மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

மாஸ்டரின் ‘குடி’ கதை!

மாஸ்டரின் ‘குடி’ கதை!

மது அருந்துவது தவறு என்ற அட்வைஸ் கடைசியாக விஜய் படத்தில் எப்போது இடம்பெற்றது என்ற கேள்வியை, ஏதாவது டிவி சேனலில் நடக்கும் குவிஸ் புரோகிராமில் கேட்டிருந்தால் இத்தனை காலம் பெரும் சங்கடத்துக்கு ஆளாகியிருப்பார்கள் மக்கள். ஆனால், இனி அதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற அளவுக்கு ‘இனிமேல் குடிப்பியா’ என்று தனது அடி வயிற்றிலிருந்து அனிருத் பாடிய பாடலை, அவரது பிறந்தநாள் சிறப்பாக ரிலீஸ் செய்திருக்கிறது மாஸ்டர் டீம்.

மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸாகியிருந்தால், விஜய் படங்களிலேயே குறைந்த காலத்தில் படமாக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட படமாக இருந்திருக்கும். ஆனால், கொரோனாவினால் அனைத்து இயந்திரங்களும் நின்றது போலவே மாஸ்டர் ரிலீஸும் நின்றது. தியேட்டர்களை திறப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே மாஸ்டர் படத்தின் புரமோஷனுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக சோஷியல் மீடியாக்களில் புரமோட் செய்பவர்களுக்கு ஒரு அமவுண்டைக் கொடுத்து, மாஸ்டர் படத்தைப் பற்றிய விவாதங்களைத் தொடங்கியது படக்குழு. அடுத்தகட்டமாக, அனிருத் பிறந்தநாள் சிறப்பாக ‘குயிட் பண்ணுடா’ என்ற பாடலை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

படத்தில் இடம்பெறும் சோகமான மற்றும் இறுக்கமான சூழலில், கல்லூரி மாணவர்கள் பலரும் மது அருந்தும்போது, விஜய் இந்தப் பாடலைப் பாடுவதாகக் கூறுகின்றனர் படக்குழுவினர். அப்படி என்னப்பா சோகமான காட்சி என்று கேட்டால், “விஜய்யின் நண்பர் மற்றும் விஜய் பணிபுரியும் கல்லூரியில் முக்கியமான ஒருவர் இறந்துவிடுவதால் அத்தனைப் பேரும் சோகக் கடலில் ஆழ்ந்துவிடுகின்றனர். அப்போது தான் இந்தப் பாட்டு வருகிறது” என்கின்றனர். ஆனால், படத்தின் போஸ்டரிலேயே விஜய் கையில் மது பாட்டிலை வைத்திருப்பது போல் தானே வருகிறது என்று குறிப்பிட்டுக் கேட்டால், ‘அந்த காட்சிக்கு முன்பு வரையிலும் கல்லூரியிலேயே மது அருந்துவது, எப்போதுமே மது அருந்துவது என்று தான் விஜய் இருப்பார். இந்த சூழலுக்குப் பிறகு தான் எல்லாம் மாறும்’ என்கிறார்கள்.

மாஸ்டர் திரைப்படம் பெரும்பாலும் கிறிஸ்துமஸ் ரிலீஸுக்குத்தான் வெளியாகும் என்று திரையுலகில் பேசப்படுகிறது. ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்குமிடையே ஏற்பட்டு வரும் போட்டியில் தியேட்டர் தரப்பினையே மாஸ்டர் படக்குழு பெரிதும் நம்பியிருக்கிறது. தங்களிடம் மீண்டும் மக்களைக் கொண்டுவரும் சக்தி மாஸ்டர் படத்துக்கு இருப்பதாக இவர்களும் நம்புகின்றனர். எனவே, மாஸ்டர் பட ரிலீஸுக்கான ரிலீஸ் தேதி படக்குழுவினரின் கையில் மட்டும் இல்லை என்பதால் காத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

-முத்து-

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon