விஜய்சேதுபதி கைவசம் இத்தனை படங்களா? ஷாக்கிங் லிஸ்ட்!


தமிழ் சினிமாவின் பிஸியான ஒரு நடிகரென்றால் அது விஜய்சேதுபதி. ஹீரோ என்றில்லாமல் வில்லன், குணச்சித்திர கேரக்டர், கெஸ்ட் ரோல் என பாகுபாடு இன்றி நடிப்பில் ஸ்கோர் செய்துவருகிறார். இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக படங்களைக் கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி தான். ஒன்றல்ல, இரண்டல்ல... இந்த லிஸ்டை படித்து முடிப்பதற்குள் இன்னொரு புதிய படத்துக்கு விஜய்சேதுபதி கமிட்டானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்த இரண்டு படங்கள் கடந்த வருடம் வெளியானது. அதில், அசோக் செல்வனுடன் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரையரங்கிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடித்த ‘க.பெ.ரணசிங்கம்’ ஓடிடி தளத்திலும் வெளியானது. இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பு பெற்றது. சொல்லப்போனால், இரண்டிலுமே சில நிமிடங்களே வரும் விஜய்சேதுபதியே, படத்தின் மையப்புள்ளியாக இருப்பார்.
இந்த வருடத்தில் விஜய்சேதுபதியின் முதல் ரிலீஸ் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக இப்படத்தில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரஜினிக்கு பேட்ட படத்தில் வில்லத்தனம் காட்டியவர், இப்போது விஜய்க்கு எதிராக நடித்திருக்கிறார்.
சீனுராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ இரண்டு படங்களுமே முழுமையாகத் தயாராகிவிட்டது. ஆனால், பொருளாதாரச் சிக்கலினால் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. இவ்விரு படங்களையும் எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம்.
பிற மொழிப் படங்கள் என்று பார்த்தால், தெலுங்கில் `உப்பென்னா', மலையாளத்தில் 19(1), இந்தியில் அமீர்கானுடன் `லால் சிங் சத்தா' படங்கள் கையில் இருக்கிறது. அதோடு, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் முனிஸ்காந்த் நடித்த கேரக்டரில் இந்தியில் சேதுபதி நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
தமிழைப் பொருத்தவரை, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசனுடன் நடித்திருக்கும் ‘லாபம்’ ரிலீஸுக்குத் தயாராகியிருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், அனெபல் சுப்ரமணியம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் தயாராகிவருகிறது. இதில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் தற்பொழுது நடித்து வருகிறார்.
இயக்குநர் மணிகண்டனின் `கடைசி விவசாயி' படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். அதுமாதிரி, கோகுல் இயக்கத்தில் `கொரோனா குமார்' படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்த லாக்டவுன் நேரத்திலும் சும்மா இல்லாமல், ஒரு படத்தை முடித்திருக்கிறார். அப்படி, விஜய்சேதுபதி தன்னோட மகள் மற்றும் ரெஜினா கசன்ட்ரா உடன் நடித்த `முகிழ்' படமும் தயாராக இருக்கிறது. இப்படமும் ரிலீஸூக்கு ரெடியாகிவருகிறது.
இந்த லிஸ்ட்டில் வெற்றிமாறன் இயக்கும் படமும் சீக்கிரமே இணைய இருக்கிறது. சூரி நாயகனாக நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சேதுபதி. பாரதிராஜா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில், இவர் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இன்னும் சில படங்களும் சைலண்டா லைனில் வைத்திருக்கிறார். அதெல்லாம் சீக்கிரமே அறிவிக்க இருக்கிறார்.