பாடலதிகாரம் 6 – இணைந்து வாழ்தல்…! இயைந்து போதல்…!! காதல் வெளி!!!

entertainment

உஷா பாரதி

*மலர்கள் கேட்டேன்; வனமே தந்தனை*

*தண்ணீர் கேட்டேன்; அமிர்தம் தந்தனை*

*பள்ளம் வீழ்ந்தேன்; சிகரம் சேர்ந்தனை*

*எதனில் தொலைந்தால்; நீயே வருவாய்?*

தனது ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கைக்கு கதாநாயகன் அனுமதி கேட்க, முதலில் அனுமதி மறுக்கும் அந்த வீட்டின் உரிமையாளர், தன் ‘அல்சீமர்’ மனைவியுடன் கதாநாயகி சரளமாக பழகி, பாட்டுப் பாடியதைப் பார்த்து நெகிழ்ந்து அனுமதி கொடுத்து விடுகிறார். அப்போது பாடும் பாடல்தான் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை.

படத்திற்குள் செல்வதற்கு முன்பு இந்தப் பாடல் வரிகள் நமக்குள் எத்தகைய உணர்வு நிலையை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். அழகான உறவுக்குள் இருக்கும் இருவரின் உணர்வு நிலைகளை கூறும்பாடல், ஒரு தென்றலின் தீண்டல் போல் நம்மை வருடிச்செல்லும். அள்ள, அள்ள குறையாமல் அளிப்பது. பார்த்து, பார்த்து அன்பை விதைப்பது, அதற்குள் புதைந்து போவது என்பதான மனநிலையில் நம்மை லயிக்கச் செய்யும்.

மனதிற்குள் காதல் புகுந்த இருவருக்கு, இந்த உலகமே அவர்கள் மட்டுமாகத்தான் இருக்கும். எந்த வயதிலும் அந்தக் காதலின் தன்மை அப்படி மட்டும்தான் இருக்கமுடியும். அத்தகைய ஒருபரவச மனநிலையை நமக்குள் இழையோடவிட்டிருக்கும் பாடலிது.

அதீதமான அன்புக்கும் சுதந்திர உணர்வுக்கும் இடையிலான நெளிவு, சுளிவுகளை, உறவு நெருக்கத்திற்கும், சமூக வழுவலுக்கும் இடையிலான புரிதல்களை சினிமா என்ற எல்லைக்கு உட்பட்டு சொல்லியிருக்கும் படம் ஓ காதல் கண்மணி.

அந்தப் படம் வந்த புதிதில் காதலர்கள் கொண்டாடினர்… கண்டிப்பாக படம் பார்த்து முடிக்கும் போது ஒரு ரொமான்ட்டிக் ஃபீல் வரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ‘லிவிங் டூ கெதர்’ என்ற ‘திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல்’ இன்றைக்கு சட்டம் அதை அங்கீகரித்தாலும், இந்தியச் சமூகம் அதனை ஏற்பதாக இல்லை.

கொஞ்ச நாள் சேர்ந்து வாழ்ந்து பார்ப்போம். பிடித்தால் திருமணம் செய்து கொண்டு தொடர்வோம். இல்லையேல் நண்பர்களாகக் கைகோர்த்துப் பிரிவோம் என்ற ஒரு உறவுநிலையை, சமூக மாற்றத்தை விரும்பும் பலரும் அடிப்படையில் சரியென்றே ஒப்புக்கொள்வர். **ஆனால், எந்த ஒரு பொறுப்பிற்குள்ளும் சிக்காமல் ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்குள் explore பண்றது, நிலவும் சமூக அமைப்பில் ஆண்களுக்கு வசதியாகவும், பெண்களுக்கு சுமையாகவும் போக வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கை உணர்வையும் மறுப்பதற்கில்லை.**

உறவின் இரு,வேறு பரிமாணங்களை இந்தப் படம் சொல்லியிருக்கும். கட்டற்ற காமம், காமம் வழித்தோன்றும் காதல் என்பது ஒரு பரிமாணம். திருமண ஒப்பந்தத்தை முறிக்காமல், அந்த திருமணத்தில் தான் அனுபவித்த சுகங்களை, அதில் தன்னோடு பிணைந்திருந்த காதல் மனைவியை ‘அல்சீமர்’ மனநிலையிலும் எப்பாடுபட்டாலும் காப்பாற்றுவது அவருடனான தனது வாழ்வை தன்னால் முடிந்த அளவு அழகாக்கிக் கொள்ள முயற்சிக்கும் தம்பதிகள் மற்றொரு பரிமாணம்.

குடும்பம் என்ற அமைப்பு முறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் திருமணம் தவிர்த்த வாழ்க்கையை விரும்புபவர்களும் இந்தச் சமூகத்தில் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, தாலி, வீடியோ, போட்டோ, பதிவு எல்லாமே சமுக அங்கீகாரத்துக்கு மட்டும்தான். தாலி சென்டிமென்டிற்குள் சிக்கி தனது வாழ்க்கையை தொலைத்துவிட்ட பெண்களும், குடும்பத்திற்குள் சிக்கிவிட்டதாலே அதன் அத்தனை மூச்சு திணறலையும் சகித்து வாழப் பழகிக்கொண்ட ஆண்களையும் நாம் அன்றாட வாழ்வில் கடக்காமல் இருக்க முடியாது.

குடும்ப அமைப்புக்குள் தனது காதலை பகிர்ந்துகொண்டு காதலுடன் வாழும் ஆதர்சனத் தம்பதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், அந்தக் காதலை வரவேற்கும், கொண்டாடும் அனைவரும் ‘திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல்’ என்பதை இன்றளவும் அங்கீகரிப்பதில்லை.

இன்றைய சூழலில் வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் தங்களுக்கான உறவின் வரையறைகளை சேர்ந்து வாழும் ஆண்-பெண் இருவரும் வகுத்துக்கொண்டு வாழ்வது என்பது எந்த வகையிலும் தவறில்லை என்பதுதான் எனது புரிதல். கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்விக்கு அந்த இருவர் மட்டுமே பதிலாக மாறமுடியும்.

**காதலர்களைத் பிரிப்பது, வேறு திருமணத்தை நோக்கித் தள்ளுவது என்பதுதான் இந்திய சமூக நிலைமைகளில் பெரும்பாலான குடும்பங்கள் எடுக்கும் முயற்சியாக இருக்கிறது. கௌரவக் கொலைகளும், பொருந்தா திருமணங்களும், குடும்பவன்முறைகளையும் தடுப்பதற்கான ஒரு வழிமுறையாக இத்தகைய உறவுநிலைகள் இருக்கும் என்றால், அதனை அந்த ஆணும், பெண்ணும் வகுத்துக்கொள்வார்கள் என்றால் அதில் தவறில்லை. அதேநேரத்தில், பெண்கள் அவர்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வுடன் இத்தகைய உறவுமுறைகளுக்குள் பயணித்தல் அவசியம் என்பதையும் மறுப்பதற்கில்லை.**

*இந்தப் பாடலில் எனக்கு பிடித்த சில வரிகள்*

*இருளில் தொலைந்தேன்; ஒளியாய் வந்தனை*

*காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை*

*வெள்ளம் வீழ்ந்தேன்; கரையில் சேர்ந்தனை*

*பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்ந்தனை*

*எதனில் தொலைந்தால் நீயே வருவாய்?*

*மலர்கள் கேட்டேன்; வனமே தந்தனை…!*

**

கட்டுரையாளர் குறிப்பு

**

**

உஷா பாரதி

**

ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாதவர்… தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தனையாளர்.

[பாடலதிகாரம் 5: பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு – பெண்வெளி!](https://www.minnambalam.com/entertainment/2020/10/11/5/padaladhikaram-5-vetiveru-vasam)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *