மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 ஜன 2021

மாஸ்டர்: திரைவிமர்சனம்!

மாஸ்டர்:  திரைவிமர்சனம்!

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நடக்கும் அட்டூழியங்களை அடித்து நொறுக்கி, அன்பால் சிறுவர்களைத் திருத்தும் வாத்தியாரின் கதையே விஜய்யின் மாஸ்டர். மாநகரம், கைதி என இரண்டு சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பதில் துவங்கியது மாஸ்டர் மீதான ஆச்சரியம்... இப்போது, பல போராட்டங்களைத் தாண்டி மாஸ்டர் வெளியாகிவிட்டது. மாஸ்டர் ரசிகர்களை ஈர்த்ததா?

நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கிறார் பவானி (விஜய்சேதுபதி), அங்கு பல துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார். அதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்க வேண்டும் என கெட்டவனாக மாறுகிறார். அதனால், அதே சீர்திருத்தப் பள்ளியை கையில் வைத்துக் கொண்டு சட்டத்துக்கு எதிராகப் பல தவறுகளைச் செய்துவருகிறார். இன்னொரு பக்கம் கல்லூரி பேராசிரியரான ஜான் துரைராஜ் (விஜய்) பணிமாற்றமாக இந்த சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார். ரவுடீஸம், போதைப் பழக்கம் ஆகியவற்றில் மூழ்கிக் கிடக்கும் சிறுவர்களை எப்படி ஜே.டி. திருத்தினார், பவானியை வீழ்த்தினாரா , மாஸ்டரின் ஸ்டைல் என்ன, என்பதை கமர்ஷியல் ஆக்‌ஷனாகச் சொல்லியிருக்கும் படமே ‘மாஸ்டர்’

படத்திற்கு படம் அழகாகிக் கொண்டே செல்கிறார் விஜய். இந்தப் படத்தில் இன்னும் அழகாக இருக்கிறார். ஒவ்வொரு சீனிலும் ரியாக்‌ஷன்களால் லைக் அள்ளுகிறார். நடனத்தால் கொள்ளைகொள்கிறார். கண்ணாடி போட்டுக் கொண்டு அப்படியே தூங்கிவிடுவது, போதை கையாகவே சுற்றித் திரிவது, அசால்டு தனம், மாணவர்களின் விருப்பமான மாஸ்டர் என ஒருபக்கம் கெத்து காட்டும் விஜய், அடுத்தப் பாதியில் குடியை விடும் இடம், அதன்பிறகு விஜய்யின் ஒட்டு மொத்த சேஞ்ச் ஓவர், அதை நடிப்பில் காட்டிய விதம் என அசத்துகிறார்.

படத்தில் மாஸ்டர், விஜய் தான் என்றாலும் விஜய்சேதுபதி தான் மாஸ். ஒரு பெரிய ஹீரோ படத்தில் மற்ற நடிகர்கள் அனைவருமே டம்மியாகத் தான் இருப்பார்கள். அதற்கு பாலிவுட்டிலிருந்து நடிகர்களை அழைத்துவந்து வில்லனாக்கி டம்மியாக்குவார்கள். விஜய் மாதிரியான ஒரு ஹீரோவின் படத்தில், இன்னொரு ஹீரோவுக்கும் இணையான ரோல் கொடுத்திருப்பது ஆரோக்கியமான ஒன்று. விஜய்க்கு இணையானக் கதாபாத்திரத்தில் வருகிறார் சேதுபதி. சொல்லப்போனால், கதையே விஜய்சேதுபதி மீது தான் டிராவல் ஆகிறது. டெரர் வில்லனாக வரும் விஜய்சேதுபதி, அவரின் பாணியில் காமெடி செய்வது, கொடூரமாக கொலை செய்வது என மிரட்டுகிறார். விஜய் - விஜய்சேதுபதிக்கான க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி மெர்சல். விஜய்சேதுபதியின் சின்ன வயது ரோலில் மகேந்திரன் நடித்திருக்கிறார். அப்படியே விஜய்சேதுபதியின் உடல்மொழியை எடுத்து நடித்திருப்பது க்ரேட்.

நாயகியாக மாளவிகா மோகன் அழகாய் வருகிறார். சிரிக்கிறார், காதல் கொள்கிறார். படத்தின் முக்கிய திருப்பத்துக்குக் காரணமாகவும் இருக்கிறார். மற்றபடி பெரிய கேரக்டர் இல்லையென்பதால் நடிப்பாக எதுவும் சொல்லுவதற்கில்லை. ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே ஆண்ட்ரியா வருகிறார். குறிப்பாக, க்ளைமேக்ஸில் ஆண்ட்ரியாவின் அந்த சர்ப்ரைஸ் சீன் வாவ். 96 புகழ் கெளரி, சாந்தனு உள்ளிட்ட நடிகர்கள் கதாபாத்திரத்தில் சரியாக பொருந்துகிறார்கள். விஜய், விஜய்சேதுபதி தாண்டி அர்ஜூன் தாஸ் ரோல் கவனிக்கத் தக்க ஒன்றாக இருக்கிறது. இறுதியாக, பூவையாருக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்துவிடலாம்.

லோகேஷ் கனகராஜ் படத்தில் அழுத்தமான காட்சிகள் இருக்கும். ஒவ்வொரு சீனிலும் நேர்த்தி இருக்கும். அதையெல்லாம் நூறு மடங்காக மாஸ்டரில் தந்திருக்கிறார். மாஸ் ஹீரோவை வைத்து அழுத்தமான ஒரு கதையைக் கமர்ஷியலாகச் சொல்லியிருக்கிறார் லோகேஷ். ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குநர்களின் ஆரம்பக்கால வளர்ச்சியை, இப்போதே நூறு மடங்கு காட்டுகிறார் லோகேஷ். மூன்று மணிநேர படத்தை எந்த இடத்திலும் சோர்வு இல்லாமல் திரைக்கதையில் நகர்த்தியிருக்கிறார். விஜய்க்கு சீனுக்கு சீன் மாஸ் காட்டியிருப்பது, விஜய்சேதுபதியின் கேரக்டர் வடிவமைப்பு என இரண்டிலும் நேர்த்தியைக் கொடுத்திருக்கிறார்.

விஜய் - விஜய்சேதுபதிக்குமான இடைவேளை சீன் நிச்சயம் ரசிகர்களின் கொண்டாட்ட நிலையை மனதில் கொண்டே இயக்கியிருக்கிறார் லோகேஷ். அதற்கு பாராட்டுகள். ஹீரோவை பழிவாங்க ஹீரோவுக்கு நெருக்கமானவர்களைப் பழிவாங்கும் சீன்களெல்லாம் அடித்துத் துவைத்த பழைய சீன்கள். அதுபோல, க்ளைமேக்ஸில் விஜய் வகுப்பெடுக்கும் சீன், அர்ஜூன் தாஸ் மனம் திருந்தும் இடமெல்லாம் பலவீனமான காட்சியமைப்புகளாக இருக்கிறது.

அனிருத்தின் பின்னணி இசை வெறித்தனம். குறிப்பாக, கில்லி தீம் இசையை ரீமிக்ஸ் செய்திருக்கும் இடம் சூப்பர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜின் படத்தொகுப்பும் கமர்ஷியல் படத்துக்குத் தேவையான வேகத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ரசிகர்களுக்கான பக்கா கமர்ஷியல் படமே மாஸ்டர். விஜய் - விஜய்சேதுபதி என இருவருக்குமான படம். ஏனெனில், விஜய்சேதுபதி இல்லையென்றால் வழக்கமான விஜய் படமாக இது முடிந்திருக்கும். விஜய்சேதுபதியே படத்தின் கலரை மாற்றுகிறார். விஜய்க்கான படமாக இதை மாற்றுகிறார். குறிப்பாக, தியேட்டருக்கான படம் இது. எதிர்பாராத இந்த சூழலில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலைக்கு மாஸ்டர் கைகொடுக்கும் என்பதில் எந்த மாற்றமுமில்லை.

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

புதன் 13 ஜன 2021