மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

தப்புத் தாளம் போட்டாரா ஏ.ஆர்.ரகுமான்?

தப்புத் தாளம் போட்டாரா ஏ.ஆர்.ரகுமான்?

பாடல் வரிகளுக்கு இசை அமைத்து அனைவரையும் கட்டிப் போட்டு உலகின் உச்சப் புகழை எட்டிய இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தன் இசை மூலம் ஈட்டிய பணத்துக்கு வரி கட்டவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது வருமான வரித்துறை, அதையடுத்து இதுகுறித்து ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

ஒழுக்கம், நேர்த்தி ஆகியவற்றை இசையில் மட்டுமல்ல தன் இயல்பிலும் வைத்திருக்கும் ஏ.ஆர். ரகுமான் பற்றிய இந்த ஐடி செய்தி உலகம் முழுவதிலும் உள்ள ரகுமான் ரசிகர்களால் லேசான அதிர்ச்சியோடுதான் பார்க்கப்பட்டது.

என்ன ஆச்சு? ரகுமான், உண்மையிலேயே வரி ஏய்ப்பு செய்தாரா? தப்புத் தாளம் போட்டாரா?

கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் இது பத்து வருடப் பஞ்சாயத்து.

2010 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல மொபைல் நெட்வொர்க்நிறுவனமான லிபரா, தனக்கென பிரத்யேகமான ரிங் டோன் வேண்டும் என்பதற்காக உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை நாடியது. ரகுமானும் அந்த நிறுவனத்துக்கென தனித்துவமான ரிங் டோன் இசை அமைத்துக் கொடுத்தார். bird call என்பது உட்பட அந்த நிறுவனத்துக்கு ரகுமான் அமைத்துக் கொடுத்த ரிங்டோன் விளம்பரங்கள் இன்னும் யூ ட்யூபில் கிடைக்கின்றன. வெள்ளையர், கறுப்பர் என எல்லாரையும் கவர்ந்திழுத்த இசைத் துளியாக அமைந்தது ரகுமானின் இந்த ரிங் டோன்.

அதற்கான ஊதியமாக 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பெற்றார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று கோடி ரூபாய் ஊதியமாகப் பெற்றார் ரகுமான்.

ரகுமான் 2011-12 ஆண்டிற்கான தனது மொத்த வருமானம் சுமார் 15.98 கோடி ரூபாய் என்று கணக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில் ஃபோட்டான் கதாஸ் மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட லிபரா மொபைல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட சுமார் 54 லட்சம் மற்றும் ரூ .3.47 கோடி ரூபாய் வருமானத்தை ரகுமான் காட்டவில்லை என்று ஆய்வில் தெரியவந்தது.

அந்த ஊதியத்தை ரகுமான் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்குப் பெறாமல், தான் வைத்திருக்கும் ஏ.ஆர். ரகுமான் ஃபவுண்டேஷன் என்ற டிரஸ்டின் வங்கிக் கணக்கில் போடச் சொன்னார். அதன்படியே அந்த டிரஸ்டின் வங்கிக் கணக்கில் அப்பணம் பெறப்பட்டது. ரகுமான் அதை தனது வங்கிக் கணக்கில் வாங்கியிருந்தால் அதற்குரிய வரி கட்ட வேண்டியிருக்கும். வரியைத் தவிர்ப்பதற்காக தனது டிரஸ்ட் வங்கிக் கணக்கில் தன் வருமானத்தைப் போடச் சொல்லியிருக்கிறார் ரகுமான் என்பதுதான் வருமான வரித்துறையின் கருத்து.

வருமான வரித்துறை முதன்மை ஆணையர், ரகுமான் தனக்கு லிபரா மொபைல் மூலம் கிடைத்த வருமானத்தை ஏன் டிரஸ்ட் மூலம் பெற்றார் என்று வருமான வரித்துறையின் கேள்வியை எழுப்பினார். அந்த நேரத்தில் அவரது டிரஸ்டுக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளைப் பெறுவதற்கான உரிமம் இல்லை. எனவே இந்த ரூ .3.47 கோடி ரூபாயை உதவித் தொகையாகவும் கருத முடியாது என்று வருமான வரித்துறை 2015 ஆம் ஆண்டு ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

"ரகுமானின் வருமானம், வரி விதிக்கப்பட வேண்டியது. அது நேரடியாக ரகுமானால் பெறப்பட வேண்டும். அந்த வருமானத்துக்குரிய வரி செலுத்தலுக்குப் பின் அதை அறக்கட்டளைக்கு மாற்றலாம். ஆனால் அறக்கட்டளைக்கு வருமானம் வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படுவதால், அதை அறக்கட்டளை மூலம் திருப்பி விட முடியாது.” என்பதுதான் வருமான வரித்துறையின் நோட்டீசில் இருந்த அம்சங்கள்.

இதையடுத்து ரகுமான் சென்னை வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகினார். இதை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த 2019 செப்டம்பர் மாதம் ரகுமானுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதாவது உள்துறை அமைச்சகத்தின் அனுமதியோடுதான் தனது டிரஸ்டில் செலுத்தியிருக்கிறார் என்று தீர்ப்பாயம் தெரிவித்தது.

இந்த நிலையில் முழுதாக ஒரு வருடம் கழித்து தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி வழக்குத் தொடுத்திருக்கிறது வருமான வரித்துறை. இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது நீதிமன்றம்.

இதற்கிடையில், “வருமான வரித்துறையில் இருந்து சிலர் ரகுமானைத் தொடர்புகொண்டு லிபரா மொபைல் வருமானம் தொடர்பாக ஐடி தீர்ப்பாயத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போக இருக்கிறது. நீங்கள் ஒரு டீலுக்கு உடன்பட்டால், நீதிமன்றத்துக்கு செல்லாமல் தடுத்துவிடலாம் என்று பேசியிருக்கிறார்கள். ஆனால் ரகுமான் அதற்கு உடன்படவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்துக்கு சென்ற பிறகும் சிலர் ரகுமானிடம், ‘இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகவில்லை. நீங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் கோர்ட்டில் கேஸுக்கு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’ என்று பேசியிருக்கிறார்கள். ஆனால் இப்போதும் அதற்கு இடம் கொடுக்காத ரகுமான், ‘நான் தெளிவாக இருக்கிறேன். என் மீது ஏதும் தப்பில்லை. நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன்’என கூறிவிட்டார்” என்கிறார்கள் வருமான வரித்துறையில் நடப்பதை அறிந்த சிலர்.

வேந்தன்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon