மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

வற்றாத மனிதநேயத்துக்குப் பரிசு: உதவிய பெண்ணுக்கு ‘வீடு’!

வற்றாத மனிதநேயத்துக்குப் பரிசு: உதவிய பெண்ணுக்கு ‘வீடு’!

கேரளாவில் கண்பார்வையற்ற முதியவருக்கு உதவி செய்து அனைவரது மனதிலும் இடம்பிடித்த சுப்ரியாவின் மனிதநேயத்தைப் பாராட்டி வீடு பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கண்பார்வையற்ற முதியவர் ஒருவரைப் பேருந்தில் ஏற்றிவிட்டு உதவி செய்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஓடி வந்து வேகமாக வரும் பேருந்தை நிறுத்தக்கூறி மீண்டும் திரும்பி ஓடி கண்பார்வையற்ற முதியவர் ஒருவரை, அக்கறையுடன் பெண் ஒருவர் அழைத்துக் கொண்டு வருகிறார். தொடர்ந்து அவரை பேருந்தில் ஏற்றிவிட்டு நடந்து நகரும் அவர் அனைவரையும் நெகிழ வைத்துவிட்டார்.

பலருக்கும் முன்னுதாரணமாக மாறிய அந்த வீடியோவில் இருக்கும் பெண் யார் என்பது குறித்து இணையம் வழியாகத் தேடி வந்தனர். அதில் ‘ஜோலி சில்க்ஸ்’ என்னும் துணிக்கடையில் வேலை பார்த்து வரும் சுப்ரியா தான் அவர் என்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மின்னம்பலத்தில் உதவி செய்ய ஓடிய பெண்: மனம் கவர்ந்த மனிதநேயம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

சுப்ரியா உதவி செய்த அந்த வீடியோவைப் பிரபலங்கள் பலரும் பகிர்ந்து தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்தனர்.

ஆலுக்காஸ் நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வரும் சுப்ரியாவுக்கு சமூக வலைதளங்கள் எங்கும் வாழ்த்துக்கள் நிறைந்தது. இந்த நிலையில் அவர் பணியாற்றி வரும் ஆலுக்காஸ் குழுமங்களின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் தனது குடும்பத்துடன் சுப்ரியாவின் வீட்டுக்கே சென்று வாழ்த்து கூறினார். தொடர்ந்து திருச்சூரில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு வந்து தன்னை சந்திக்குமாறும் அவர் கூறி சென்றார்.

அதற்கு ஏற்ப சுப்ரியா அங்கு சென்றபோது, அவரை ஆச்சரியப்படுத்தும் ஒரு செய்தி அவருக்குக் காத்திருந்தது. சுப்ரியாவின் மனிதநேயத்தைப் பாராட்டி புதிய வீடு ஒன்று அவருக்குப் பரிசாக வழங்கப்படும் என ஜாய் ஆலுக்காஸ் அறிவித்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள சுப்ரியா வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். மனிதநேயத்தால் தான் செய்த ஒரு சாதாரண செயலுக்கு கற்பனைக்கு எட்டாத பரிசு கிடைத்ததை நினைத்து சுப்ரியா ஆச்சரியமடைந்தார். உதவி செய்த சுப்ரியாவுக்கும், ஊழியரின் உள்ளத்தைப் பாராட்டிப் பரிசளித்த ஜாய் ஆலுக்காஸுக்கும் அனைவரும் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon