aதமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள்!

entertainment

ஆண்களுக்கான சினிமா உலகில் பெண்களின் சினிமா பிரம்மாண்டமானது. ஆண்கள் பார்க்காத, யோசிக்காத கோணத்திலிருந்து பெண்களின் சினிமா பிறக்கிறது. சினிமாவில் பெண்கள் எளிதில் நடிகையாகிவிடலாம். ஆனால், இயக்குநராக ஒரு படத்தை கொடுப்பதெல்லாம் வேறலெவல் கெத்து. அதென்ன, ஆண் இயக்குநர், பெண் இயக்குநர்… எல்லோருமே இயக்குநர்கள் தான் என்கிற நிலைக்கு வந்துவிட்டது தமிழ் சினிமா. சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று அதற்கு ஆகச்சிறந்த உதாரணம். இவரின் இறுதிச்சுற்று படமும் நம்பிக்கையை விதைத்த மற்றுமொரு திரைப்படம். சரி, தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களின் பட்டியலை ஒரு சின்ன ரீவைண்டாக பார்த்துவிடலாம்.

பெண் இயக்குநர்களின் பயணத்தில் முதல் புள்ளி டி.பி.ராஜலட்சுமி. தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் பட நாயகி. முதல் பெண் இயக்குநரான இவர் இயக்கிய படம் ‘மிஸ் கமலா’. இயக்கம் மட்டுமல்ல, நடிப்பு, இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு என ஆல் ரவுண்டர். அடுத்ததாக, இயக்குநர் பி.பானுமதி. செம்பருத்தி படத்தில் பிரஷாந்தின் பாட்டியாக நடித்திருப்பார். நடிப்பில் உச்சம் தொட்டவர், இயக்குநராக சண்டிராணி படத்தில் அறிமுகமானார். முதன்முறையாக தமிழ் – தெலுங்கு – இந்தி என மூன்று மொழிகளில் படம் இயக்கியது, முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தது என இரண்டு சாதனைகளையும் படைத்தவர். அடுத்ததாக, நடிகையர் திலகம் சாவித்ரி. முதல் படம் தெலுங்கில் ‘சின்னரி பாப்பலு’. அது ‘குழந்தை உள்ளம்’ என்கிற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்தார் சாவித்திரி.

1980ல் கே.பாலச்சந்தர் மேற்பார்வையில் தமிழ் – கன்னட பைலிங்குவலாக நடிகை லட்சுமி இயக்கிய படம் மழலைப் பட்டாளம். இந்தப் படம் 1968ல் வெளியான `Yours, Mine and Ours’ படத்தின் தழுவல். மோகனும் ஊர்வசியும் இணைந்து நடித்த சாந்தி முகூர்த்தம் படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீப்ரியா. கடைசியாக, மலையாளத்தில் வெளியான ‘22 பிமேல் கோட்டயம்’ படத்தை, தமிழில் மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் இயக்கினார். அது படு ஃப்ளாப். ஆனால், மலையாள த்ரிஷ்யம் படத்தை தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க இயக்கி பெரிய ஹிட் கொடுத்ததும் இவரே.

அடுத்ததாக ரேவதி இயக்கிய முதல் படம் `Mitr, My Friend’ எனும் ஆங்கிலப் படம். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியது அப்போது மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த வி.ப்ரியா மற்றும் சுதா கொங்கரா தான். படத்துக்கு இசை பவதாரணி, ஒளிப்பதிவு ஃபாத்திமா, எடிட்டர் பீனா பால் என முழுக்க முழுக்க பெண்களால் உருவான படம். விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பாடகியாக தெரியும். ஆனால், விஜய் நடித்த `நாளைய தீர்ப்பு’, `ரசிகன்’, `தேவா’, `விஷ்ணு’, `மாண்புமிகு மாணவர்’, `நெஞ்சிருக்கும் வரை’ என பல படங்களுக்கு கதை எழுதியது ஷோபாதான். 1991ல் `நண்பர்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதற்கடுத்து `இன்னிசை மழை’ எனும் ஒரு படத்தையும் இயக்கினார். நடிகை சுஹாசினி இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். அனுஹாசன், அரவிந்த் சாமி நடித்த இந்திரா. அதன்பிறகு, சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி படமான ‘புத்தம் புது காலை’ படத்தில் ஒரு கதை.

சேரன், நித்யா மேனன், சலீம்குமார், பசுபதி, ஸ்னிக்தா நடித்த `அப்பாவின் மீசை’ பட இயக்குநர் ரோகிணி. படம் ரெடியாகிவிட்டாலும் இன்னும் வெளியாகவில்லை. குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியது அனிதா உதீப். இவர் யாரென்றால், விசில் படத்தில் வரும் அழகிய அசுரா பாடலைப் பாடியவர். சமீபத்தில் ஓவியா நடித்த `90 எம்.எல்’ படத்தை இயக்கினார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த, வி.ப்ரியா இயக்குநரானது பிரசன்னா, லைலா, கார்த்திக்குமார் நடித்த `கண்ட நாள் முதல்’ படம் மூலமாகத்தான். அதன்பிறகு ப்ரித்விராஜ், சத்யராஜ், ராதிகா நடித்த `கண்ணாமூச்சி ஏனடா’ படத்தை இயக்கியிருந்தார். குறும்படம் மூலமாக கவனத்தை ஈர்த்தவர் நந்தினி. இவர் இயக்கிய `ஓட்டம்’ குறும்படம் தேசிய விருது பெற்றது. கண்ட நாள் முதல் படத்தில் வி.ப்ரியாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர், `திரு திரு துறு துறு’ படம் மூலமாக இயக்குநரானார். இதற்குப் பிறகு, கார்த்திக் குமார், ராதிகா ஆப்தே நடித்த `தொலை நோக்குப் பார்வை’ படத்தை இயக்கினார். மதுமிதா இயக்கிய முதல் படம் பார்த்திபன், சாயா சிங் நடித்த `வல்லமை தாராயோ’. அதன்பிறகு, `கொலை கொலையா முந்திரிக்கா’ `மூணே மூணு வார்த்த’ மாதிரியான காமெடி படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் `கே.டி. என்கிற கருப்பு துரை’ படத்துக்கு பெரியளவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

‘பிரிவோம் சந்திப்போம்’ படம் மூலமாக அறிமுகமாகி, பல படங்களில் நடித்தவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். `ஆரோகணம்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து `நெருங்கிவா முத்தமிடாதே’ `அம்மணி’ படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கிய `ஹவுஸ் ஓனர்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அமீர்கான் நடித்த `டங்கல்’ படத்தை இயக்கிய நிதேஷ் திவாரியின் மனைவி தான் அஷ்வினி திவாரி. இவர் இயக்கத்தில் தமிழில் உருவான படம் `அம்மா கணக்கு’.அடுத்து கங்கனா ரணாவத் நடிப்பில் இவர் இயக்கிய இந்தி படம் `பங்கா’.

ரஜினிகாந்த்துடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமான படம் `3′. அதன்பிறகு கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக் எல்லாம் நடிச்ச `வை ராஜா வை’ படத்தை இயக்கினார். அதுபோல, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் சினிமாவுக்குள்ள நுழைந்தார். ரஜினி நடிக்க அனிமேஷன் படமாக `சுல்தான்’ படத்தை இயக்க இருந்தார். அது ட்ராப் ஆக, அதே தொழில்நுட்பத்தில் `கோச்சடையான்’ படத்தை இயக்கினார். அதன்பிறகு, தனுஷ் நடித்த `வேலையில்லா பட்டதாரி 2′ படத்தை இயக்கினார்.

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி. உதவி இயக்குநராக செல்வராகவனிடம் இருந்தார். அவரின் கதையான `மாலை நேரத்து மயக்கம்’ படத்தை கீதாஞ்சலி இயக்கினார். நடிகர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய படம் ‘வணக்கம் சென்னை’. பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்துவந்த ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த சின்ன பட்ஜெட் படம் இது. ஆனால், நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு, விஜய் ஆண்டனி நடிச்ச `காளி’ படத்தையும் இயக்கினார் கிருத்திகா உதயநிதி. ஓரம்போ படத்தில் உதவி இயக்குநராக இருந்து, பூவரசம் பீப்பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹலீதா ஷமீம். அடுத்ததாக ஆந்தாலஜி படமாக சில்லுக் கருப்பட்டி சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட். அடுத்ததாக, குழந்தைகளுக்காக ‘ஏலே’ படத்தை எடுத்து முடித்துவிட்டார். விரைவிலேயே படம் வெளியாக இருக்கிறது.

**-ஆதினி**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *