மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 17 ஜன 2021

ஆச்சரியம் தருமா தனுஷ் - செல்வராகவன் கூட்டணி?

ஆச்சரியம் தருமா தனுஷ் - செல்வராகவன் கூட்டணி?

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடசென்னை, அசுரன் மாதிரியான ஹெவியான படங்களையும் அதற்கு நடு நடுவே, எனை நோக்கிப் பாயும் தோட்டா, பட்டாஸ் மாதிரியான லைட்டான படங்கள் என தனுஷின் சினிமா கிராஃப் கொஞ்சம் வெரைட்டியாக இருக்கும்.

அடுத்ததாக, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. சொல்லப்போனால், ரிலீஸுக்கான சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறது. எப்படியும் அடுத்த மாதம் படம் வெளியாகிவிடும் என்கிறார்கள்.

அதோடு, பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படமும், இந்தியில் அக்‌ஷய் குமாருடன் அட்ராங்கி ரே படமும் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கிறது.

தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் தனுஷ் 43 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அறிமுக விழாவோடு சமீபத்தில் தொடங்கியது.

டி 43 படத்தோடு இன்னொரு படத்தையும் அதே நேரத்தில் தொடங்குகிறார் தனுஷ். சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்தான் அது. அந்தப் படத்துக்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. அதோடு, அரவிந்த் கிருஷ்ணா படத்துக்கு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். அசுரன் படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் தாணு தயாரிக்கும் படம் இது.

புதுப்பேட்டை 2 ஆக இருக்கலாம் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், கலர்ஃபுல்லாக ஒரு படத்தை செல்வராகவன் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் - செல்வா கூட்டணியில் காதல்கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன படங்கள் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. மீண்டும் இந்தக் கூட்டணி என்ன ஆச்சரியத்தைத் தரப்போகிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

-ஆதினி

வியாழன், 14 ஜன 2021

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon