மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

ஏ.ஆர்.ரஹ்மான் எனது தொழில்நுட்பத்தை திருடிவிட்டார்: பாபு கணேஷ்

ஏ.ஆர்.ரஹ்மான் எனது தொழில்நுட்பத்தை திருடிவிட்டார்: பாபு கணேஷ்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தொழில்நுட்பத்தைத் திருடிவிட்டதாகவும், அதன் மூலம் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நடிகரும், இயக்குநருமான பாபு கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

‘கடல்புறா’, ‘நாகலிங்கம்’, ‘தேசிய பறவை’, ‘நடிகை’, ‘நானே வருவேன்’ போன்ற திரைப்படங்களை இயக்கி நடித்தவர் நடிகர் பாபு கணேஷ். இவற்றைத் தாண்டியும் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். காட்சிகளுக்கு ஏற்ப திரையரங்கில் வாசனை வீசும் புதிய முறையை அவர் அறிமுகம் செய்தார். அவரது முயற்சி வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆசிய புக், இந்தியன் புக், யுனிவர்சல் புக் போன்றவற்றிலும் இடம்பெற்று சாதனைகள் படைத்துள்ளது. இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் தற்போது ‘காட்டுப்புறா’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்த நிலையில் திரையரங்கில் நறுமணம் வீசும் அவரது தொழில்நுட்பத்தை வைத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘லே மஸ்க்’ என்ற ஆங்கில படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். ஆனால் இந்த உத்தியை உலகிலேயே முதன்முதலில் தான் பயன்படுத்துவதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாக பாபு கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம், மியூசிக் யூனியன் எனப் பல வழிகளிலும் கடிதம் அனுப்பியும் அவர் பதிலளிக்கவில்லை என்று கூறிய பாபு கணேஷ், ‘என்னுடைய கான்செப்ட்டை அவர் பயன்படுத்தியது எனக்கு பெருமை தான் என்றாலும் அவரால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டு பாபு கணேஷ் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon