மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

உலகம் இனி கண்முன்: கவனம் ஈர்த்த ஜியோ கிளாஸ்!

உலகம் இனி கண்முன்: கவனம் ஈர்த்த ஜியோ கிளாஸ்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43ஆவது பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ‘கிளாஸ்’ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 43ஆவது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் (ஏஜிஎம்) ஜூலை 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜியோ மீட், ஜியோ மார்ட், ஜியோ கிளாஸ், ஜியோ டிவி பிளஸ் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டன. இதில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ டிவி பிளஸ் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற அனைத்து OTT தளங்களையும் ஒரே லாக்-இனின் கீழ் ஒருங்கிணைப்பதால் இணைய பயன்பாட்டாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த மற்றொரு அம்சம் ஜியோ கிளாஸ் என்னும் ‘ஸ்மார்ட்’ கண்ணாடி. சிறிய கேபிளின் உதவியுடன் இந்த கண்ணாடியை மொபைல் ஃபோனுடன் இணைத்து 3டி தொழில்நுட்பத்துடன் வீடியோ கால்களை செய்யலாம். அதன் மூலம், அழைப்பில் எதிர் முனையில் இருக்கும் நபர் நம் அருகில் அமர்ந்து உரையாற்றுவது போன்ற அனுபவத்தைப் பெற இயலும். மேலும் ஹோலோகிராபிக் வழியாக 3டி விர்ட்சுவல் கிளாஸ் ரூம் மூலமாக கல்வி நிறுவனங்கள் பாடம் நடத்தவும் வசதியாக இருக்கிறது. மேலும் மெய்நிகர் சுற்றுலா வழியாக வீட்டில் இருந்து கொண்டே விரும்பும் இடங்களை எல்லாம் சுற்றிப்பார்க்கவும் இது உதவியாக இருக்கிறது.

கேமரா, சென்சார்கள், எக்ஸ்ஆர் சவுண்ட் சிஸ்டம், 25 செயலிகள் இடம் பெற்றுள்ள இந்த கண்ணாடியின் எடை 75 கிராம். இதன் விலை விவரம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon