மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா!

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா!

பிரபல கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் நேற்று(ஜூலை 16) புதிதாக 4,549 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 1,56,369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

இந்த நிலையில் பிரபல கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறித்து அவர் தனது முகநூல் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். அதில், “ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்றுதான் விரும்பினேன். அதற்குள் எப்படியோ வாட்ஸப் க்ரூப்களில் செய்தி பரவ ஆரம்பித்து நண்பர்கள் பலரும் கவலையுடன் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அதற்காகவே இதை பொதுவில் பகிர்கிறேன்.

எவ்வளவோ கவனமாக இருந்தும் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான்கு நாட்களாக தொடர் காய்ச்சல். சந்தேகப்பட்டு பரிசோதனை செய்துகொண்டதில் பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என என் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் அட்மிட் ஆகியிருக்கிறேன். இந்த நான்கு மாதத்தில் கொரோனா பற்றி எவ்வளவோ எழுதிவிட்டேன். ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன்.

கொரோனா வார்டின் முதல் நாள் அனுபவமே வெகுசிறப்பாக உள்ளது. பாத்ரூமில் வீல்சேர் நுழையவில்லை. ‘இப்படி ஒரு பிரச்சினையை இப்போதுதான் எதிர்கொள்கிறோம்’ என்கிறார்கள். ஒரு தலையணை கேட்டு ஐந்து மணி நேரத்திற்குப்பிறகு இப்போதுதான் கிடைத்தது. ஒரு பேய் பங்களாவின் பேரமைதி. இவ்வளவு வசதியின்மைக்கு நடுவே என்னை நானே கவனித்துக்கொள்ளவேண்டும். கொரோனாவைவிட அதுதான் கொடுமையாக இருக்கிறது. பத்திரமாக இருங்கள். இந்த முறையும் மீண்டு வந்துவிடுவேன் என்றுதான் நம்புகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி அவரது நண்பர்களையும் நலம் விரும்பிகளையும் கலக்கமடைய செய்துள்ளது. விரைவில் அவர் குணம்பெற்று வர வேண்டும் எனப் பலரும் நம்பிக்கை வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர். மேலும், போதிய வசதிகள் இல்லாமல் தன்னைத் தானே கவனித்துக்கொள்ள இயலாமல் தவித்து வரும் அவருடன் உதவியாளர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon