0கரை கடந்த வெள்ளம்!

entertainment

வனமெல்லாம் செண்பகப்பூ 9 – ஆத்மார்த்தி

சந்தோஷமாக ஒரு காதல் பாடல் என்பதற்கான லட்சணங்கள் என்னென்ன?

மேதைமை மிளிரும் பல பாடல்கள் நில்லாமல் நகர்ந்தோட நேர்ந்த அதே புகழ்வானில் ஏன் என்றே காரணம் அறிய முடியாத சில பாடல்கள் பல்லாண்டு நிற்கும் மாயமும் நிகழும்.

பிறைசூடனின் மகுடம் இந்தப் பாடல். தனக்கென்று தனியாவர்த்தனம் செய்து மிளிர்ந்த கவி பிறைசூடன். யூகிக்க முடியாத மொழியாள்கை அவருடைய அபரிமிதமான மொழிஞானத்தின் வழி விளைந்தது. பல நட்சத்திர கானங்களுக்குச் சொந்தக்காரரான பிறைசூடன் எம்.எஸ்.விஸ்வநாதனின் சிறை படத்தில் அறிமுகமானவர். இளையராஜா உட்பட பல இசையமைப்பாளர்களுக்கும் எழுதியிருக்கிறார். அவற்றில் **`மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ’ எனும் பாடல் பெரிய வீட்டுப் பண்ணக்காரன் படத்தில் பிறைசூடனுக்குப் பெரும்புகழ் பெற்றளித்தது.** மெல்லிய உணர்வுகளைப் பறைசாற்றும் பாடல்கள் பிறைசூடனுக்குக் கைவந்த கலை என்றால் பொருந்தும்.

`சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி’… அப்படியான ஒரு பாடல். தானந்தன கும்மி கொட்டிய பாடல், ரஜினியின் சூப்பர் ஹிட்களில் தனக்கென்று தனித்தொலித்த நல்முத்து. மை டியர் மார்த்தாண்டன் படத்தில் `ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே’ பாடலையும் வெகு நாட்களுக்கு மனவெளியில் தன்னைப் படர்த்திக்கொண்ட பாடலென்று சுட்ட முடியும். `உயிரே உயிரின் ஒளியே’ என்று ஆரம்பிக்கிற பொம்முக்குட்டி அம்மாவுக்குப் பாடலை மறக்க முடியாதல்லவா… `காதலுக்கு ராஜா சிரிக்கும் ரோஜா’ என்ற பாடல் ராஜா கைய வச்சா படத்தில் மிளிர்ந்து சிறந்தவொன்று. **`சோலைப்பசுங்கிளியே’ என்ற பாடல் என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்றது. `காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ – கோபுரவாசலிலே படத்தின் இசைவழி எழுத்தெனவே மனங்களை வென்றது. படிச்ச புள்ள படத்தில் இளையராஜா தன் குரலில் பாடிய `பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே’ என்ற பாடலை மறக்க முடியுமா என்ன? அதைத் தந்தது பிறைசூடனின் பேனாதான்.**

இங்கே பேசவந்த பாடல் உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் இடம்பெற்ற பாடல். நடிப்பு கார்த்திக், மோனிஷா உன்னி. பாதிப்பூக்களில் குறிப்பிடத்தக்க தாரகை மோனிஷா. தன் 21ஆவது வயதில் கார் விபத்தில் அன்னையின் மடியில் உறங்கியபடி மரணம் தழுவினார். நடிக்க வந்த சொற்ப காலத்தில் 25 படங்களுக்குள் நடித்த மோனிஷா, யாராலும் போலி செய்ய முடியாத புன்னகையைத் தன் முகவிலாசமாகக் கொண்டவர். நகஷதங்கள் படத்துக்காகத் தேசிய விருதைப் பெற்றுக்கொண்ட நன்னடிகை. நடிப்பென்றே உணரவியலாத இயல்பின் தருணங்களைத் தோற்றுவித்த மகா நடிகை.

**பார்க்கவும் கேட்கவும் அழகு**

சில பாடல்கள் மாத்திரமே பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அழகான பாடல்களாகத் தனிக்கின்றன. எடுத்த விதத்தினாலேயே சுமாரிலும் சுமாராகப் போன பாடல்கள் ஒருபுறம், எடுத்த விதத்தாலேயே வாழ்ந்தோங்கியவையும் மறுபுறம். இதன் நடுவே அற்புதமெனவே தனிக்கும் சில வைடூரியப் பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலை நிச்சயம் சொல்ல முடியும். குரு தனபாலின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் இந்தப் பாடல் பரவசத்தைப் பார்ப்பவருக்கு வழங்கும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு ஸ்வர்ணலதா இணைந்து பாடிய [இந்தப் பாடலைக்](https://www.youtube.com/watch?v=8Hjf-UyTSKg) காதலின் உற்சாகப் பாடல்களின் வரிசையில் முதலிடத்தில் வைக்க விரும்புகிறேன். அதற்கான காரணங்களை இந்தப் பாடலினூடாகவே பார்க்கலாம். கஸல் பாடல்களின் அதே செலுத்து திசையை, உட்கட்டுமானத்தை எல்லாம் தமிழில் சில பாடல்களில் முயன்று பார்த்து அவற்றில் பெருவெற்றியும் அடைந்தார் இளையராஜா. இன்றளவும் கிளாஸிக் ஐஸ் பூக்களாகவே தனித்து ஒலிப்பவற்றில் உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் முக்கிய இடம் வகிக்கும் ஒன்று. இதை ஸ்வர்ணலதா தொடங்குவதே மனித வழமைக்கு அப்பாற்பட்ட ஆழமொன்றை முன்னிறுத்தியபடி தொனிக்கும்.

பெ: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி,

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி,

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

அன்பே ஓடி வா… அன்பால் கூட வா… ஓ… பைங்கிளி…

நிதமும்

**பல்லவி நிறைந்த பிறகு வரக்கூடிய இணைப்பிசைக்கு நடுநடுவே சின்னச்சின்ன குழலிசை ரசம் கூட்டும். இந்தப் பாடலின் பலமே தபலா இசைதான். அதன் தீர்க்கமும் தனித்து ஓங்கிச்செல்லும் பாங்கும் சூஃபி பாடல்களுக்கு நிகரான கட்டுமானத்தில் நகரவல்லது.** பாலு, ஸ்வர்ணலதா இரு குரல் வகைமைகளுக்கும் இடையே இயல்பாய்த் திரியவல்ல முரண்கள் அத்தனைக்கும் பின்னதான அற்புதமாக இந்தப் பாடலைப் புனைந்துருவாக்கினார் ராஜா.

இந்த இணை பாடிய அத்தனை பாடல்களிலும் இதையே முதலிடப் பாடலாகக்கொள்ள முடியும். ஸ்வர்ணலதாவின் குரல் சோகத்தின் அடுத்த சதுப்பில் எப்போதும் உறையக் கூடியது. பாலுவோ சந்தோஷத்தின் ராஜாங்கத்தை மெய்ப்பிக்கக்கூடிய குரலாளர். இரண்டையும் இணைக்கையில் பாலுவின் குரலைச் சிருங்காரத்தின் அருகிலும் ஸ்வர்ணலதாவின் குரலைச் செல்லச் சிணுங்கலுக்கு அப்பாலும் ஒலிக்கச்செய்தது. இந்தப் பாடலை முன்னர் பெய்திராத மழையாகவே மாற்றித் தந்தது ராஜ வேலை.

பெ: சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்

சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்

பொன்னி பொன்னி நதி நீராட வரணும்

என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்

இவற்றை எல்லாம் தன் வழக்கயான குரல் மென்மையிலிருந்தே எடுத்தாண்டிருந்தார் ஸ்வர்ணலதா.

பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை

அள்ளித் தரத் தானாக வந்துவிடு,

இங்கேதான் இந்தப் பாடலை அற்புதமாக்கும் ஜால வித்தை தொடக்கம் எனலாம்.

என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பாணத்தை

கண்டு கொஞ்சம் காப்பாற்றித் தந்துவிடு,

இங்கே உடைந்து சிதறும் ஏதோவொரு கண்ணறியாச் சுவர்.

அன்பே ஓடி வா அன்பால் கூட வா…

இந்த இடத்தை ஸ்வர்ணலதா எடுக்கும் அலாதி அழகுக்காகவே இந்தப் பாடலைப் பல முறைகள் கேட்கலாம்.

அன்பே ஓடி வா… அன்பால் கூட வா,

ஓ… பைங்கிளி… நிதமும்…

இங்கே வந்து கலப்பார் பாலு. குரல் என்பது ஆளுமை என்பதைப் புரிந்துகொள்வதற்கான உலகளாவிய குரல் அவருடையது. அதை நிரூபிக்கும் நற்சாட்சியம் இந்தப் பாடல். சலிக்காத செந்தேன் மழை.

இருவரும்: என்னைத் தொட்டு …

ஆ: நெஞ்சைத் தொட்டு

பாலசுப்ரமணியம் இதைப் பாடும் முதன்முறை பனிக்கூழை இருக்கை நிறைய அள்ளி உடலெல்லாம் எறிந்தாற்போலே உற்சாகம் ததும்பும்.

ஆ: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி,

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி,..

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே

ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே,

மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே

கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே,

இந்தப் பாடலின் அழகு நிறைந்து வழியும் இடமென்றே இப்படி இரட்டித்துத் தொடங்குகிற சரண அமைப்பினைச் சுட்ட முடிகிறது. அதிலொன்றை அகற்றிவிட்டு வேறொரு வார்த்தையைப் போட்டுக்கூட இந்தப் பாடலைச் செய்திருக்க முடியும் என்றாலும் அத்தனை அழகையும் விஞ்சிய பேரழகு அந்தச் சொல் இரட்டிக்கையில் மாத்திரமே நேர்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதைக் கொணர்ந்த கவிஞனுக்கும் இசைத்த ராஜாவுக்குமான பெருமித மகுடமாகவே இந்தப் பாடல் மாறுகிறது.

கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையைக்

கட்டிவிட்டுக் கண் சிரிக்கும் சுந்தரியே,

இதைப் பாடும் பாலு தனித்துவமாய்க் கசிந்து குழைவதன் அழகு வேறு பாடலில் நிகழாப் புதுமை என்பது தகும்.

அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தைக்

கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே

இதில் வருகிற அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளம் என்ற பதத்தை வெகுகாலம் முயன்றும் கடந்து வர முடியாமல் தவிக்கிறது மனம். கரைகடந்த வெள்ளம் என்பதை இத்தனை அழகாகச் சொல்ல என் தமிழால் மட்டுமே சாத்தியம் என்று கூவத் தோன்றுகிறது. கவிதையும் இசையும் சங்கமிக்கும் உச்சபட்சமாகவே இதற்கடுத்த வரிகள் நிகழாவிட்டால்தான் அதிசயம். அப்படியான நேரடி மின்னலாய் விளைந்த நல்வரிகள்…

என்னில் நீயடி உன்னில் நானடி

என்னில் நீயடி… உன்னில் நானடி…

ஓ பைங்கிளி… நிதமும்…

என்னில் நீயடி

உன்னில் நானடி

என்கிற இந்த இரண்டு வரிகளைவிடச் சுருக்கமாகக் காதலெனும் பேருணர்வைப் புரிவிக்கும் வேறொரு சொல்லாடல் இருந்துவிடப் போவதில்லை. இந்த வைரவரிகள் எல்லாக் காலத்திலும் பிறைசூடனின் எழுத்து வல்லமைக்குப் பெருமையின் மலர்களைச் சொரிந்தபடி இருக்கப் போகின்றன.

ஆ: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி…

அன்பே ஓடி வா… அன்பால் கூட வா…

ஓ… பைங்கிளி… நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

காதல் என்னும் ஒரு சொல்லைக்காட்டிலும் கூடுதலான சொல் ஏதும் இருந்துவிடப் போவதில்லை காதலின் சரித்திரத்தில் அப்படியான காதலை அணிகலனாக அணிந்துகொண்ட எத்தனையோ நல்முத்தாரங்கள் இசைவழி நிகழ்ந்திருக்கின்றன எனினும் உன்ன நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் இடம்பெற்ற என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட பாடல் இன்றளவும் காதலின் சந்நிதியில் தனித்தீபம் எனவே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

வாழ்க இசை!

(((தொடரின் அடுத்த பகுதி நாளை)))

[அசலை விஞ்சிய நகல்!](https://www.minnambalam.com/entertainment/2020/08/04/5/vanamellam-senbhagapoo-music-series)

வாசகர்களின், வேண்டுகோளுக்கு இணங்க வனமெல்லாம் செண்பகப்பூ இசை தொடர் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *