பாடலதிகாரம் 7: பள்ளிப்பருவ காதல் – ஆனந்த ராகம் கேட்கும் காலம்…!!

entertainment

உஷா பாரதி

*இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்*

*இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்*

*காவிய ராகம், காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம்*

*ஆனந்த ராகம் கேட்கும் காலம்*

*கீழ் வானிலே, ஒளி போல் தோன்றுதே*

*ஆயிரம் ஆசையில் உள் நெஞ்சம் பாடாதோ*

*ஆனந்த ராகம் கேட்கும் காலம்*

இந்தப்பாடலைக் கேட்கும்போது நம்மை அறியாத ஓர் ஆனந்த துள்ளல் மனசுக்குள் ஏற்படும். மனசுக்குள் ஒரு பூபாளம் இசைக்கிற பாடல். இளவயதில் மலரும் அரும்புக் காதலின் பரவசத்தை அப்படியே அள்ளித் தெளித்திருக்கும் பாடல்.

நம்மை எந்தப் பக்கமும் அசையவிடாமல் அந்தக் காதலர்களுடனே பயணிக்க வைக்கும் அதிசயம் இந்தப் பாடலுக்கு உண்டு. ஒவ்வொரு பாடலும் ஏதோ சில ஞாபகங்களை நமக்குள் தூண்டிவிடும். ஆனால், இந்தப் பாடல் எல்லோருக்கும் ஒரே ஞாபகத்தைத்தான் கிளறும். அது முதல் காதல்! அதுவும் காப் லவ் இல்லையென்றால் பப்பி லவ்னு சொல்ற பள்ளிப்பருவ காதல். அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு.

பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயதில் பூப்பெய்திய பின்பு ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அந்த விடலைப் பருவத்துக்கே உரிய ஈர்ப்பு, பார்க்கறவங்க எல்லாரோடவும் தங்களை இணைத்துப் பார்த்து கம்பேர் பண்ற மனநிலை… இப்படி பல்வேறு மாற்றங்களை மனதாலும், உடலாலும் கடக்கும் பருவம் விடலைப் பருவம்.

**’வயதுக்கு வருதல்’. உடலால நமக்குத் தெரிந்த இந்த மாற்றம், மனசில எப்போ வருது, எப்படி வருதுன்னே தெரியாது. அந்தப் பருவத்தில் ஏற்படும் காதலும் காமம் தொடர்பான தேடலும் இயற்கையின்** ஒரு பகுதிதான் என்பதை சில திரைப்படங்கள் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன. அதில் ரொம்ப முக்கியமான படம் பன்னீர் புஷ்பங்கள்.

ஊட்டி கான்வென்ட் பள்ளியில் படிக்கும் பிரபு (சுரேஷ்) உடன் படிக்கும் உமாவை (சாந்தி கிருஷ்ணா) பார்த்தவுடன் காதலில் விழுகிறான். அவளும் நண்பன் என்கிற தொனியில் இயல்பாக பழகுகிறாள். உமாவின் வீட்டில் உள்ள அவுட்ஹவுஸில் குடியேறுகிறார் ஆசிரியர் பிரேம் (பிரதாப் போத்தன்). பிரபுவை விடவும் ஆசிரியரிடம்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் உமா. இதனால், ஆசிரியர் மீது எரிச்சலும் வெறுப்பும் கொள்கிறான் பிரபு. ஆனால், அந்த வயதொத்த மாணவர்களின் மனோபாவத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட ஆசிரியர், பிரபுவை அழகாகக் கையாள்கிறார்.

இதற்கிடையில் பிரபுவும் உமாவும் காதல் செய்வதாக ஒரு வதந்தி பள்ளிக்குள் பரவ, அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. பிரபுவை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்கிறார்கள். “நீங்க ரெண்டு பேரும் எங்காவது ஓடிப் போயிடுங்க” என்ற நண்பர்கள் ஐடியாவை நம்பி இருவரும் ரயிலில் பயணப்படுகிறார்கள். இவர்களை ஆதரித்து அதன் காரணமாக தன் பணியை ராஜினாமா செய்யும் ஆசிரியரும் அதே ரயிலில் பயணிக்கிறார். இவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து புத்திமதி சொல்லி திருப்பி அழைத்து வருவதோடு படம் நிறைகிறது.

விடலை வயதில் இயற்கையாக ஏற்படும் இனக்கவர்ச்சியை ஆசிரியர்களும் பெற்றோர்களும் முதிர்ச்சியோடு அணுக வேண்டும் என்கிற செய்தியை அழுத்தமாக இந்தப் படம் சொல்லியிருக்கும்.

உமாவின் தாயும் சரி, பள்ளியும் சரி, ‘இவர்கள் காதலர்கள்’ என்கிற அசட்டுத்தனமான புரிதலோடு இவர்களைக் கட்டுப்படுத்த முயலும்போதுதான் அவளுக்குக் கோபம் வரும். தன்னை வீட்டில் அடைத்து வைத்திருக்கும் தாயின் காவலை மீறி பிரபுவுடன் ஓடிப்போகும் சிந்தனையை அவளுக்குள் உருவாக்குவதே அந்தக் கண்டிப்புதான்.

**உண்மையில் பருவ வயதில் பெரியவர்களின் முறையான, முதிர்ச்சியான வழிகாட்டுதல்கள்தான் அந்த வயது ஆணுக்கும், பெண்ணுக்கும் தேவையாக இருக்கின்றன. இந்த அணுகுமுறை பெரும்பாலும் இந்தச் சமூகச் சூழலில் நிகழ்வதே இல்லை.** மாறாக, பருவத்தில் இனக்கவர்ச்சியால் எழும் காதலை ‘பிஞ்சிலேயே பழுத்ததுங்க’ என்று வெறுப்புடனும் இகழ்ச்சியுடனும் பெரியவர்கள் அணுகுகின்றனர். **உணர்ச்சி மிகுதியால் அதீக கண்டிப்பு அல்லது மூச்சுமுட்டும் அளவிற்கான எமோஷனல் ப்ளாக் மெயில் என்ற ஆயுதத்தைத்தான் பெற்றோர் கையிலெடுக்கின்றனர்.

‘Adolescence’ எனப்படும் வளரிளம் பருவத்தை ‘மனதில் புயலும் எரிமலையும் சுழன்றடிக்கும் பருவம்’. இந்த வயதில் அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள்தான், அவர்களின் வருங்கால வாழ்கையையும் ஆளுமையையும் தீர்மானிக்கும்.** அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் என்ற முறையில் பெற்றோர், சுற்றம், பள்ளி என அனைவருக்கும் அந்த ஆணையும், பெண்ணையும் அறிவு முதிர்ச்சியுடன் கையாள வேண்டிய கடமை உள்ளது.

**செக்ஸ் கல்வி பற்றிப் பேசலாமா ? வேண்டாமா? என்ற விவாதங்களை இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் சமூகச்சூழலில் இத்தகைய பருவ வயது காதலை, தோழமை உணர்வுடன் கையாள்வது அவசியம். அவர்களுக்கான ஸ்பேசை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அதில் வரும் சிக்கல்களிலிருந்து எப்படி மீள்வது, நெளிவு சுளிவுகளுடன் எவ்வாறு கையாள்வது என்பதை அந்தப் பருவத்திலுள்ளோர்க்கும் கற்றுத் தரவேண்டும். நாமும் கற்க வேண்டும். இந்தப் பாதையில் நாம் இன்னமும் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.**

இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த பாடல் வரிகள்

துள்ளி வரும் உள்ளங்களில், தூது வந்து தென்றல் சொல்ல

தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே

வெள்ளி மலைக் கோலங்களை, அள்ளி கொண்ட மேகங்களை

காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே

கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ

வண்ண வண்ண எண்ணங்களும், வந்து விழும் உள்ளங்களும்

வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே…..

இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்

இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்

காவிய ராகம், காற்றினில் கேட்கும்

காலங்கள் ஆரம்பம்

ஆனந்த ராகம் கேட்கும் காலம்

**

கட்டுரையாளர் குறிப்பு

**

**

உஷா பாரதி

**

ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாதவர்… தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தனையாளர்.

[பாடலதிகாரம் 6 – இணைந்து வாழ்தல்…! இயைந்து போதல்…!! காதல் வெளி!!!](https://www.minnambalam.com/entertainment/2020/10/18/10/padaladhikaram-6-ok-ok-kanmani)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *