இந்தியா வெற்றி: வாழ்த்து மழையில் நனையும் தமிழக வீரர் நடராஜன்!

entertainment

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (டிசம்பர் 2) கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி உள்ளார் . தனது முதல் சர்வதேச போட்டியிலேயே முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்துள்ளார் நடராஜன்.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்கார‌ராக களமிறங்கிய மார்னஸ் லபுஸ்சேன், நடராஜன் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். அதைத் தொடர்ந்து 48ஆவது ஓவரில் ஆஸ்டன் அகர் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் நேற்றைய ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள். வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மட்டைப்பந்து போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வீரத்தமிழன் நடராஜனுக்கு வாழ்த்துகள். மட்டைப்பந்து போட்டிகளில் அவர் புதிய சாதனைகளை படைக்க வேண்டும்” என்று பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், “சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுத் தனது திறமையான பந்துவீச்சின்மூலம் பாராட்டுகளைப் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு வாழ்த்துகள். இந்திய கிரிக்கெட் அணி சாதிக்க வேண்டுமெனில் அது சமூகரீதியில் ஜனநாயகப்பட வேண்டும் என்பதை நடராஜனின் நுழைவு மெய்ப்பித்திருக்கிறது” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை பெற்ற பாண்ட்யா, “இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர். அவரது கதை அனைவருக்குமே ஒரு முன் மாதிரி” என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *