மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஆக 2020

பாடலுக்கு மொழி இருக்கிறதா..?

பாடலுக்கு மொழி இருக்கிறதா..?

வனமெல்லாம் செண்பகப்பூ 5 - ஆத்மார்த்தி

மொழி என்பது பாடலின் உடல்மீது போர்த்தப்படுகிற ஆடை போன்றது என்றும், மொழிதான் பாடலின் ஆன்மா என்றும் இருவேறு கருத்துகள் தொடர்கின்றன. நாம் சொந்தம் கொண்டாட விரும்புவது இசையா அல்லது சொற்களா என்பதற்கு நடுவே நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி தப்புகிற மூன்றாம் அம்சம்தான் பாடுகிற குரல். கோரஸ் எனப்படுகிற உடனொலிக் குரல்கள் கடலில் கரையும் நுரைப் பூக்களாய்த் தளும்புகின்றனவே... அவற்றுக்கென்று தனி அடையாளம் காண்பதெங்கனம்?

பாடல் என்பது உணர்வுகளின் சாட்சியம். ஆகவே, அங்கே முரண்களுக்கு என்றென்றும் குறைவே இல்லை. பாடல்களின் பின்புலத்தில் இயங்குகிறாற்போல் தோற்றமளித்தாலும்கூட உண்மையில் பாடல்களின் மீதான இசையின் பற்றுதல் என்பது குழந்தைப் பிடிவாதம் போன்றது. அதுவே சில சமயங்களில் மேதைகளின் மௌனம் போலவும் நிகழ்கிறது.

மொழி என்பது நிலத்தின் மீது படரும் நிழல் போன்றது. இன்னொரு நிலத்தின் இன்னொரு நிழல் போலவே தோன்றினாலும் கூடவே தனக்கென்று தனித்த குணங்களைக்கொண்டே இருக்கிறது. அருகாமை இரு மொழிகளின் இசைத் தேவைக்கிடையே நிலவக்கூடிய நுட்பமான வேறுபாடுகள் தொடங்கிப் பாடுகிற குரல்கள் தேர்வு வரை எத்தனையோ பொருத்தமின்மைகளையும் சமரசங்களையும் தாண்டித்தான் ஒவ்வொரு பாடலும் உருவாகிறது. நாடெங்கும் செல்வாக்குப் பெற்ற ஒரு பாடகரின் குரலுக்கான தேவை, பயன்பாடு ஆகிய யாவையுமே நிலம், மொழி ஆகியவை சார்ந்த பாடல் உருவாக்கத்திற்கான தேவை சார்ந்ததே.

கன்னடம், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் காலங்காலமாக மெலடி எனப்படுகிற மென்மனப் பாடல்களின் உருவாக்கத்தில் அடிப்படை அம்சம் என்னவென்றால் மித மென்மை எனும் பேச்சுக்கே வேலையின்றி ஆக மென்மையான பாடல்களாகவே அவை தனிப்பதுதான். இதுவே தமிழ், மலையாள மொழிகளில் சற்றே கனமான மெலடி பாடல்கள் காணப்படுகிற அளவுக்குக் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இருப்பதில்லை.

கவிதைக்குச் சொல்லப்படுகிற இலக்கணங்களில் ஒன்று என்னை மிகவும் கவர்வது. எந்த ஒரு கவிதையையும் இன்னொரு மொழியில் பெயர்க்கவே முடியாது என்பது அந்த இலக்கணத்தின் சாரம். அப்படித்தான் பாடல் எனும் அற்புதமும் ஒரே மொழியில் ஒருமுறை மாத்திரமே நிகழ்வது. எப்படி மொழிபெயர்ப்புக் கவிதைகளில் செய்யப்படுகிற மாற்றங்களும் சிதைவுகளும் மொழி சார்ந்து நடைபெறுகின்றனவோ... அவ்வண்ணமே மீவுரு செய்யப்படுகிற பாடல்களின் விஷயத்திலும் நிகழ்கின்றன. பல பாடல்கள் முதல் மொழியில் முதன்முறை உருவாக்கியதற்கும் மீவுரு செய்வதற்கும் இடையில் ஆன்மாவை இழந்து வெறும் குரல் பிரேதங்களாகத் தேம்பித் திகைப்பதை நாளும் கண்டதுதான் இந்தியத் திரை உலகம்.

இங்கே செல்வாக்குப் பெற்ற பாடல்களை மீவுரு செய்வது வணிக ரீதியிலான பாதுகாப்புக்காக நிகழ்கின்றன. பல பாடல்கள் அப்படியே பிரதி எடுக்கப்பட்டதும் வேறு சில பாடல்கள் மாற்றங்களுடன் உருவானதும் வரலாறு. எல்லாவற்றையும் தாண்டி எந்த மொழியானால் என்ன என்று தப்பிப் பிழைத்த அற்புதங்களும் அநேகம். இதெல்லாமே ஒரே புதிரின் வெவ்வேறு விடைகள் என்பதும் அத்தனையுமே சரியான விடைகள்தாம் என்பதும் கூடுதல் புதிர்களாய் வசீகரிக்கின்றன.

காலம் என்பது இசையின் மேனியில் தன் கையெழுத்தை அழுத்தம் திருத்தமாய்ப் பொறிக்க வல்லது. மேலும், அதுவே மொழியின் திசைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இசையின் பயணத்தைப் பராமரிக்கவும் செய்வது. இவற்றுக்கிடையே அந்தந்த நிலத்தின் தனித்த தன்மைகளையும் உள்வாங்குகிற பாடல்களே வெல்கின்றன. இது மாய வேலை.

மாறாத மெட்டு, மாறிவிட்ட உணர்ச்சி

`கீதா’ என்ற படம் கன்னடத்தில் ஷங்கர்நாக் இயக்கி நாயகனாக நடித்த வெற்றிப் படம். இசை இளையராஜா. இந்தப் படத்துக்காக அவர் உருவாக்கியதில் மூன்று பாடல்கள் தமிழ் உள்ளிட்ட தென்மொழிகளில் மீவுரு செய்யப்பட்டன. அத்தனையும் வெற்றிப் பாடல்கள்.

`நன்ன ஜீவ நீவு நன்ன பாட ஜோதி நீனு’ என்ற பாடல் தமிழில் தேவன் தந்த வீணை என்ற புகழ்வாய்ந்த பாடலாக மாறியது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது.

யெனே கேளு கொடுவே நினகே நானேகா

ஜோதியல்லி ஜொதி ஜோதியல்லி

என்ற பாடல் தமிழில் நூறாவது நாள் படத்தில்

விழியிலே மணி விழியில்

மௌன மொழி பேசும் அன்னம்

என்ற [பாடலாக] மாறிற்று. அதே பாலுவும் ஜானகியும் பாடியது.

கேளதே நிமகீகா என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியது. இதைத் தமிழில் ஆயிரம் நிலவே வா என்ற படத்துக்காக தேவதை இளம் தேவி என்ற பாடலாக்கினார் ராஜா. மூலப்பாடல் கன்னடத்தில் சந்தோஷமான குரலில் பாலு பாடுவதாக இருந்தது. அதுவே தமிழில் சற்றே வேகமான அதே நேரத்தில் அழுகைக்கு அருகமைந்த தனித்த குரலால் முழுப் பாடலையும் எடுத்துச் சென்றிருப்பார் பாலு. பின்னணி இசையும் தமிழில் மந்தமான, எளிதில் உணர்வதற்கு வழி தராத இருள் பொங்கும் அமானுட வேகத்தோடு இயங்கும். கன்னடத்தில் தீர்க்கமான, மத்திம மென்மையோடு துள்ளிச் செல்லும் வேக இசையாக அமைந்திருக்கும்.

இரண்டு பாடல்களையும் இன்னும் அழுத்தம் திருத்தமாகப் பிளக்கும் வேறொரு வேற்றுமை உண்டு. அது கன்னடப் பாடலின் சரணங்களுக்கு இடையே நகர்ந்து முடியக்கூடிய கதைகூறல். அந்தக் கதைகூறலைத் தமிழில் அழகான மாயக் கத்தரிகொண்டு வெட்டி எடுத்திருப்பார் ராஜா. கதையோடு கன்னடப் பாடலைக் கேட்பதற்கும் அதுவின்றித் தமிழில் கேட்பதற்குமான வித்தியாச நுட்பம் ஒரே பாடலின் இரு வேறு பிரதிகளாய் இசை நேயர்களின் மனங்களில் நிறையும்.

அது வேறு மைனா!

`தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ என்ற பாடல், நிழல்கள் படத்திற்காக இசைஞானி உருவாக்கியது. இப்பாடலைத் தமிழுக்காக 1980ஆம் ஆண்டு பாடியவர் எஸ்.ஜானகி. அதே இளையராஜா இசையில் 1984இல் தெலுங்கில் உருவான சிதாரா படத்துக்காக `வென்னெல்லோ கோதாரி அந்தம்’ என்ற பாடலாக மறுவுரு செய்யப்பட்டது. இந்தப் பாடலையும் ஜானகிதான் பாடினார். தெலுங்குப் பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார்.

`ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா ஓ மைனா’ என்ற பாடலை ஆனந்தக் கும்மி என்ற படத்திற்காக எஸ்.ஜானகியும் எஸ்.பி.ஷைலஜாவும் இணைந்து பாடினார்கள். இளையராஜாவின் சொந்தப் படமான ஆனந்தக் கும்மி படத்தின் கதையை எழுதி இந்தப் பாடலையும் எழுதினார் வைரமுத்து. தெலுங்கில் சிதாரா படத்தில் இதே பாடல் டூயட்டாக உருவெடுத்தது. பாலசுப்ரமணியம், ஜானகி இருவரும் இணைந்து பாடினார்கள். இதை எழுதியவர் வெட்டூரி சுந்தர் ராமமூர்த்தி.

இந்தப் பாடலைத் தமிழில் கேட்ட இரு பெண் குரல் பாடலிலிருந்து முற்றிலுமாகத் தனிக்கவைத்தார் இளையராஜா. சின்னஞ்சிறிய விள்ளலாய்ச் சொல்வதானால் தெலுங்குப் பாடலில் பாலு பாடும் மைனா சற்றே தெலுங்கு பூசிய சொல்லாகவே ஒலிக்கும். தமிழில் ஜானகி பாடும் மைனாவோ வேறாய்த் தோன்றும்.

பாடல்கள் இரண்டையும் கேட்டால் எது பிடிக்கும் என்று பிரித்தறியவிடாமல் இரண்டுமே பிடிக்கும் என்று நிலைப்பதுதான் இசையின் பெருமிதம்.

வாழ்க இசை!

(((தொடரின் அடுத்த பகுதி நாளை)))

மேதைகளின் கூட்டணியில் பிறந்த அற்புதம்!

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

3 நிமிட வாசிப்பு

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

3 நிமிட வாசிப்பு

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

அசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்!

3 நிமிட வாசிப்பு

அசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்!

சனி 1 ஆக 2020