மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

சிம்பு விதைத்ததே, இப்போது விவகாரமாகிவிட்டது... தீராமல் தொடரும் சிக்கல்!

சிம்பு விதைத்ததே, இப்போது விவகாரமாகிவிட்டது... தீராமல் தொடரும் சிக்கல்!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் திரைப்படம் இறுதியாக திரையரங்கில் வெற்றிகரமாக வெளியாகிவிட்டது. ரிலீஸ் தேதியான ஜனவரி 14ஆம் தேதி காலை வரை படம் ரிலீஸாகிவிட்டதா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. அதற்கு காரணமும் இருக்கிறது.

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்தப் படத்தினால் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பனுக்குப் பெரிய அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், நஷ்டத் தொகையை சிம்பு தர வேண்டும் என இவரும் தயாரிப்பாளர் சங்கத்தை நாடியதால், படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தயாரிப்பு தரப்பும் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாதென திரையரங்குகளை கேட்டுக் கொண்டிருந்தனர். என்னவென்றால், AAA பட நஷ்டத்துக்காக சிம்பு நடிக்கும் அடுத்த மூன்று படங்கள் வெளியாகும்போது ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் 2.40 கோடி ரூபாயை நேரடியாக ஃபெடரேஷனில் கட்டிவிட டி.ராஜேந்தர் குடும்பம் ஒப்புக்கொண்டிருந்தது.

இந்த ஈஸ்வரன் ரிலீஸின்போது பணமும் வரவில்லை, சிம்பு தரப்பிலிருந்து யாரும் இதுகுறித்துப் பேசவும் இல்லை என்பதால்தான், ஈஸ்வரன் ரிலீஸில் முட்டுக்கட்டையாக நின்றது தயாரிப்புத் தரப்பு. ஜனவரி 13ஆம் தேதி இரவு நேரடியாக ஃபெடரேஷனுக்கு டி.ஆரும், அவரின் மனைவியும் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அங்கு யாரும் இல்லையென்பதால், டி.ஆர். நேரடியாக திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரிடம் பேசியிருக்கிறார். அதன் பிறகுதான், ஈஸ்வரன் சொன்னபடி வெளியாகியிருக்கிறது.

பணத்தொகை தராமல் ஈஸ்வரனை வெளியிட்டுவிட்டதால்தான், தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கான அறிவிப்பையும் நேற்று வெளியிட்டது. இப்படி இருக்கையில், சிம்பு நடிப்பில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, பத்து தல படமும் உருவாகிவருகிறது. இவ்விரு படங்களுக்கும் இந்த அதிரடி அறிவிப்பால் பிரச்சினை வருமா என கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிம்புவுக்கு ரெட் போடப்பட்டிருப்பதால், இனி புதிதாக ஒரு படத்தை ஒப்பந்தம் செய்ய முடியாது. பழைய படங்களை நடித்து, முடித்துக்கொடுக்கலாம். அதில் எந்த சிக்கலும் இருக்காது. தயாரிப்பு தரப்பு ஒத்துழைக்காது என்பதால், சிம்புவுக்குப் புதிதாக படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் வரக் கூடாது என்பதே சங்கத்தின் அறிவிப்பு. இனி, என்ன நடக்கும்? சிம்பு பிரச்சினை எப்போது தீரும் என தெரியவில்லை. மீண்டு வாருங்கள் சிம்பு!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

வெள்ளி 15 ஜன 2021