ஐபிஎல்: இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய பெங்களூரு!

entertainment

கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் 13ஆவது ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்றைய (அக்டோபர் 21) 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

அபுதாபியில் உள்ள சேக் சையீது மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மார்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர்.

பெங்களூரு அணியின் அனல் பறக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் தடுமாறினர். பவர்பிளே முடிவதற்குள்ளாகவே கொல்கத்தா அணி 14 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து மிகக் குறைந்த ரன் வேகத்தில் கொல்கத்தா அணி திண்டாடியது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் இயன் மார்கன் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றார். இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 4 ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 85 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, எந்த சிரமமும் இன்றி கொல்கத்தா பந்து வீச்சை எதிர்கொண்டது. 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *