மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

மேதைகளின் கூட்டணியில் பிறந்த அற்புதம்!

மேதைகளின் கூட்டணியில் பிறந்த அற்புதம்!

வனமெல்லாம் செண்பகப்பூ 4 - ஆத்மார்த்தி

ஒரு பாடல் யாருக்காகப் பாடப்படுகிறது... ஒரு பாடலை எத்தனை பேர் இதுவரை கேட்டிருக்கிறார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியுமா?

இப்படிக் கலையை நுகர்வோரைக் கணக்கிடுவதற்கான சூத்திர சூட்சுமங்களை யாராவது வகுத்திருக்கிறார்களா? பள்ளிக்கூடத்தின் வாசலில் கதவு திறந்துகொள்கிற கணம் ஹேவென்ற இரைச்சலோடு வாசலை நோக்கி ஓடிவருகிற குழந்தைகளில் தன்னுடையதை மாத்திரம் சட்டென்று தூக்கிக்கொண்டு நடக்கும் தந்தைமையின் தோள்களில் அமர்ந்திருக்கிறாற்போல் சில பாடல்களை மாத்திரம் தனிக்கச்செய்கிறோமே ஏன்? பாடல்களுக்கு அவரவர் தர முனைகிற புனித மதிப்பீடு உண்மையானதா அல்லது கண்ணை மறைக்கும் பாசத்தின் செல்வாக்குப்போல சரிகைக் காகிதத்தைக் கிழித்ததும் எதுவுமற்ற மற்றொன்றாக அப்பாடலும் மாறக்கூடியதா?

குழந்தை வளரவளரத் தனக்கான செல்லச் சொற்களை இழந்துகொண்டே வந்து ஒரு கட்டத்தில் இரண்டாம் பருவத்தினுள் வேறொரு யுவனாக நுழையும்போது சொல்லில் வராத சிறு வெறுமையொன்று நேருமே... அப்படித்தான் பாடல்களும் மெல்லக் கைவிடப்படுகின்றனவா? இறந்த காலத்தின் பாடல்கள் மாத்திரம் அதே பழைய காலத்தின் தருணங்களை, மனிதர்களை, சம்பவங்களினுள்ளே பொதிந்திருக்கும் பழைய நிஜங்களை, மீவுரு செய்து காண்பிக்கிறதே... அது மந்திர விளைச்சலா? பாடல்கள் காலக் காற்றுக்கு உடைபடாத காத்திரக் குமிழிகளா?

உணர்ச்சிவயப்பட்ட மனிதர்களின் கதைகள்

அதீதமான உணர்ச்சிவயப்பட்ட மனிதர்களையும் அவர்தம் கதைகளையும் படமாக்க எழுபதுகள், எண்பதுகளில் இந்திய சினிமாவின் பலரும் முயற்சி செய்தார்கள். பொதுவில் வாழ்வதற்குக் கிடைக்கிற சூழ்நிலைகளைத் தனிக்கச் செய்யும் அவரவருக்கான சிறப்புத் திருப்பங்களைக் கதைப்படுத்த முன்வந்தார்கள். முற்றிலும் சாதாரண மனிதர்கள் முழுவதுமான விலக்கத்தோடு செயல்களைப் புரிந்தார்கள். அதீதமும் விநோதமும் மென்பிடிவாதமும் வன்மையான உறுதியுமாக வாழ்க்கை நதியின் இடவலத் துடுப்புக்களாகவே கதைகள் பெருகின. மனிதர்கள் தீர்வதே இல்லை என்பதால் கதைகளுக்கும் குறைவே இல்லாமல் போனது. பாலசந்தர் அப்படியான திரைக்கதைகளைப் பிரியத்தோடு கையாண்ட ஒருவர் எனலாம்.

ஐ.வி.சசி இயக்கிய `ஆ நிமிஷம்’ தெலுங்கில் `குப்பேடு மனஸா’கவும் தமிழில் `நூல்வேலி’யாகவும் மீவுரு கண்டது. இரண்டுமே ஒருகாலத் தயாரிப்புகளாகவே உருவாகின. நூல்வேலியை இயக்கியவர் கே.பாலசந்தர். இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இதன் பாடல்கள் தமிழ்த்திரையின் செவ்வியல் அழகுப் பாடல்களின் சரளியில் என்றும் இடம்பற்றி நிலைப்பவை.

`நானா... பாடுவது நானா...’ என்ற பாடல் எஸ்.பி.பாலு, வாணி ஜெயராமின் குரலில் தீப்பற்றிய பூப்போலவே மனம் பற்றுவது. அந்தரங்கமான முறையிடலுக்கான மகா மாண்புக்குரிய குரல் வாணியுடையது. இந்தியத் திரைவானின் தகர்க்க முடியாத குரல் மனுஷி வாணி. பாலசுப்ரமணியத்தின் தெலுங்குப் பூர்வீகத்தின் லேசான சாயல் தெலுங்கு நடிகர்களுக்காக அவர் பாடும்போது மிக லேசாக உருவாகிவிடுவதாக என் கணிப்பு. சரத்பாபு அதற்கொரு சிறந்த உதாரணம். அந்தக் கூட்டணிக்கு இந்தப் பாடல் நற்சான்று.

பங்கார சங்கீதம் பாபுகாரு

`தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம்’ என்ற பாடலும் அப்படிப்பட்டதுதான்.

மையக்குரலாக பாலசுப்ரமணியத்தின் குரலைத் தேர்வு செய்தாயிற்று. அவரைக்கொண்டே நான்கில் மூன்று பாடல்களைப் பாடச் செய்த பிறகு பின்புலத்தில் ஒலிக்கக்கூடிய இன்னொரு பாடல் மட்டும் மிஞ்சுகிறது. இதையும் அதே பாலசுப்ரமணியத்தைக் கொண்டே பாடச்செய்வதா அல்லது இன்னொன்று வேறு பாடகரைக் கொண்டு பாடவைப்பதா என்னும் கேள்வி எழுகிறது.

ஏன் அந்தக் குரல்?

பாலு வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கு, இந்தப் பாடல் பின்புலத்தில் ஒலிப்பது என்ற காரணம் வலுவானதாய் இருக்கிறது. வேறு யாரைப் பாடவைப்பது? யேசுதாஸ் அல்லது ஜெயச்சந்திரன் இருவரது குரலும் சரிவராது. சற்றே கனமான பாடல். சவுந்தரராஜனைப் பாட வைத்தால் பாடல் அவரது குரல் வெளிக்குள் எங்கோ ஓரத்தில் ஒளிந்துகொள்ளுமோ என்ற அச்சம் மறுக்க முடியாதது. பாடலோ மனம்வெளிறிப் பாடுகிற தத்துவ விட்டேற்றிப் பாடல். இதற்கான குரலைத் தேர்வு செய்வதில்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற மாமேதையின் ஞான வசீகரம் ஒளிந்திருக்கிறது. விஸ்வநாதனே இந்தப் பாடலைப் பாடியிருக்கலாம். அவர் தேர்ந்தெடுத்த குரல்தான் விஷயமே. அது பாலமுரளி கிருஷ்ணாவின் பூமிருதுக்குரல்.

கனமும் மென்மையும் ஒருங்கிணைவதில் செம்பு உள்ளுறையும் பொன் தங்கமாகவே தன் குரலைச் சொல்லுக்கேற்ப ஆடும் மாயப்பாம்பாக்கி வித்தை புரியக்கூடிய குரலாளர் பாலமுரளி கிருஷ்ணா. அவர் பாடியதாலேயே இந்தப் பாடல் நிரந்தரமாய்த் தன்னை ஒளிகுன்றா தீபமாக மாற்றிக்கொண்டது.

கணிக்கவே முடியாத மாபெரும் ஞானி கண்ணதாசன். தன் மனதுடனான உரையாடலை வேறெந்த மொழியிலாவது இப்படி சாத்தியப்படுத்தி இருக்கிறார்களா எனத் தெரியாது. தமிழில் விளைந்த நல்முத்து கண்ணதாசன். அதற்கு இந்தப் பாடல் நல்லதொரு உதாரணம்.

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)

ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி (2)

காரியம் தவறானால் கண்களில் நீராகி

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே

மனசாட்சியே

ரகசியச் சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)

சோதனைக் களம் அல்லவா?

நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?

ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே

ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)

யாருக்கும் நீயல்லவா

நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா

ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி

யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

மொழிவனத்தின் அர்த்த மலர்கள்

இந்தப் பாடலில் நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா என்ற வரியை எளிதாக எடுத்துக் கொண்டுவிட முடியுமா? நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா என்ற வரியையும் சேர்த்துப் பார்த்தால் அபாரமான மொழிவனத்தின் அர்த்த மலர்களாக நம் மீது படருகின்றன அல்லவா? அதுதான் கண்ணதாசன் எனும் பெருங்கவியின் மொழி வளமை. ஆசையில் கல்லாவதும் அச்சத்தில் மெழுகாவதும் என்ன மாதிரியான இரட்டைகள்? யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பது சொல்ல எளிதாக இருக்கக்கூடும் அத்தனை தகிப்பல்லவா அப்படி இருக்க நேர்வது?

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாடல் மந்திரங்களினால் கோர்க்கப் பெற்ற வார்த்தை மாலை. அதனை இசைக்கு அணிவித்தது கண்ணதாச ஜாலம். அதற்கு இசை தந்து அதனை வாடாமாலையாக்கித் தந்தது விஸ்வநாத சூட்சுமம். ஒப்புமை இல்லாத மாயக்குரலால் இந்தப் பாடலையே மனங்களில் பெய்கின்ற தீரா மழையாக்கியது பாலமுரளி கிருஷ்ணா எனும் மாமேதையின் அரும்பெருந்திறன்.

வாழ்க இசை!

(((தொடரின் அடுத்த பகுதி நாளை)))

இசையின் சித்து விளையாட்டு!

வாசகர்களின், வேண்டுகோளுக்கு இணங்க வனமெல்லாம் செண்பகப்பூ இசை தொடர் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

3 நிமிட வாசிப்பு

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

3 நிமிட வாசிப்பு

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

அசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்!

3 நிமிட வாசிப்பு

அசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்!

வெள்ளி 31 ஜூலை 2020