த்த விஜய் பட வில்லன்கள்!

கவனம் ஈர்த்த விஜய் பட வில்லன்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்துக்கு ஏகபோக வரவேற்பு. தமிழகத்தில் மட்டும் இப்போதுவரை 98 கோடி வரை வசூலித்துவிட்டதாகவும், உலகளவில் 200 கோடிவரை வசூல் சாதனைப் படைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு ஹீரோவின் வெற்றியென்பது வில்லன்களின் கேரக்டர் வடிவமைப்பைப் பொருத்து நிர்ணயமாவதாக நினைக்கிறேன். வலுவான வில்லன் கதாபாத்திரத்தால் மட்டுமே ஹீரோவின் மாஸ் வெளிப்படுகிறது. அதேநேரம், வில்லன்களின் நடிப்புத் திறனும் தனித்துவமாக நம்மை ஈர்க்கிறது. அதுவும் விஜய் படத்தில் அவரைத் தாண்டி வில்லன் கேரக்டர் வெளிப்படுவதெல்லாம் அத்தனை எளிதாக நடந்துவிடாது. அதில் வில்லனாக நடிக்கும் நடிகர்களின் திறமையும் அடங்கியிருக்கிறது. அப்படி, சமீபத்திய விஜய் படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர்கள் யாரெல்லாம் என்று பார்த்துவிடலாம்.

விஜய்க்கு மாஸ் ஹீரோயிஸத்தை பெரியளவில் பில்டப் செய்த படம் கில்லி. இந்தப் படத்தில் விஜய்யைத் தாண்டி ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் பிரகாஷ்ராஜ். மதுரை முத்துப்பாண்டி பெயரைக் கேட்டாலே அதிரும். வித்தியாசமான உடல்மொழி, வெடுக் வெடுக்கென பேசுவது, காமெடியோடு டெரர் காட்டுவது என அசத்தியிருப்பார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே சிறந்த வில்லனாகவே கில்லியில் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார் என்று சொல்லலாம். பிரகாஷ்ராஜை அறிமுகப்படுத்தும் சீன்கள், மதுரை முத்துப்பாண்டியையே விஜய் அடிக்கும் சீன் என ஒவ்வொன்றும் கமர்ஷியலாக பெரிதாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இந்த காம்போ நன்றாக செட் ஆகிவிட்டதால் அடுத்தடுத்து விஜய் படத்திலும் தொடர்ந்தது. அப்படி, பிரகாஷ்ராஜூக்கு சிவகாசி உடையப்பாவையும், போக்கிரி அலிபாய் கேரக்டரையும் மறந்துவிட முடியாது.

பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் திருப்பாச்சி. சிவகங்கை மாவட்டத்திலிருந்து சென்னை நகரத்துக்கு வருகிறார் ஹீரோ. தங்கை வாழப்போகும் ஊரில் வன்முறையே இருக்கக் கூடாதென வன்முறையைக் கையில் எடுத்து எதிரிகளை போட்டுத் தள்ளுவார். அதில் வரும் டெரர் வில்லன் சனியன் சகடை. மூத்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்திருப்பார். விக்ரமின் சாமி படத்திலும் வில்லனாக அசத்தியிருப்பார். அவருக்கு திருப்பாச்சி படமும் பெரியளவில் பெயர்வாங்கிக் கொடுத்தது. க்ளைமேக்ஸில் ஒட்டுமொத்த ரவுடிகளோடு சேர்ந்து வில்லத்தனம் காட்டும் சனியன் சகடையின் ஒவ்வொரு வசனமும் வெறித்தனமாக இருக்கும்.

இந்த வரிசையில் புதுமுகமாக வில்லனை விஜய் படத்தில் இறக்கிவிட்டு கவர வைத்தார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தப் படம். இதில் ராணுவ அதிகாரியான விஜய்க்கு வில்லனாக ஸ்லீப்பர் செல் தலைவனாக வித்யூத் ஜம்வால் நடித்திருப்பார். விஜய்க்கு தொல்லைதர வித்யூத் வகுக்கும் வியூகங்கள், விஜய்க்கு முன்னாடியே வித்யூத் போடும் திட்டங்கள், க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியென ரசிக்க வைத்திருப்பார். விஜய் படமென்றாலே வில்லன் கிராமத்தானாகவோ, அரசியல்வாதியாகவோ தான் இருப்பார்கள். இதில் ஸ்டைலிஷ் வில்லனாக வித்யூத் இருப்பார். அதுவே இவர் மீது ரசிகர்கள் கவனம் திரும்பக் காரணம்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று ரோல்களில் நடித்து வெளியான படம் மெர்சல். விஜய்யின் மூன்று கேரக்டரையும் தாண்டி, ஒரு கதாபாத்திரம் நம்மை மிரட்டியிருக்கும். டேனியல் ஆரோக்கியராஜாக எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருப்பார். அப்பா விஜய், மகன் விஜய் என எல்லோருக்கும் எதிரான அவரின் வில்லத்தனம் அச்சத்தலாக இருக்கும். இருந்த இடத்திலேயே விஜய்யை மிரட்டும் காட்சியெல்லாம் வேற லெவல். அதோடு, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு தனித்துவமாக மனதில் இடம்பிடித்திருக்கும்.

இந்த வில்லன்கள் பட்டியலில் வந்து இணைந்திருக்கிறார் பவானி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு மாஸ்டரில் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. பொதுவாக, தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் விஜய்சேதுபதி. அப்படி இருக்கையில், எந்த வித ஈகோவும் இல்லாமல் விஜய்க்காக இந்தப் படத்தில் வில்லத்தனம் காட்டியிருப்பார் சேதுபதி. சொல்லப் போனால், மாஸ்டரில் விஜய் ரோலை விட, விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு நிறைய வெயிட்டேஜ் இருக்கும். கேரக்டர் அருமையாக டிசைன் செய்திருப்பார் லோகேஷ். பஞ்ச் பவானி சீனாகட்டும், ஷாம்புவால் கொம்பு வைக்கும் காட்சியாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைத்திருப்பார் விஜய்சேதுபதி.

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

சனி 23 ஜன 2021